ராக்கி மௌண்டன் தியாகராஜ உத்சவம்
மார்ச் 8, 2009 அன்று இரண்டாவது வருடாந்தர ராக்கி மௌண்டன் தியாகராஜ உத்சவம் டென்வரிலுள்ள டக்ளஸ் கண்ட்ரி திடலில் கொண்டாடினர். இதில் 110 இசைக் கலைஞர்களும் 400 ரசிகர்களும் கொலராடோவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பைரவி ராகத்தில் ‘சேதுலாரா', சௌராஷ்ட்ரத்தில் ‘ஸ்ரீ கணபதி நீ' ஆகியவற்றை அடுத்துப் பஞ்சரத்னக் கீர்த்தனைகளுடன் ஆராதனை தொடங்கியது. லால்குடி ஜயராமன் அவர்களின் சிஷ்யையான ப்ரியா ஹரிஹரன், ‘ஸ்வாதி கிரணம்' வி.கே. அருண்குமார், சாயாதேவி ராமாயணம் போன்ற மிகச் சிறந்த வித்வான்கள் உட்பட 15 கலைஞர்கள் பஞ்சரத்னக் கிருதிகளைப் பாடினர். இவர்களுடன் காயத்ரி கிருஷ்ணமூர்த்தி (வீணை), கௌரி நந்தகுமார், மீரா கணேஷ், பிரமோத் குப்பா, மாதங்கி வெங்கட், வாணி ஐயர், விஜயஸ்ரீ வெங்கடேஷ், காஞ்சி மஹாலிங்கம், ராஜா வெங்கட்ராமன், ஜான் தாமஸ் (தப்லா)ஆகியோருடன் மிருதங்கத்தில் ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன், வெங்கட் சுப்ரமணியன், ரவி மஹாலிங்கம் ஆகியோர் இணைந்து இசைத்தனர்.

பின்னர், மூன்றே வயதானவர் தொடங்கிப் பல இளம் கலைஞர்கள் தியாகராஜ கிருதிகளைப் பாடினர். ப்ரியா ஹரிஹரன், காயத்ரி கிருஷ்ணமூர்த்தியோடு ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன் (மிருதங்கம்) ஜான் தாமஸ் (தப்லா) வழங்கிய கல்யாணி ராகத்தில் அமைந்த ‘நிதி சால சுகமா' ஃப்யூஷன் இசை கலகலப்பூட்டியது. இதில் மேற்கத்திய இசையின் அம்சங்களைக் கலந்து சார்லி பார்க்கர் (செல்லோ), ஆண்டனி சால்வோ (மேற்கத்திய வயலின்) ஆகியோர் இனிமை கூட்டினர்.

சுமார் 10 மணி நேரம் தொய்வின்றித் தொடர்ந்து நடந்த இந்த நிகழ்ச்சி, கொலராடோவில் அடுத்த ஆண்டு இரண்டு நாள் நிகழ்ச்சியாக இதை நடத்தலாம் என்கிற நம்பிக்கையை ப்ரியா ஹரிஹரனுக்கு ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. இவர் 'பைரவி இசைப்பள்ளி'யின் நிறுவனரும், இந்த விழாவை ஏற்பாடு செய்தவரும் ஆவார்.

- சார்மிஷ்டா ரமேஷ்

© TamilOnline.com