இந்தியாவின் நகர்ப்புறங்களில் நல்ல வளர்ச்சி இருந்தாலும் குக்கிராமங்களிலும், மலைப் பகுதிகளிலும் மக்கள் இன்னமும் அடிப்படைக் கல்வி வசதி இல்லாமல்தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கல்வி மறுக்கப்படும் சிறுவர், சிறுமியர் கூலி வேலைக்குச் செல்கின்றனர். அவர்களது நிலையை மாற்றி, அவர்களுக்குக் கல்வி தந்து, வாழ்வில் உயர்வடையப் பணிபுரியும் ஓர் அமைப்புதான் ‘ஏகல் வித்யாலயா'. பின்தங்கிய, பள்ளிகளே இல்லாத இடங்களில் ஓராசிரியர் பள்ளிகளை நிறுவி, அம்மக்கள் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியைப் பெற அது தீவிரமாக உழைக்கிறது. இந்தியா முழுவதும் இதுபோன்று பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் இயங்கி வருகின்றன. தொண்டுள்ளம் கொண்டவர்கள் அதில் ஆசிரியர்களாகப் பணி புரிந்து வருகின்றனர்.
இப்பள்ளிகளுக்கான நிதியை நல்லுள்ளம் கொண்டோரிடமிருந்து இருந்து நன்கொடையாகப் பெற்றும், மராத்தான் ஓடியும் அமெரிக்காவாழ் இந்தியர்கள் அனுப்பி வருகின்றனர். இந்த நிதியானது ஒரு பள்ளிக்கு ஒருநாள் செலவு 1 டாலர் என்று கணக்கிடப்பட்டு செலவு செய்யப்படுகிறது.
26/13 மைல் கொண்ட முழு/அரை மராத்தான் போட்டிக்காகப் பல்வேறு பணிகளுக்கிடையில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தொண்டுள்ளம் கொண்டவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களது பணி என்றும் நன்றிக்குரியது. குறிப்பாக சிலிகான் வேலி மக்களின் பலன் எதிர்பாராத உழைப்பு பாராட்டத்தக்கது.
நல்ல இதயமும், உதவும் மனப்பான்மையும் கொண்டவர்கள் ஏகல் வித்யாலயாவிற்கு மேலும் உதவ முன்வர வேண்டும்.
அதிக விவரங்களுக்கு: ஏகல் வித்யாலயா
மின்னஞ்சல்: ekalusa@ekalvidya.org தொலைபேசி: 281-668-5252 |