2009 ஏப்ரல் 25, 26 தேதிகளில் பெர்க்கலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் 5-வது தமிழ் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த ஆண்டின் முக்கிய ஆய்வுகள் ‘பாண்டி நாடு' என்ற பொதுத் தலைப்பில் இருக்கும். இதனைப் பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியத் துறை, தென்கிழக்காசிய மையம், பெர்க்கலி தமிழ்ப் பீடம் ஆகியவை இணைந்து நடத்தும். இதில் பங்கேற்போர் மற்றும் அவர்கள் வழங்கவிருக்கும் கட்டுரைகள் குறித்த ஒரு பார்வை:
பேரா. ஆன் மோனியஸ் (ஹார்வர்டு) ‘மதுரை பற்றி...' என்ற தலைப்பில் வழங்கும் கட்டுரை மதுரைக்காஞ்சி சிலப்பதிகாரத்தில் சைவ மதத்தினருக்கும், சமண மதத்தைச் சார்ந்த மன்னவர்களுக்கும் இருந்த தொடர்புகளை விளக்கும் கதைகளைப் பற்றி ஆய்வு செய்கிறது.
பேரா. அர்ச்சனா வெங்கடேசன் (டேவிஸ்) ‘புளியமரத்தடியில்...' என்ற கட்டுரை திருநெல்வேலி ஜில்லாவின் ஆழ்வார் திருநகரியில் நடக்கும் சங்கீத நாடகம் பற்றி ஆய்வு செய்கிறது. கோவில்கள் எவ்வாறு பலவித பூஜை மரபுகளைப் பாதுக்காத்திருக்கின்றன என்றும், இந்த சங்கீத நாடகம் மதம் பற்றிய கருத்துக்களை எவ்வாறு விளக்குகிறது என்றும் பல கேள்விகளுக்கு விடைதேடுகிறது.
ஜெனிபர் கிளேர் (பெர்க்கலி) ‘அகப்பாடல்களில் மன்னனும், தலைவனும்' என்னும் கட்டுரையில் பத்துப்பாட்டின் தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியனும், பாண்டிக் கோவையின் தலைவனாகிய பாண்டியன் நெடுமாறனும் எவ்வாறு தாமே பாட்டுடைத்தலைவனும், கிளவித்தலைவனுமாக விளங்குகிறார்கள் என்பதையும், சங்ககால இடைக்கால இலக்கியங்களின் ஒற்றுமை, வேற்றுமைகளைப் பற்றியும் ஆய்வு செய்கிறார்.
கீதா பை (பெர்க்கலி) ‘மார்கழி மாதத்தில் காலை பூஜைகளும், திருமணப் பண்பாடும்' என்னும் கட்டுரை, மார்கழி மாதத்தில் சைவர்கள் திருவெம்பாவையையும், வைஷ்ணவர்கள் திருப்பாவையையும் காலையில் இசைப்பது, திருமணமாகாத பெண்கள் தமக்குத் திருமணம் நடக்க வேண்டி இப்பாடல்களைப் பாடுவது போன்ற பல மரபுகளை ஆய்வு செய்கிறது.
பேரா. கிறிஸ்பன் பிரான்பூட் (ஆக்ஸ்போர்டு) ‘பிற்காலப் பாண்டிநாட்டில் மதுரை நாயக்கர்கள்' என்ற கட்டுரையில் ஆந்திரநாட்டின் விஜயநகரத்திலிருந்து வந்து மதுரையை ஆண்ட மன்னர்கள் நாயக்கர்கள் எவ்வாறு மதுரையை ஓர் அழகிய நகரமாக உருவாக்கினார்கள் என்பதை விளக்குகிறார்.
பேரா. இந்திரா பீட்டர்சன் (ஹோலியோக்) ‘திருநெல்வேலி சிற்றிலக்கியங்கள்' என்ற கட்டுரையில் பதினெட்டாம் நூற்றாண்டில் திருநெல்வேலிப் பகுதியில் தாமிரபரணிக் கரையில் ஆண்ட சிற்றரசர்கள் பற்றியும், அங்கே இருந்த புலவர்கள் எழுதிய பல சிற்றிலக்கியங்களையும் பற்றி விளக்குகிறார்.
டாக்டர். கல்யாணசுந்தரம் தமது ‘கணினியும் தமிழும்' என்ற கட்டுரையில் கணினிகளை எவ்வாறு தமிழ் கற்க, கற்பிக்க, ஆய்வு செய்யப் பயன்படுத்த முடியும் என்பதை விளக்குகிறார். (இவரது நேர்காணல் இந்த இதழின் வேறு பக்கத்தில் வெளியாகியுள்ளது).
பேரா. லெஸ்ஸி ஓர் (கன்கார்டியா, கனடா) ‘பாண்டியரின் தனித்தன்மை' என்ற கட்டுரையில் பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தை கல்வெட்டுகளின் உதவியோடு முற்காலப் பாண்டியர்கள் (600-1000), இடைக்காலப் பாண்டியர்கள் (1200-1400), பிற்கால திருநெல்வேலி தென்காசிப் பாண்டியர்கள் என்று மூவகையாகப் பார்க்கிறார்.
பேரா லேன் லிட்டில் (டேவிஸ்) ‘போகர் இலக்கியத்தில் பெறும் பங்கு' என்ற கட்டுரையில் போகர் என்ற சித்தருக்குப் பழனி முருகன் கோவிலில் இருக்கும் தனி இடம், இவரைப் பற்றிய கருத்துக்கள், கதைகள், கவிதைகள், இவர் சென்ற ஊர்கள் பற்றிய கருத்துக்களை ஆய்கிறார்.
பிரன்டா பெக் வழங்கும் ‘கொங்கு நாட்டின் சைவ நாடோடிக்கதைகள்' என்ற கட்டுரை கொங்கு நாட்டில் வழங்கி வந்த அண்ணன்மார்கள் கதைபற்றி ஆய்வு செய்கிறது. இந்தக் கதை சைவத்தைப் பற்றி இருந்தாலும் இதில் ஏன் பெருமாளுக்கு முக்கிய இடம் என்பது பற்றியும், இதில் வரும் மற்ற சைவக் கருத்துக்கள் பற்றியும் ஆராய்கிறது.
பேரா. ஹரி கிருஷ்ணன் (வெஸ்லியன்) ‘சுவரஜதி' என்ற கட்டுரையில் அக்கால (19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) நாட்டியம் ஆடிய தாசிகளின் வாழ்க்கையைப் பற்றி விளக்குகிறார்.
தர்ஷன் சந்திரமோகன் (பெர்க்கலி) வழங்கும் கட்டுரை புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிபிள்ளையும்' என்ற கதை எவ்வாறு இக்கால வாழ்க்கையை விளக்குகிறது என்பதை ஆராய்கிறது.
அகிலன் அருளானந்தன் (பெர்க்கலி பல்கலைக்கழகம்) ‘இலங்கை பேச்சுத்தமிழ்' கட்டுரையில் தமிழ் நாட்டின் தமிழுக்கும், இலங்கைத் தமிழுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை பற்றி ஆராய்கிறார்.
- பேரா. கௌசல்யா ஹார்ட், பெர்க்கலி |