சிகாகோ தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
ஏப்ரல் 19, 2009 அன்று மாலை 4:00 மணிக்கு சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா அரோரா பாலாஜி கோயில் அரங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. மறைந்த நடேசன் பணிக்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. திரு பணிக்கர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் இசை நிகழ்ச்சிகளில் தபேலா வாசித்து வந்தார். இந்த முத்தமிழ் விழாவின் மூலம் திரட்டப்படும் நன்கொடைகள் அனைத்தையும் நடேசன் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கச் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் தன் மகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பும் போது நிகழ்ந்த கார் விபத்தில், முதலில் சுயநினைவிழந்து, பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறைவனடி சேர்ந்தார் நடேசன் பணிக்கர். அவர் அமரரான செய்தி சிகாகோ வாழ் தென்னிந்தியர்களைத் துயரத்தில் ஆழ்த்தியது.

அவரது மனைவி ஆங்கிலம் பயிலாதவர். மகன் தற்போது ஓக்டன் கம்யூனிடி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். மகள் உயர்நிலைப் பள்ளி மாணவி. தந்தையுடன் காரில் இவரும் விபத்துக்கு உள்ளானபோதும் உயிர் தப்பினார். ஆயினும் பேச்சுச் சிகிச்சை, உடலியல் சிகிச்சை ஆகியவற்றுக்குப் பின்னரே அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

நிகழ்ச்சியில் நாட்டியா நடனப் பள்ளி மாணவியரின் ‘ஜெய் ஹோ' பாடல் நடனமும், திருமதி சௌம்யா குமரன் மாணவியரின் நடனமும், சிகாகோ மங்கையரின் எழில் நடனமும் இடம் பெற உள்ளது. வீரமாமுனிவர் பற்றி ஃபாதர் லியோனல் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

சிறப்பு நிகழ்ச்சியாக சிகாகோ நாடகப்ரியா குழுவினரின் ‘மாறிப் போன பார்ட்டி' என்ற நகைச்சுவை நாடகம் இடம்பெறும். நடேசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஷினோ குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதில் ஐங்கரன், பாலன், பவித்ரா ஆனந்த், ரமா ரகுராமன், மீனா பசுபதி ஆகியோர் பாட இருக்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு www.chicagotamilsangam.org
- இரகுராமன், (தலைவர், சிகாகோ தமிழ்ச் சங்கம்)

© TamilOnline.com