பூமியைத் தாண்டி வேறு சில கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பது பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் விவாதிக்கப்பட்டு வரும் விஷயம். பூமிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மூன்று புதிய வகை பாக்டீரியாக்களை பூமியின் மேல்பகுதியில் கண்டுபிடித்துள்ளது இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளிக் கழகம். விண்வெளி ஆராய்ச்சிக்காக 2005ஆம் ஆண்டு, பலூன் ஒன்றை பூமிக்கு மேல் 20 முதல் 41 கி.மீ. வரையிலான தூரத்தில் நிறுத்தியது இது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் பூமிக்குக் கொண்டு வரப்பட்டு பலூனில் ஒட்டியிருந்த பொருட்களைப் பிரித்தெடுத்து, புனே மற்றும் ஹைதராபாதில் உள்ள ஆய்வுக் கூடங்களில் செய்த ஆராய்ச்சியில், இதுவரை பூமியில் அறியப்படாத மூன்று புதிய பாக்டீரியாக்கள் விண்வெளியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மேல்புறத்தில் புற ஊதாக் கதிர்களில் இருந்து தப்பி உயிர் வாழ்வது எந்த உயிருக்கும் சாத்தியமில்லை என்பதால், இந்த பாக்டீரியாக்கள் விண்வெளியின் வேறு பகுதியிலிருந்து வந்தனவா அல்லது ஏதேனும் வேற்றுக்கிரக உயிரினங்களின் பகுதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பாக்டீரியாக்கள் பூமியின் எரிமலைப் பகுதிகளில் வசித்திருக்கலாம், எரிமலை வெடிப்பின் போது துகள்களுடன் சேர்ந்து விண்ணில் கலந்து அந்தச் சூழலுக்கேற்ப வாழப் பழகி கொண்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
அரவிந்த் |