தெரியுமா?
பேரா. ராமநாதனுக்கு டைலெர் பரிசு

சுற்றச்சூழல் சாதனைக்கான மிக உயரிய விருதான டைலெர் பரிசு இந்த ஆண்டு பேராசிரியர் வீரபத்ரன் ராமநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசை பேரா. அவர் ரிச்சர்ட் ஆலியோடு பகிர்ந்துகொள்கிறார். தட்பவெப்ப மாறுதலின் அறிகுறிகளை பூமிச்சுற்றுச்சூழலின் உயர் அடுக்குகளிலும் பனிப்பாளங்களின் ஆழத்திலும் கண்டறிந்ததற்காக இவர்களுக்கு இப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,00,000 டாலர் தொகையும் தங்கப்பதக்கங்களும் இந்தப் பரிசில் அடக்கம். ராமநாதன் அவர்களின் நேர்காணல் தென்றல், ஏப்ரல் 2007 இதழில் வெளியாகியுள்ளது.

ராமாநாதன் ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓஷனோகிராஃபியில் (கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், சான்டியேகோ) சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பத் துறைப் பேராசிரியராகப் பணி செய்கிறார்.

***


வித்யா கோவிந்த் - தாமஸுக்கு யங் ஆர்ட்ஸ் விருது

'நாட்யா டான்ஸ் தியேடர்' குரு ஹேமா ராஜகோபாலன் அவர்களின் சிஷ்யை வித்யா கோவிந்த் - தாமஸ் கலை மேம்பாட்டுக்கான தேசிய அறக்கட்டளையின் ‘யங் ஆர்ட்ஸ்' நிலை I விருதாக 3000 டாலர்களைப் பெற்றுள்ளார். “இந்தப் போட்டியில் கலந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பை நன்றியோடு நினைக்கிறேன். இதற்கு வரும் பலருக்கு பரத நாட்டியம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்களுக்கு இந்தக் கலைவடிவத்தை அறிமுகப்படுத்த நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தாம் செய்வதில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தவர்களால் சூழப்பட்டிருந்தது அற்புத அனுபவம்” என்கிறார் வித்யா.

9 பிரிவுகளின் கீழ் வந்திருந்த 8000 விண்ணப்பதாரர்களில் இருந்து வித்யா நாட்டியப் பிரிவில் தேர்வு பெற்றிருக்கிறார். இதன் மூலம் ‘Presidential Scholar in the Arts' ஆகத் தேர்வுபெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் முன்னர் தமது திறமையைக் காட்டவும் சந்தர்ப்பம் பெறுவார்கள்.

© TamilOnline.com