சுஜாதா ஜகன்னாதன் மற்றும் ஸ்ரீராம்
நிலைகொள்ளாமல் இருக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்த வேறொரு வழியும் இருக்கிறது. சுஜாதா ஜகன்னாதனும் ஸ்ரீராமும் இணைந்து தொடங்கிய பாட்பஜாரில் (www.podbazaar.com) அது கிடைக்கும். அழகாகச் சொல்லப்பட்ட சிறுவர் கதையே அது. ஆனால் இங்கே எல்லா வயதினருக்கும் தேவையான பல பாட்காஸ்ட்டுகளும் உண்டு. (பாட்காஸ்ட்டு களைப் பற்றி அறிய 'தென்றல்' மார்ச் 2006ல் வெளியான 'பாட்காஸ்டிங்' என்ற கட்டுரையைப் பார்க்கவும்.)

சுஜாதா, ஸ்ரீராம் இருவருமே மின்சாரப் சிறுவயது முதலே வானொலி யின் மீது காதல் கொண்டிருந்தாலும் சுஜாதா திருமணம் செய்துகொண்டதென்னவோ ஸ்ரீராமைத் தான். திருமணத்துக்குப் பின் ஆரஞ்ச் கௌண்ட்டிக்கு வந்த சுஜாதா அங்கே ஓர் உள்ளூர்ப் பண்பலை (KUCI 88.9 FM) வானொலியில் வட்டுத் துரப்புனராக (DJ) ஒலிபரப்பத் தொடங்கி அது மிகவும் பிரபலமாயிற்று.

ஸ்ரீராமின் ரத்தத்தில் இசை ஓடியது. வயலின் மேதை பேரா. டி.என். கிருஷ்ணன் அவர்களின் மகன் இவர். இசையும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்தால் கேட்க வேண்டுமா? அந்தச் சமயத்தில்தான் பாட்காஸ்டிங் தொழில்நுட்பம் பரவிக் கொண்டிருந்தது. சுஜாதாவும் ஸ்ரீராமும் சேர்ந்து பாட்பஜாரைத் தொடங்கினார்கள்.

"தெற்காசியர்களுக்காகத் தொடங்கப்பட்ட முதல் பாட்காஸ்ட் சேவை இதுதான். இதில் தமிழ், மலையாளம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, இந்திய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாட்காஸ்ட்டு கள் உள்ளன" என்கிறார் சுஜாதா பெருமை யோடு. எழுபத்தைந்து நாடுகளில் வசிக்கும் தெற்காசியர்கள் இந்தப் பாட்காஸ்ட்டுகளைக் கேட்கிறார்கள்.

வலைப்பூக்களைவிட (Blogs) இரண்டு மடங்கு வேகத்தில் பாட்காஸ்ட் வளர்கிறதாம். ஐபாட் (iPod) ஒன்று கையில் இருந்தால் போதும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான பாட் காஸ்ட்டை எந்த நேரத்திலும் கேட்கலாம். வானொலியைப் போல ஒலிபரப்பும் நேரத்தில்தான் கேட்கமுடியும் என்பதில்லை. இணைய இணைப்பு மற்றும் ஒலிபெருக்கி கொண்ட கணினி வழியேயும் பாட் காஸ்ட்டுகளைக் கேட்க முடியும். இணைய ஜாம்பவான்களான yahoo, iTunes போன்றவைகள் வழியேயும் பாட்பஜாரை அணுகமுடிவதால் வெகுவேகமாகப் பிரபல மாகி வருகிறது.

வானொலிவழியே வருவதை broadcasting என்று சொல்வதைப் போல, பாட்காஸ்ட் வழியே தருவதை narrowcasting என்று குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் பாட் காஸ்ட் செய்யும் வலைதளத்திற்குப் போய் உங்களுக்கு எது வேண்டுமோ அதை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கேட்கலாம்.

விளம்பரம் செய்வதற்கும் இது சிறந்த ஊடகம் என்கிறார் பாட்பஜாரின் தொழில் நுட்ப விஷயங்களைக் கவனித்துக்கொள்ளும் ஸ்ரீராம். இவர்களே தயாரித்துள்ள பாட் காஸ்ட் பிரசுரிக்கும் மென்பொருள் (publishing software) பாட்பஜாரில் வந்து ஒரு நிகழ்ச்சியைக் கேட்பவர் எந்த ஊரில் இருக்கிறார் என்பதை அறிந்து, அந்த ஊரில் இருக்கும் விற்பனையாளரின் பொருளுக்கான விளம்பரத்தைத் தானாகவே தரும். அவர் எதைக் கேட்கிறார் என்பதைப் பொறுத்து (இசை, கதை என்பது போல) அத்துடன் தொடர்புடைய பொருளின் விளம்பரமாக அது இருக்கும். மிக முன்னணித் தொழில்நுட்பமான இது செயற்கை அறிவு (artificial intelligence) வகையைச் சேர்ந்ததாகும்.

புதிதாகப் பாட்காஸ்டிங் சேவையைத் தொடங்க நினைப்பவர்களுக்கும் இந்தத் தொழில்நுட்பத்திற்கான உரிமம் (license) தருகிறது பாட்பஜார்.

"பாட்பஜாரில் யார் வேண்டுமானால் தனக்கு விருப்பமானதைப் பாட்காஸ்ட் செய்யலாம். அதற்கு வேண்டிய எல்லா வழிகாட்டுதலையும் நாங்கள் செய்கிறோம்" என்கிறார் சுஜாதா. "சொல்ல ஏதாவது விஷயம், தணியாத ஆர்வம், கொஞ்சம் உழைப்பு--இவையே அடிப்படைத் தேவை" என்கிறார். பாட்காஸ்ட் செய்ய உங்களுக்கு ஆவல் இருந்தால் publish@podbazaar.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். ஸ்ரீராம் தானே ஒரு வயலின் வித்வானும் கூட. ஒவ்வொரு டிசம்பர் மாதமும் அவரைச் சென்னை சபாக்களில் டி.என். கிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து வாசிப்பதைக் கேட்கலாம். பாட்பஜாரின் தொழில்நுட்ப விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளார் ஸ்ரீராம். சுஜாதா விளம்பரம், சந்தைப்படுத்தல் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்கிறார்.

"சமீபத்தில் நாங்கள் விடியோ பாட்காஸ்ட் தொடங்கியிருக்கிறோம்" என்கிறார் சுஜாதா. பாட்டைக் கேட்பது மட்டுமல்ல, பட்டுப் புடவையும் கையகல நெக்லசும் காதுகளில் மின்னலிடும் வைரத்தோடுமாகப் பாடகர் கச்சேரி செய்வதையே ஜிபௌட்டியில் இருக்கும் ஒரே ஒரு நேயர் கூடப் பார்க்க லாம்! எல்லாம் தொழில்நுட்பம் செய்யும் மாயம்தான்.

தெற்காசியர்களுக்கென்றே சேவை தொடங்கிய முன்னோடிகளான சுஜாதா ஜகன்னாதனும் ஸ்ரீராமும் இன்னும் கவனிக்கப் படத் தக்கவர்களாக ஆவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மதுரபாரதி

© TamilOnline.com