நாராயணன் என்னும் நாணம்: சிறுகதை போட்டி - மூன்றாம் பரிசு
சிகாகோவின் புறநகர்ப் பகுதியில் மூன்றாவது மாடியின் ஒரு பெரிய அறையை தடுப்புகள் போட்டு மூன்று சிறிய அறைகளாகவும், ஒருசின்ன கான்ஃபெரன்ஸ் அறையாகவும் ஆக்கியிருந்தோம். அதுதான் எங்கள் அலுவலகம்.

முன்பக்க, அரைவட்ட மேசையின் பின்னால் இருப்பவள் ஜெனிஃபர். வரவேற்பு, டெலிபோன், கடிதப் போக்குவரத்து, இன்வாய்ஸ், அக்கவுண்டிங் என்று சகல வேலைகளும் செய்பவள். சுதாகராகிய நான் டெக்னிகல் மேனேஜர். சைமன் மார்க்கெட்டிங் மேனேஜர். இன்னும் ஒரு மூன்று அமெரிக்கர்கள் பகுதிநேர ஊழியர்கள். நாங்கள், இங்குள்ள அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சென்னை அலுவலகம் மூலம் தகவல் தொழில்நுட்ப வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம்.

சைமனும், நானும் அலுவலகம் கொடுத்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தோம். சுயமாக ஏனோதானோ என்று சமையல் செய்து கொண்டு, வார விடுமுறை நாட்களில் இந்திய உணவகத்தில் பத்து டாலர் பஃபே சாப்பாட்டை, முப்பது டாலர் மதிப்புக்குச் சாப்பிட்டு வரும் பிரம்மச்சாரிகள்.

சைமன் மார்க்கெட்டிங்கில் ஜித்தன். கொஞ்சம் அதிரடிப் பேர்வழி. வாடிக்கையாளர்களை வளைத்துப் போடுவதில் கில்லாடி. அவனது ஆங்கில மொழித் திறமையும், நகைச்சுவையும் அமெரிக்கப் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். தமிழகத்தின் தென்பகுதி மாவட்டத்தின் ஒரு தொழிலதிபர் வீட்டுக்குக் கூடிய சீக்கிரம் மாப்பிள்ளையாகப் போகிறவன்.

கிருஷ்ணன் சார்தான் எங்களுக்கெல்லாம் முதலாளி. சென்னைத் தலைமை அலுவலகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வியாழன் இரவும் என்னையும், சைமனையும் டெலிபோனில் அழைத்து, அந்த வாரத்தின் அலுவலக நிலவரங்களை அலசவும், அடுத்த வாரத்துக்காகத் திட்டமிடவும் பேசுவார். வேலை வாங்குவதில் கில்லாடி. எங்களுக்குள் அவரை மாமா, கிழவர் என்று சமயத்திற்குத் தகுந்தாற்போல் குறிப்பிட்டுப் பேசுவோம்.

##Caption## போனவாரம் கிருஷ்ணன் சார் பேசும் போது, “சுதாகர், அடுத்தவாரம் ஒரு பையனை அனுப்பறேன். பேரு நாராயணன். டெக்னிகல் விஷயத்தில் கில்லாடி. நம்ப புது கிளையண்ட் க்ரெகரி கேட்டிருந்தான். அவனை உன்னோட தங்க வைச்சுக்கோ. சைமன், நீ நாளைக்கு க்ளையண்ட் கிட்ட நாராயணனைப் பத்தி சொல்லிடு. ரொம்ப நல்ல பையன். அப்புறம், அவன் கொஞ்சம் ஆசாரமான ஆசாமி. பாத்துக்கங்கப்பா” என்று சொல்லி போனை வைத்தார்.

சைமன் “இந்த மாமாவுக்கு வேற வேலை இல்லை. யார்ரா இந்த நாராயணன், உனக்குத் தெரியுமா?” என்றான்.

“யாருக்குத் தெரியும். மாமாவுக்கு வேண்டியவனா இருக்கும்.” என்றேன், சுவாரசியமில்லாமல்.

அடுத்த வாரம் நாராயணன் வந்தான். நானும், சைமனும் தான் ஏர்போர்ட் சென்றிருந்தோம். டைகட்டி, கோட், சூட்டில் நாராயணன் பந்தாவாக வந்து இறங்கியதைப் பார்த்து, பகபக என்று சிரித்தான் சைமன். சம்பிரதாய கைகுலுக்கலுக்குப் பின், “நாராயணன் இந்த கோட், சூட்டோடதான் சென்னைலேந்து வர்றீங்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான் சைமன்.

நாராயணனும் பவ்யமாக “யெஸ் சார்.” என்றான். சைமனுக்கு அதற்கு மேல் பொறுக்கவில்லை. சட்டென்று பேட்டைத் தமிழுக்கு மாறி, “நாணா, எப்படி உன்னால ஏரோப்ளேன்ல இவ்வள்வு டிரெஸ்ஸோடு இருவது மணி நேரம் உக்காந்து வர முடிஞ்சது?”, நான் சைமனைக் கண்களால் சும்மா இரு என்று அதட்டினேன்.

நாணா கொஞ்சமும் விசனப்படாமல் “எங்கம்மாதான் சொன்னா. அமெரிக்கா போறவா எல்லாரும் கோட் சூட் போட்டுண்டு போகணும்னு”.

சைமன், “இங்க இருக்கறவா டவுசர் மட்டும், எப்பவாவது போட்டுப்பா” என்று நாணாவைப் போல குரலை மாற்றிப் பேச, எனக்கு வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ஒரு வழியாக அபார்ட்மெண்ட் வந்தோம். நாணாவிடம், அவனுக்கு என்று ஒரு ரூமைக் கொடுத்து ரெஸ்ட் எடுத்துக் கொள்ளச் சொன்னோம். அவனும் “அம்மாக்கு போன் பண்ணனும், பத்திரமா வந்து சேந்துட்டேன்னு.” என்று என்னிடம் நம்பரைக் கொடுத்தான். செல்போனில் நம்பரை ஒத்திக் கொடுத்தேன்.

“அம்மா, வண்ட்டேன். அரை மணி நேரம் லேட்”

“...”

“எங்க ஆபிஸ்லேந்து வந்து ரெண்டு பேர் வந்து கூட்டிண்டு போனா”

“...”

“ஆமா, தயிர் சாதம் தான் சாப்பிட்டேன்.” என்று இதே ரீதியில் கால் மணி நேரம் பேசிவிட்டு, என்னிடம் செல்போனைத் திருப்பித் தந்து, “தாங்க்ஸ் சார். எப்போ ஆபிஸ் வேலை ஆரம்பிக்கணும்” என்றான்.

“நாணா, நீ போய்த் தூங்கு. மத்ததை நாளைக்குப் பேசிக்கலாம்” என்றேன்.

அவனும் சமர்த்தாக அறைக்குள் சென்று படுத்து விட்டான்.

சைமன், ப்ரிட்ஜிலிருந்து பியரை எடுத்து சிப்பிக்கொண்டே, “கிழட்டு கிருஷ்ணன், எங்கேந்து பிடிச்சாருடா இந்த ஆழ்வாரை? சுதாகர், வகையா மாட்டினோம்டா. நீதான் அவனைக் கட்டி மேய்க்கணும்” என்றான்.

சிரித்துக் கொண்டேன்.
***

அலுவலக வேலைகளில் நாணா பேசும் ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஈமெயில், டாக்குமெண்டேஷன் போன்றவற்றை இலக்கணச் சுத்தமாக எழுதினான். ஜெனிஃபர், அவன் பேசும் ஆங்கிலத்தை நாணா-இங்கிலீஷ் என்று வகைப்படுத்த, சைமன் அதை நான்-இங்கிலீஷ் என்று திருத்தி நகைச்சுவையாக்கினான்.

ஆனால் வேலையில் படு சமர்த்தனாக விளங்கினான் நாணா. பிஎச்பி, அஜாக்ஸ், ஜாவா, சி, என்று அத்தனை கம்ப்யூட்டர் மொழிகளையும் அறிந்து வைத்திருந்து, சமயோசிதமாக அவற்றை உபயோகித்து க்ளையண்ட்டிடம் நல்ல பேர் வாங்கினான். கிருஷ்ண மாமாவுக்கு அவனால் இன்னும் நிறைய ஆர்டர்கள் கிடைத்தன.

வீட்டிற்குள்தான் சைமனுக்கும், நாணாவுக்கும் ஏழாம் பொருத்தமாயிருந்தது. சைமன் ஆம்லெட் போடும்போது, மூக்கைப் பொத்திக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து உட்கார்ந்து கொள்வான் நாணா. தனக்கென தனியாக மளிகைச் சாமான்கள் வாங்கி தன் அறையிலேயே வைத்திருந்தான். தான் ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த குக்கரில்தான் சாதம் வைத்துச் சாப்பிடுவான்.

சைமன் இல்லாத சமயம், என்னிடம், “சுதாகர் சார், இந்த சைமனோட எப்படிக் குப்பை கொட்டறேள். தப்புக் காரியமெல்லாம் சர்வ சாதாரணமாப் பண்றாரே” என்பான்.

ஒருமுறை சனிக்கிழமை அதிகாலையில் “மார்கழித் திங்கள்” என்று திருப்பாவை பாடும் சப்தம் நாணாவின் அறையிலிருந்து கேட்டது. கதவைத் திறந்து பார்த்த எனக்கு, “சுதாகர் சார், சைமன் சார், இன்னிக்கு மார்கழி மாதம் முதல் தேதி. அக்காரவடிசல் ப்ரசாதம் பண்ணியிருக்கேன். குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்கோ” என்றான்.

அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்தினேன். சில விஷயங்களை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விவரித்தேன். எனக்குத் தெரிந்த மேற்கத்திய நடைமுறைகள் போன்றவற்றைப் பற்றி அவனிடம் சொல்லி, யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கினேன். ரோமாபுரியில் ரோமனாக இருக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறினேன். மையமாகத் தலையாட்டி, குறுக்கே கேள்விகள் கேட்டு, சிரத்தையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான்.

ஜெனிஃபரிடம் அவனைப் பற்றிச் சொல்லி, ஓரியண்டேஷன் கொடு என்று கூறினேன்.

நாணா முதலில் தயங்கினான். அவளிடம் பேசுவதற்கு அஞ்சினான். ஜெனிஃபர் அவனைக் கைபிடித்து அழைத்து பயப்படாமல் வா, உன் கற்பு கெட்டுப்போகாது என்று சொல்லிச் சிரித்தாள். ஒரு சகோதர அன்புடன் நாணாவிடம் பழகினாள். அடிக்க அடிக்க அம்மியும் நகர்வது போல, நாணாவின் நாணமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, அவன் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்பட்டது.

சில நாட்கள் சென்றன. ஜெனிஃபர் அதிக அக்கறையுடன் நாணாவிடம் பழகினாள். நாணா அலுவலகம் வரும்போது, “ஓ நாணா! யூ லுக் ஹேண்ட்சம்” என்கிற மாதிரியான வாசகங்களை ஒவ்வொரு நாளும் அவனைப் பார்த்துச் சொன்னாள். பயல் அதில் அம்பேல் ஆகி, ஏதாவது உப்புச் சப்பில்லாத காரணத்துக்கெல்லாம், ஜெனிஃபரிடம் வலியப் போய் நின்றான். வால் மார்ட் கடைகளைத் தவிர்த்து, மார்ஷல் ஃபீல்ட் போன்ற கடைகளில் உடைகள் வாங்கினான்.

விடுமுறை நாட்களில் ஜெனிஃபர் அவனுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தாள். அமெரிக்க சுதந்திர விடுமுறை நாட்களில் நாங்கள் எல்லோரும் விஸ்கான்சின் டெல்ஸ் சென்றிருந்தோம். நாணாவும், ஜெனிஃபரை ஒட்டிக்கொண்டே எல்லா இடங்களுக்கும் வந்தான். எல்லா புகைப்படங்களிலும் அவளுக்கு அருகிலேயே இருந்தான். அவள் மறந்து வைத்துவிட்டுப் போன கைபேசியை பதைபதைப்புடன் தேடிக் கொண்டிருந்த போது, அவன் ஓடிச்சென்று எடுத்து வந்து கொடுத்து, அவளுக்கு ஆச்சர்யங்கள் தந்தான்.

ஒரு நாள் சைமன் “சுதாகர், உன் ஸ்டுடண்ட் அம்பி, அன்னியனா மாறிக்கிட்டிருக்கான்டா” என்றான்.

“என்னடா சொல்ற?” என்றேன்.

“நாணாப் பையன் ஜெனிஃபர் மாமிகிட்ட டகாலடியா விழுந்துட்டான்” என்றான்.

“சைமா, சரியான சைத்தானா இருக்கியே! சும்மா ஏதாவது பிட்டைப் போடாதடா” என்றேன்.

“பாரு, இந்த சைமன் சொன்னா, சாமி சொன்ன மாதிரி. கொஞ்சம் அவனை ஆப்சர்வ் பண்ணிப் பாரு” என்றான் பதிலுக்கு.

“டேய் எவனாவது வெகுளியா கிடைச்சான்னா, வேட்டிக்குள்ள ஓணானை விடாதிங்கடா!” என்றேன்.

இருந்தாலும், சைமன் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்தது.

பிறகு நாணாவை ரகசியமாகக் கண்காணிக்க ஆரம்பித்தேன். அவன் என் மேசை மீது ரிவ்யூவுக்காக வைத்துவிட்டுப் போயிருந்த குறிப்பேட்டின் ஓரங்களில் ஜெனி என்று வெவ்வேறு அலங்கார எழுத்துக்களில் இம்போசிஷன் மாதிரி எழுதியிருந்தான். அவனுடைய கம்ப்யூட்டர் வால் பேப்பரில், ஜெனிபரின் புகைப்படம் வைத்திருந்ததை ஒருநாள் தற்செயலாகக் கவனித்தேன். அவனது மேசை இழுப்பறையில், ஜெனிஃபருக்காக முகப்பூச்சு அலங்கார சாமான்கள் வாங்கி அதன்மேல் அரை குறையாகச் சுற்றப்பட்ட அலங்காரத் தாளில் ஜெநா என்ற பொன் எழுத்துக்கள். அதாவது ஜெனிஃபர், நாணாவின் முதல் எழுத்துக்கள். ஆஃபீஸ் கணக்கில் வாங்கிய நோட்டுப் புத்தகங்களில் காதலைப் பற்றி, அபத்தக் கவிதைகள் கிறுக்கியிருந்தான்.

சனி, ஞாயிறு விடுமுறைகளில் ஜெனிஃபரும், நாணாவும், சிகாகோ டௌன் டவுனில் சுற்றுவதாக சைமன் கூறினான்.

##Caption## இது ஏதாவது அபாயத்தில் முடியப் போகிறதே என்ற கவலையில் ஒரு நாள், நாணாவிடம், இதெல்லாம் வேண்டாம். உன்னுடைய குடும்பப் பின்னணிக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று எவ்வளவோ கூறினேன். அவனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், நான் அனாவசிமாகக் கவலைப்படுவதாக என்னிடம் கூறினான். அவனது ஆங்கிலத்தில் இப்பொழுதெல்லாம் அமெரிக்கத்தனம் வந்து விட்டிருந்தது.

மிகுந்த தயக்கத்துக்குப் பின், நாணா இல்லாத ஒரு மதியவேளையில், ஜெனிஃபரிடம் இதைப்பற்றிக் கேட்டேன். அவள் சிரித்து விட்டு, நாணா ஒரு நல்ல நண்பன் என்றும், அதற்கு மேல் ஒன்றுமில்லை என்றும் கூறினாள். மேலும், தனக்கு ஜெஃப் என்று ஒரு பாய் ஃப்ரெண்ட் இருப்பதாகவும், அவன் இராக்கில் தற்போது போர்முனையில் பணியாற்றுவதாகவும், பணிமுடிந்து வந்த பின் ஒரு நல்ல முகூர்த்தத்தில் ஜெஃபை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினாள்.

கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். நாணாவின் அப்பாவித்தனம் முக்கால்வாசி அவனிடமிருந்து போயிருந்தது. என்னுடைய ஊக்குவிப்பால், செய்யும் வேலையில் அதிக கவனமுடனும், பொறுப்புடனும் ஈடுபட்டான் நாணா. அவனது வேலைத் திறமையால் எங்கள் கம்பெனிக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைத்தன. கம்பெனி மிகவும் நன்றாக வளர்ந்தது.

கிருஷ்ணன் சார் மட்டும் ஊக்கத்தொகை கொடுக்காமல், மற்ற துறைகளில் கம்பெனி நஷ்டம் அடைவதாகக் கூறித் தட்டிக் கழித்தார். சைமன் “இந்தக் கிழட்டுக் கிருஷ்ண மாமாக்கு வைக்கறேன் பார் ஆப்பு” என்று பொருமினான்.

பிறகு சில மாதங்கள் சுவாரசியமின்றிக் கழிந்தன. அலுவலகத்தில் கிருஷ்ணன் சாருடன் ஏற்பட்ட, சிலபல பிரச்சினைகளால் நான் வேறு கம்பெனி, வேறு ஊர் என்று மாறினேன். சைமனும் கொஞ்ச நாட்கள் கழித்து, தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்து கொண்டு, தென்தமிழ் மாவட்டத்தில் மாமனாரது வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டு இந்தியாவிலே தங்கி விட்டான். சில நாட்கள் ஈமெயில் தொடர்பு இருந்தது. பின்பு அதுவும் இல்லை. நாணாவைப் பற்றித்தான் தெரியவில்லை. அவனது ஈமெயில் முகவரியும் வேலை செய்யவில்லை.

அவ்வப்போது அவனைப் பற்றியும், ஜெனிஃபர் பற்றியும் ஞாபக அலைகள் வந்து போகும். நல்ல பையன், இப்போது எப்படி இருக்கிறானோ என்று மனம் அலைக்கழிந்தது.

சில வருடங்களில் நாங்கள் வேலை செய்த பழைய கம்பெனியை பங்கு மோசடி காரணமாக மூடிவிட்டதாக அறிந்தேன். கிருஷ்ணன் சாரும் அதன் காரணமாக சிறிதுகால சிறை வாசத்துக்குப் பின் குற்றமற்றவர் என்று தீர்ப்பாகி, தன் மகளுடன் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக ஒரு நண்பனின் மூலம் அறிந்தேன். காலம் வேகமாக ஓடியது.

ஒருமுறை, ஆம்ஸ்டெர்டாம் ஏர்போர்ட்டில் சிங்கப்பூர் விமானத்திற்காகக் காத்திருந்தேன். நிறைய நேரம் இருந்ததால், நீள் படுக்கைச் சேரில் காலை நீட்டி அமர்ந்து கொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். குறுக்கே, நெடுக்கே பல தரப்பட்ட பயணிகள் போய்க் கொண்டிருந்தார்கள். சற்றுக் கண் அயர்ந்தபோது...

“ஹாய், ஸ்வெடேகர்”, என் பின்னால் குரல் கேட்டது.

திடுக்கிட்டுத் திரும்பி “யெஸ்” என்றேன்.

ஃப்ரெஞ்ச் தாடி, ரிம்லெஸ் கண்ணாடி, தொப்பை சகிதம் ஓர் உருவம். சுத்தமாக யாரென்று எனக்கு அடையாளம் தெரியவில்லை.

“என்னை அடையாளம் தெரிகிறதா?” உச்சரிப்பில் உயர்தர ஐரோப்பிய ஆங்கிலம்.

“சாரி. யார்?” என்றேன் வியப்பு விலகாமல்.

“திஸ் இஸ் நாராயணன், நாணா” என்றான்.

தூக்கிவாரிப்போட்டது.

“ஹலோ நாணா, ஹவ் ஆர் யு!” என்றபடியே, ஆச்சரியத்தில் என் விழிகள் விரிந்தன. சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த இடத்தில் அவனை. இன்னும் உற்று நோக்கியதில் நாணாவின் அந்த அக்காரவடிசல் முகத்தை ஃப்ரெஞ்ச் தாடிக்குள் கண்டேன்.

மேலும் பேசியதில் நாணா, தற்போது ஃப்ரான்சில் ஒரு கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பதாகவும், ஆம்ஸ்டெர்டாமில் ஒரு கான்ஃபரென்ஸுக்கு வந்திருப்பதாகவும் கூறினான்.

பழைய கதைகளைப் பேசினோம். கிருஷ்ணன் சார், சைமன் எல்லோரைப் பற்றியும் பேசினோம். சைமன் தான், கிருஷ்ணன் சாரின் மோசடிகளை மேலிடத்தில் அம்பலப்படுத்தியது என்றும், சைமன் கொஞ்சம் முரட்டு ஆசாமியாக இருந்தாலும், நியாயத்துக்கு அடிபணிபவன் என்றும் சான்றிதழ் கொடுத்தான் நாணா. கிருஷ்ணன் சாரைக் கண்டபடி திட்டினான். சரியான ஏமாற்றுக்கார ஆசாமி என்றான். இது தான் தற்போதைய உலகம், இது புரியாமல், இன்னும் நாணாவின் பழைய வெகுளித்தன்மை அப்படியே இருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.

கடைசியில் ஜெனிஃபரைப் பற்றிப் பேச்சு வந்தது.

“நல்ல பெண். அவளுக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருந்தானே!” என்று நான், ஜெனிஃபரைப் பற்றி ஆரம்பித்தேன்.

“ஆமா சுதாகர். அவன் பேரு ஜெஃப். ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு. ஆனா அவன் இப்போ இல்லை.” என்றான் நாணா.

“என்னாச்சு? வேறு ஒருத்தியுடன் ஓடி விட்டானா? டிவோர்ஸா?” என்றேன்.

“சே, சே... அதெல்லாமில்ல. ஒரு விடுமுறையில இராக்லேந்து வந்து ஜெனியைக் கல்யாணம் பண்ணிண்டான். ஒரு ஆறு மாசம் இருந்திருப்பான். பிறகு, அடுத்த அசைன்மெண்ட்டுக்கு ஜெஃப் ஆப்கான் போனான். அங்க ஒரு தீவிரவாதி, நாலு பேரோட சேர்த்து, இவனையும் கொன்னுட்டான். ஜெஃப் ஈஸ் நோ மோர்!” என்றான்.

”அடடா! ரொம்ப நல்ல பெண். இப்படி ஆகியிருக்க வேண்டாம். ஹ்ம். இப்ப எப்படி இருக்காளோ?” என்றேன். ஜெனிஃப்ரை நினைத்து மனம் வேதனைப்பட்டது.

“ஜெனிஃபர் தானே? ரொம்ப நல்லா இருக்கா. அடிக்கடி அவளைப் பார்ப்பேன்” என்றான்.

அடப்பாவி! இன்னுமா இவனுக்கு இந்த அல்ப ஆசை போகவில்லை? அடிக்கடி பார்ப்பானாமே! அதுவும் கைம்பெண் ஆனவள்! நாணா ஏன் இப்படி ஆகி விட்டான்? சற்றுமுன் கிருஷ்ணன் சாரை அயோக்கியன் என்று அழைத்தவன், தான் செய்வதுமட்டும் எப்படி நியாயம் என்று கற்பித்துக் கொள்கிறான்? அவனை நோக்கி ‘அல்பப் பதரே' என்று மனதிற்குள் திட்டினேன்.

குரலில் தெரித்த கோபத்தை மறைத்துக் கொண்டு, “என்னப்பா சொல்ற? அடிக்கடி அவளைப் பார்ப்பியா?” என்றேன், செயற்கைச் சிரிப்புடன்.

“ஆமா சுதாகர். ஜெனிஃபரை கல்யாணம் பண்ணிண்டுட்டேன். அவள் என் மனைவி” என்றான் நாணா.
***
சேகர்

சிகாகோ புறநகர்ப் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக வசித்து வரும் சேகர் என்கிற சந்திரசேகர் கல்லூரிக் காலம் முதலே கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வமிக்கவர். இவரது கதை, கட்டுரை, இசை விமரிசனங்கள் போன்ற படைப்புகள் பரவலாக வெகுஜனப் பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் வெவ்வேறு புனைபெயர்களில் வெளிவந்துள்ளன.

2004 மே தென்றலில் இவரது நகைச்சுவைக் கதையும், 2008 அக்டோபர் இதழில் ‘பட்டிமன்றம்' ராஜாவின் பேட்டிக் கட்டுரையும் வெளிவந்துள்ளன.

“இந்தப் பரிசு எனக்கு அளவற்ற உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தருகிறது” என்கிறார். தொடர்ந்து பல நல்ல படைப்புகளை உருவாக்கத் தென்றல் தூண்டுகோலாகவும் இருக்கிறது” என்கிறார்.

‘பலகை' என்ற சிகோகோ தமிழ்ச் சங்கத்தின் செய்திப் பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராகவும் உள்ள இவர், “பெப்பரப்பே” என்ற நாடகக்குழு அமைத்து அமெரிக்க நகரங்களில் நாடகங்கள் நடத்தி வருகிறார்.

சேகர், பார்லெட், இல்லினாய்ஸ்

© TamilOnline.com