அர்த்தங்கள் மாறும்: சிறுகதை போட்டி - இரண்டாம் பரிசு
சீமாச்சு சீக்கிரம் எழுந்து விட்டானென்றால் அன்றைக்கு அவனுக்கு வேலை சிக்கியிருக்கிறது என்று அர்த்தம். ஏதோ பெரிய பிஸினஸ் மாட்டியது போல் தாம்தூமென்று குதிப்பான். சட்டையைக் கரிப்பெட்டியில் தேய்ப்பதும், தண்ணீரை வாரி இறைப்பதுமாக ஓரிடத்தில் நிற்க மாட்டான். பெண்டாட்டி வத்சலாவை “வத்சு, வத்சு” என்று நொடிக்கொருதரம் கூப்பிட்டு ஏதேனும் துளைப்பான். வத்சுவோ எதையும் கண்டுகொள்ள மாட்டாள். காலை பத்துமணிக்கு முன்னால் அவளுக்குப் பொழுது விடிவதில்லை. பத்துமணி வாக்கில் தன் பெரிய உடம்பை அசக்கி எழுந்து பாத்ரூமில் நுழைந்தால் ஒருமணி நேரத்திற்குப் பின் சமையலறையில் நுழைவாள். ஏதேனும் பழையது இருந்தால் கரைத்துக் குடித்து விட்டு, ஒருமணி வாக்கில் மீண்டும் உறக்கம். வாழ்க்கையிலேயே ஏதும் அர்த்தத்தைப் பார்க்காதவள், சீமாச்சுவின் குதிப்பில் ஏதும் அர்த்தத்தைப் பார்த்ததில்லை.

வத்சலா, பத்தொன்பது வயதில், ஸ்ரீனிவாசன் என்று நாமகரணம் செய்யப்பட்ட சீமாச்சுவை, பெரிய பிஸினஸ்மேன் என்று தரகர் சொல்ல, கல்யாணம் செய்து கொண்டு ஸ்ரீரங்கத்தில் நுழைந்தவள். சீமாச்சு ஒரு வீட்டுத்தரகர் என்றும் பெரியதாக ஏதும் வருமானமில்லை என்றும் உணர்ந்தவுடன், நகை நட்டை வைத்துக் காலத்தை ஓட்ட ஆரம்பித்தாள். அதுவும் காணாமல் போனவுடன், அண்ணா சாரங்கனின் உதவியால் ஏதோ கொஞ்சம் மாதாந்திர தானியமும், அரிசி, பருப்பும் வரக்கொண்டு ஒருவேளை வயிறாறுகிறது.


##Caption## கல்யாணமாகிப் பதினைந்து வருடத்திற்குப் பின் வயிற்றில் ஒரு புழு பூச்சி உண்டாகாமல், உடம்பு பெருத்து பெரும்பாலான சமயங்களைப் படுக்கையிலேயே கழிக்க ஆரம்பித்தாள். அக்கம் பக்கம் வம்பு கேட்டால், “எங்கே அக்கா, அவருக்கு பிஸினஸ் செய்யவே நேரம் கிடைப்பதில்லை. இதிலே குழந்தை குட்டிகளுக்கு எங்கே நேரம்” என்று பதில் சொல்வாள். நாள்பட நாள்பட அதையும் நிறுத்திக் கொண்டு வீட்டுக்குள்ளே அடைந்து கிடைக்கலானாள். சீமாச்சுவோ நாள் முழுதும் ஆள் பிடிப்பதாகச் சொல்லிக் கொண்டு ஊர் சுற்றுவான். அவன் தெருமுனையில் வருகிறான் என்றால் சில வீட்டுக் கதவுகள் திறக்கப்படும், சில உடனடியாக சாத்தப்படும். ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்தால் லேசில் போக மாட்டான். எதையாவது சாக்குப் போக்குச் சொல்லி டிபன், சாப்பாட்டை முடித்துக் கொண்டு தான் போவான். அதனால் பலர் பயந்து கொண்டு கதவைச் சாத்தி விடுவார்கள். சிலர் சீமாச்சுவால் ஏதேனும் காரியம் ஆக வேண்டி இருந்தால் திறப்பார்கள். ரேஷன் கடை அரிசியிலிருந்து காயலாங் கடையில் எடைக்குப் போடுவதுவரை எதுவானாலும் சீமாச்சு உதவுவான். பதிலுக்கு ஒரு காப்பியோ, டிபனோ தேற்றிக் கொள்வான். வீட்டுத் தரகர் என்று பெயரே தவிர சில சமயங்களில் சில்லறை வியாபாரங்களும் செய்வான்.

அதே மாதிரி சென்ற வாரம் பெரியமணி வீட்டுக்கதவு திறந்திருக்க சீமாச்சு உள்ளே நுழைந்தான். துணி போர்த்தி மூலையில் வைக்கப்பட்டிருந்த மியூசிக் ஸிஸ்டத்தைப் பார்த்தவன், “அண்ணா, உங்களுக்கு எதற்கு இந்த அயிட்டமெல்லாம்? என் ஃபிரெண்டு ஒருத்தன் நல்ல ஸிஸ்டம் இருந்தா சொல்லச் சொன்னான். எட்டாயிரம் ரூபாய் வரை தருவான். அக்காவும் ரொம்பநாளா ஷேத்திராடனம் போகக் கேட்டிண்டிருக்காளே... அதற்கு இது உதவுமே!” என்று சொல்லி, பெரியமணியின் மனதை மாற்றிச் சம்மதிக்க வைத்தவன், அதே சூட்டோடு அடுத்த தெரு மாணிக்கவாசகத்தைப் பத்தாயிரம் ரூபாய்க்கு அந்த ஸிஸ்டத்தை வாங்கச் செய்து, வந்த லாபத்தை வைத்து சில வாரங்கள் ஓட்டினான்.

சீமாச்சுவுக்குக் குழந்தைகள் என்றால் அலர்ஜி. இந்த உலகத்துத் துன்பத்துக்கெல்லாம் குழந்தைகள்தாம் காரணம் என்பது அவன் அபிப்பிராயம். பஸ், ரயிலில் பயணம் செய்துவிட்டு வந்தாலோ, கல்யாணம் கச்சேரிகளுக்குப் பின்னோ “குட்டிப் பிசாசுகள், அழுது தொலைத்துப் பிராணனை எடுக்கும் பிடாரிகள்” என்றெல்லாம் வைது தீர்ப்பான். நண்பர்களோ, உறவினர்களோ அவனைப் பார்த்தால் குழந்தைகளை மறைத்து விடுவார்கள். சிலசமயம் அவன் காதுபடவே, “மலடனுக்கு என்ன தெரியும்! முன்னப் பின்ன பிள்ளை குட்டியப் பெத்து வளர்த்திருந்தா தானே அதன் அருமை, பெருமை புரியும்” என்று முனகுவார்கள். சீமாச்சுவிற்கும் அதில் ஓரளவு உண்மையிருப்பதாகவே தோன்றும்.

தேய்த்த வெள்ளைச் சட்டையும், வெள்ளை வேட்டியுமாக சீமாச்சு வெளியே இறங்கினான். பையில் இருநூறு ரூபாய் பணம் செட்டியார் கொடுத்தது இருந்தது. “ஸ்ரீனிவாசா, நீ சொல்லி வைத்த பார்ட்டி திருச்சி வீட்டுக்கு வர்றதா சொல்லியனுப்பியாச்சு. நீ போய் சுத்தம் பண்ணி, கழுவி தொடச்சி வச்சிட்டு வா!” என்று செட்டியார் சொல்ல, சீமாச்சுவின் முகம் லாட்டரி அடித்தாற் போல் பிரகாசமானது. ரூபாய் இரண்டாயிரமாவது தேறுமே...

பஸ்ஸைப் பிடித்து ரங்காச்சாரி தெருவில் இறங்கி, ராயர் ஓட்டலில் பொங்கல், இட்லியுடன் ஒரு டிகிரி காப்பியையும் ஏற்றிக் கொண்டு, வேட்டியை மடித்துக்கட்டி, துடைப்பம், பக்கெட்டுடன் சீமாச்சு களத்திலிறங்கினான். கிணத்திலிருந்து தண்ணீர் இறைத்து வாசல்படி முதல், பின்கட்டு வரை தேய்த்து அலம்பி, சன்னல்களையும் கதவுகளையும் பாலிஷ் போட்டுத் தலை நிமிரும் போது மணி மதியம் மூன்று. காரியத்தை நன்றாக முடித்த பெருமிதத்துடன் குப்பைகளைக் களைய பின்னுக்குச் செல்லும் போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சின்னப்பசங்கள் கூட்டத்திலிருந்து மூன்று வயது ரங்கன் வீட்டிற்குள் நுழைந்ததையோ, அடுப்புத் திண்டின் கீழ் கிடந்த பழைய கார் பொம்மையுடன் அங்கேயே உட்கார்ந்து கொண்டதையோ, சீமாச்சு கவனித்திருக்க நியாயமில்லை.

பூட்டை ஒன்றுக்கு இரு தடவையாக இழுத்துப் பார்த்துவிட்டு, பஸ்ஸைப் பிடித்தவன், நேராகச் செட்டியாரிடம் சென்று சாவியை ஒப்படைத்து, கமிஷனைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வரும்போது வாசலில் தயாராகக் காத்திருந்தது போலீஸ் ஜீப்.

சீமாச்சு பதறிப் போனான். போலீஸ்காரர் சொன்ன விஷயத்தை அரைகுறையாகக் கிரகித்துக் கொண்டு, வத்சுவின் ஒப்பாரியைத் தாண்டி, அக்கம்பக்கத்தின் கண்களை ஒதுக்கி, ஜீப்பில் ஏறி ஸ்டேஷனுக்கு வந்தான்.

“அறிவிருக்காய்யா உனக்கு, சின்னப் பையனை வீட்டுக்குள்ள வச்சா பூட்டிட்டு வருவ! கண்ணையும், காதையும் அடியிலியா வெச்சிருக்க?” இன்ஸ்பெக்டர் கத்தினார். எதிரில் அரைகுறைச் சட்டையும், லுங்கியுமாக ஒருவன். பக்கத்தில் ஒடிந்து போன உருவமும், கழுத்தில் பழைய மஞ்சள் கயிறுமாய் ஒரு பெண்மணி. அவள் காலுக்கருகில் இரண்டு, மூன்று வயதில் ஒரு சிறுவன் - ரங்கனாக இருக்க வேண்டும். சுற்றுமுற்றும் பார்த்து எந்த ஜெயிலுக்குள் தள்ளப் போகிறாரோ என்று சீமாச்சு நடுங்கிக் கொண்டிருக்க, “எவ்வளவு பணம்ய்யா வெச்சிருக்க?” இன்ஸ்பெக்டர் விசாரித்தார். கையிலிருந்த கமிஷன் பணம் இரண்டாயிரம் கைமாறி லுங்கியிடம் போக, சீமாச்சு மெதுவாகத் தலைசுற்றி வாசல் பெஞ்சில் உட்கார்ந்தான்.

சற்றுநேரம் சென்றிருக்கும். பக்கத்தில் யாரோ தொடுவது போலிருக்க, நிமிர்ந்து பார்த்தால் குழந்தை ரங்கன். கையில் ஒரு ஐஸ் குச்சியுடன் பளிச்சென சிரித்தான். கையை நீட்டி ஐஸ் குச்சியை சீமாச்சுவை நோக்கிக் காட்ட, அவனுக்கு அடிவயிற்றை யாரோ பிசைவது போலிருந்தது. ஸ்டேஷனை விட்டு வெளியேற முற்பட்டான்.

அப்போது லுங்கியிடம் ஒடிசல் பெண்மணி பேசியது காதில் விழுந்தது.

“ஏய்யா, இம்புட்டு பணத்தில அந்தப் புள்ளைக்கு ஒரு சட்டை துணிமணி வாங்கினா கொறஞ்சா போயிருவே...”

“ஏ புள்ள... இந்தப்பாரு, என்னமோ நீ பெத்த புள்ள மாறிக் கொண்டாடுறே! எவளோ உன் சொந்தக்காரி, சாகும்போது உங்கிட்ட தள்ளிட்டுப் போனது தானே. நாளைக்கழிச்சு மாடசாமி கூட்டத்திலே கொண்டு வுட்டா ஐயாயிரம் தேறும். அதைக் கொண்டுக்கிட்டு மெட்ராஸ் பக்கம் போயிற வேண்டியதுதான்”.

“ஐயோ, வாணாம்யா, அவன் புள்ளைய மொடமாக்கி பிச்சை எடுக்க வுட்டுருவான்யா!” கதறினாள் ஒடிசல்.

லுங்கி, பெஞ்சிலிருந்து ரங்கனைத் தரதரவென இழுத்துக் கொண்டு, அவன் டிராயர் அவிழ்வதையோ, ஐஸ் குச்சி தெறித்துக் கீழே விழுந்ததையோ, சட்டை செய்யாமல் தெருவை நோக்கித் தள்ளினான். அழுகை என்ற உணர்வு அற்றுப் போன அந்தச் சிறுவன் மெதுவாக எழுந்து லுங்கி பின்னால் ஓடினான். ஆடிப்போன சீமாச்சு மெதுவாக வீட்டை நோக்கி நடந்தான்.


##Caption## சீமாச்சுவுக்குத் தூக்கம் வரவில்லை. துக்கம் வந்தது. அடித்துக் கொண்டு அழ வேண்டும் போல இருந்தது. பூதாகாரமாய்ப் படுத்துக் கிடந்த வத்சலாவின் தலைமாட்டில் உட்கார்ந்து வீட்டை ஒரு நோட்டம் விட்டான். மனது கனத்தது. கண்ணைத் துடைத்துக் கொண்டு வத்சுவைத் தட்டி எழுப்பினான். பதறியடித்துக் கொண்டு எழுந்தவளிடம் தன் முடிவைச் சொன்னான்.

மறுநாள் காலை சீமாச்சு சீக்கிரம் எழுந்து விட்டான். ஆனால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பெருமாள் கோபுரத்தை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு தெருவில் இறங்கினான். அவன் கூடவே எழுந்த வத்சலா, குளித்து முழுகி, சாமி படத்திற்கு விளக்கேற்றி, நெடுநாளாய் மூடிக் கிடந்த மாமியார் இருந்த உள்ளறையைத் திறந்து சுத்தம் செய்யலானாள்.

முற்பகல் நேரம். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுத் திறந்தாள் வத்சலா. கொட்டும் வேர்வையுடன், மேலும் கீழுமாய் மூச்சு வாங்கிக் கொண்டு சீமாச்சு. அருகே ‘பளிச்' சிரிப்புடன் ரங்கன். நெற்றியில் பெரிய திருமண். வயதுக்கு மீறிய பெரிய சட்டை. வத்சலா அவ்வளவு வேகமாய் சீமாச்சு வந்து பார்த்ததில்லை. ரங்கனை வாரியெடுத்தவள், தனது பெரிய உடல் குலுங்க அழுதாள். வீட்டில் குத்துவிளக்கின் எண்ணெய் மணத்தோடு, சர்க்கரைப் பொங்கல் மணமும் சேர்ந்து வந்தது.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸின் மூன்றாவது வகுப்புப் பெட்டியில், லுங்கி தன் சட்டைப்பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். வத்சலாவிற்கு மாமியார் சீதனமாய்த் தந்த இரண்டு பவுன் வளையல்கள், ரூபாய் பத்தாயிரமாய் மாறி அங்கே உட்கார்ந்திருந்தது. பல காலமாய்ப் பூட்டி வைக்கப்பட்டு யாருக்கும் பிரயோசனமில்லாதிருந்த தங்கம், அன்று சில ஜீவன்களின் வாழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாக்கியிருந்தது.

கடமையே கருமமாய் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் இலக்கை நோக்கி வெகு வேகமாய் விரைந்து கொண்டிருந்தது.
***
மோகன் எஸ்.

"தென்றலுக்கு எழுதுவதென்றாலே எனக்குப் பெரிய சந்தோஷம்” என்கிறார் மோகன். உலகின் மிக உயர்தரத் தமிழ்ப் பத்திரிகைகளில் தென்றலும் ஒன்று என்னும் இவர் ஹூஸ்டன் வாசி. “ஏதோ சிறிது எழுதுவேன், ஆனால் தென்றல் என்னை எழுதுவதைப் பற்றியே எப்போதும் சிந்திக்க வைத்து விட்டது. பணிநிமித்தமான நீண்ட பயணங்களை இந்த அடுத்த கதைக்கான சிந்தனை எளிதாக்கிவிட்டது. தென்றலில் வருபவற்றை ஒரு எழுத்து விடாமல் படித்துவிடுவேன்” என்கிறார்.

பொறியியல் சேவைத் துறையில் பணியாற்றும் இவரது மகள் யேல் பல்கலை சட்டப் பள்ளியில் படிக்கிறார். சிறுகதை மலர் 2007 தேர்வில் இரண்டாமிடம் பெற்ற கதையை எழுதியிருந்த மோகன் இந்தப் போட்டியிலும் அதே இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

மோகன், ஹூஸ்டன், டெக்ஸாஸ்

© TamilOnline.com