சுதிர், ஃபிராங்க்பர்டில் இறங்கி நியூயார்க் செல்லும் விமானத்தில் மாறி அமர்ந்ததும் கண்கள் சொருகின. மனதும் உடலும் வலித்தன. கடந்த மூன்று வாரங்கள் அவன் வாழ்க்கையின் சுனாமி. சேதங்கள் ஏராளம். நான்கைந்து வருட நினைவலைகள் ஒன்றன் பின் ஒன்றாய் மனதில் ஓடத் தொடங்கின.
"நல்ல இடம்பா சுதிர். சிட்டியிலிருந்து பத்து கி.மீ. முப்பது அடியில் நல்ல தண்ணீர். அறுவதுக்கு நாற்பது. என்னுடன் வேலை பார்த்த எஞ்சினியர் மோகன்ராமும் அங்க ஒரு கிரவுண்ட் வாங்கியிருக்கார். இன்னும் நாலஞ்சு வருடத்தில் பிரமாதமா வந்திடும். வீடு கட்டிடலாம்."
அப்பா ஆர்வமாய் தொடர்ந்தார்.
"உன்னால முடியுமானு பாரு. ஒரு கிரவுண்டு பதினேழு லட்சம். ரெஜிஸ்டர் ஆபிஸ் செலவு அது இதுன்னு சேர்த்து ஒரு இருபது லட்சம் ஆகிவிடும்."
அப்பாவின் மனதை அறிந்தவன். ஒரு மாதம் பெஞ்ச்சில் இருந்துவிட்டு அப்போது தான் புதிய வேலை ஒன்றில் சேர்ந்திருந்தான் சுதிர்.
"சரி. ஏற்பாடு பண்ணுங்க. உங்க அக்கவுன்ட்ல இருந்து இரண்டு லட்சம் அட்வான்சா கொடுங்க, மீதியை மூன்று மாசத்துல அனுப்பறேன்."
##Caption## இருபத்தைது வருடங்களாக ஒரே வாடகை வீட்டில் இருந்து தனக்கு என்று எதையும் வைத்து கொள்ளாமல் தனது கம்பெனி வாழ்கையில் சம்பாதித்த மொத்த வருமானத்தையும் மகன் படிப்பு, வளர்ச்சி என்று செலவு பண்ணி அதில் சந்தோஷத்தைக் கண்ட பெற்றோரை என்றுமே மறுத்துப் பேசியதில்லை சுதிர். பெற்றோரின் மகிழ்ச்சி தன் மகிழ்ச்சி. எனவே அப்பாவின் ஆசையை உடனே பூர்த்தி செய்ய ஆரம்பித்தான். தன் சேமிப்பு மற்றும் சில கிரெடிட் கார்டுகளின் 0% கடனும் கைகொடுத்தன.
"நம்ப இடம் பக்கத்துல ஏதோ பெரிய கம்பெனி வரப்போகுதாம். நம்ப வாங்கின பிறகு இருபத்தைந்து லட்சம் ஆகிவிட்டது நிலத்தின் மதிப்பு. நாலைந்து பேர் வீடுகூட கட்ட ஆரம்பிச்சிருக்காங்க" இது அப்பாவின் உற்சாக வீட்டுமனை பற்றிய மாதாந்திர ரிப்போர்ட்.
"சரிப்பா, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். அம்மாவை வேளைக்கு மருந்து சாப்பிடச் சொல்லுங்கள்".
கண்ணயர்வில் இருந்து திடீரென்று விடுபட்ட சுதிர் திரும்பிப் பார்த்தான். பின் வரிசையில் அம்மா ஜன்னல் வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
கணவன், மகன் மட்டுமே வாழ்க்கை என்று பழகிப்போனவள். அவளை உறங்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்தான். சொன்னாலும் அவள் செய்யப் போவதில்லை. அவளாலும் உறங்க முடியாது எனத் தெரிந்து பேசாமல் மீண்டும் கண்ணை மூடினான்.
"நம்மோட பிளாட் வாங்கின மோகன்ராம் வீடு கட்ட ஆரம்பிச்சிட்டார். இரண்டு மாடியாக கட்டப் போறாங்களாம். நீ எப்ப கட்டப் போறேன்னு கேட்டார். பையனைக் கேட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டேன்".
"பேங்க் லோன் ஏதாவது கிடைக்குமா?"
"கிடைக்குமாவது? என்.ஆர்.ஐ. என்றால் போதும் விழுந்தடித்துக் கொடுக்கப் போறான்".
அப்பாவின் நெடுநாளைய வீட்டு ஆசையை நிறைவேற்றவும், அவருடைய ரிட்டையர்மென்ட்டுக்குப் பிறகு அவரை பிசியாக வைத்திருக்கவும் இது உதவும் என்று உடன் சம்மதித்து விட்டான்.
"சரிப்பா, ரெண்டு மூணு பேங்க்ல கேட்டு பார்த்துட்டுச் சொல்லுங்கள்."
அப்பாவும் பில்டிங்க் பிளான் அது இது என்று உற்சாகமாக வேலையை ஆரம்பித்து விட்டார்.
திடுக்கென்று அம்மாவின் நினைவு வந்தது. பின்னால் திரும்பி தண்ணீர் ஏதாச்சும் குடிக்கிறாயா என்று கேட்டான். வேண்டாம் என்று தலையசைத்தாள். இவன் மீண்டும் கண்ணயர்ந்தான்.
நடுவில் அப்பாவிடம் இவன் பேசும்போது அவரது வழக்கமான உற்சாகம் குறைந்திருந்தது.
"என்னாச்சுப்பா? உங்களுக்கு உடம்புக்கு ஏதுமில்லையே? அம்மாக்கு ஏதாச்சும்...”
"அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா, நானும் அம்மாவும் நல்லாத்தான் இருக்கோம். நம்ப வாங்கின பிளாட் இருக்கில்ல..."
"ஆமாம், அதற்கு என்ன இப்போ? நீங்க தான் பில்டிங்க் பிளான் அப்ரூவலுக்கு அனுப்பியிருக்கீங்களே? வந்த பிறகு கட்ட ஆரம்பிச்சிடலாம்".
"அந்த பிளாட்டை விற்கச்சொல்லி இரண்டு முன்று வாரமா இரண்டு பேர் வந்து தொந்தரவு செய்யறாங்க".
"நாம எதுக்கு விற்கப் போறோம்?"
"இப்ப அந்த கிரவுண்டு எழுபத்தைந்து லட்சம் போகுது. இங்க இருக்கிற முக்கியமான மந்திரி ஒருத்தரோட மகன் சுத்தி இருக்கற இடங்களை எல்லாம் வாங்கி வர்றானாம். நம்ம இடத்தையும் கேட்கிறான்".
"நாம எதுக்கு கொடுக்கணும்? நாங்க வீடு கட்டி குடிவரப் போறோம்னு சொல்லுங்க".
"நான் எது சொன்னாலும் காதுல வாங்கிக்க மாட்டேன்றாங்க. போய்த் தொலையுதுன்னு வித்துடலாம். ஆனால் எழுபத்தைந்து கொடுக்க மாட்டாங்களாம் முப்பதுதான் தருவாங்களாம்" என்ற அப்பாவின் குரலில் வருத்தமும் பயமும் தெரிந்தது.
"அவங்களோட நம்பர் கொடுங்க நான் பேசறேன்".
அடுத்த நாளே அப்பா கொடுத்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசினான்.
"யார் பேசறது?"
"என் பெயர் சுதிர். அமெரிக்காவிலிருந்து பேசறேன்...”
##Caption##"ஓ நீயா? கொஞ்சம் இரு. தலைவரே! அந்த அடம்பிடிக்கிற பெரிசு பையன் அமெரிக்காவிலிருந்து பேசறான்".
"சரி, ஸ்பீக்கர்ல போடு".
மறுமுனையில் இருந்த சுதிரிடம் நேராக விஷயத்துக்கு வந்தார் தலைவர்.
"என்ன தம்பி உங்க அப்பா அம்மா இப்படி அடம் பிடிக்கறாங்க? கொஞ்சம் சொல்லி கொடுக்கிற பணத்தை வாங்கிட்டு பத்திரத்துல கையெழுத்து போடச் சொல்லுங்க. எல்லாருக்கும் கொடுத்ததை விட உங்களுக்கு ஐந்து அதிகமாகத்தான் தர்றோம்".
சுதிருக்கு கோபம் தலைக்கு ஏறியது. நாம் ஒன்றும் இவரிடம் இனாம் பெறவில்லை. ஏன் இப்படிப் பேசுகிறார்? இருந்தாலும் பொறுமையாகப் பேசத் தொடங்கினான்.
"சார்! நாங்க அந்த இடத்தை இப்போது விற்பதாக இல்லை. வீடு கட்ட அப்ளை பண்ணியிருக்கோம். அப்படியே விற்பதாக இருந்தாலும், அந்த நிலத்தின் மதிப்பு இப்ப எழுபத்தைந்து லட்சம். நீங்க எப்படி முப்பதுக்கு வாங்கிட முடியும்?”
"தம்பி! நீ வாங்கின விலை எனக்குத் தெரியும். உங்களுக்கு என்ன லாபம் வரணுமோ அதை சேர்த்துக் கொடுத்து தானே வாங்கறோம், அப்புறம் என்ன?"
"முடியாது சார் ! நான் போலீஸ், கேசுன்னு போக வேண்டி வரும். யார் வீட்டுச் சொத்துக்கு யார் விலை நிர்ணயிப்பது?"
"ஆங்க். போலீஸே நாங்கதான... இவன் வந்து..." என்று பின்னாலிருந்து பேசியவனின் குரல் கேட்டது சுதிருக்கு.
"அ... ஆ" என்று சைகை செய்து அவனைத் தடுத்த ‘தலைவர்', "தம்பி, உன்கூட பேசிப் பிரயோஜனம் இல்லை. உங்க அப்பாகிட்ட பேசிக்கங்க" என்று சொல்லி போனைச் சட்டென்று துண்டித்து விட்டார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அப்பாவிடமிருந்து ஒரே ஒரு போன்தான் வந்தது. “அந்த கிரவுண்டு நமக்கு வேண்டாம்பா!” என்று.
அப்பா விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்டுவிட்டு, முப்பது லட்சத்தை வங்கியில் செலுத்திவிட்டுப் படுத்தவர் தான்.
இன்னும் இருபது நிமிடங்களில் நியூயார்க் விமான நிலையத்தை அடைந்து விடுவோம் என்ற அறிவிப்பு கேட்டு விழித்துக் கொண்டான். கடந்த பதினைந்து நாட்களாக நடந்த அப்பாவின் சடங்குகள், ஆறு மாதங்கள் பூட்டிக் கிடக்கப்போகும் வீட்டின் பராமரிப்பு மற்றும் இதர வேலைகள் என்று அவன் உடலும் மனமும் கனத்து வலித்தன.
விமான நிலையத்தில் இமிகிரேஷன் முடிந்து, பெட்டிகளை டிராலியில் தள்ளிக் கொண்டு வந்தபோது தளர்ந்த நடையுடன் வந்துகொண்டிருந்த அம்மாவின் கைப்பை நழுவியது. சற்றே நிறுத்தி பை கீழே விழாமல் பிடித்து அம்மாவிடமிருந்து வாங்கி டிராலியில் வைக்கும் போது எதிரில் இருந்த டிவியில், ”Breaking News-Main Terrorist nabbed in India” என்ற குரல் ஒலித்தது. இந்தியப் போலீஸ் அதிகாரி ஒருவர் கைவிலங்கிடப்பட்ட ஒருவனின் புகைப்படத்தைக் காட்டி, "நகரின் பல இடங்களில் வன்முறைத் தாக்குதல் நடத்திய கும்பலின் தலைவன், பல உயிர்கள் பறிபோகக் காரணமாக இருந்தவன், பல ஆண்டுகளாகத் தேடப்பட்டவன் இன்று கைதானான்" என்று கூறினார்.
அருகில், அந்த பிரஸ் மீட்டில், அப்பா குறிப்பிட்டிருந்த அந்த மந்திரியின் மகன் - சில வாரங்களுக்கு முன் தன்னுடன் தொலைபேசியில் வாதிட்டவன், தன் அப்பாவின் முன் பெருமையோடு நின்று கொண்டிருந்தான்.
"சிலர்தான் அரசாங்கத்திடம் சிக்குவர். சிலர் கடவுளிடம் தான் சிக்குவர்" என்று சொல்லி சுதிருடன் நடந்தாள் அம்மா.
***
ம. சீத்தாராமன்
"தென்றல் போன்ற ஒரு சிறந்த பத்திரிகையின் போட்டியில் முதல் பரிசா, வாவ்! எனக்கு ஒரே த்ரில்லாக, எக்ஸைட்மெண்டாக இருக்கிறது. நம்பவே முடியவில்லை” என்கிறார் சீத்தாராமன். கடந்த ஆறு ஆண்டுகளாக மிச்சிகனில் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
எழுதவேண்டுமென்றாலே அடிமனதில் ஓர் அச்சம். அதைத் தகர்த்துவிட்டது 'தென்றல்' என்று நன்றியோடு கூறும் இவர், தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
”என் கிறுக்கலைப் பொறுமையாகக் கம்ப்யூட்டரில் அடித்துக் கொடுத்த என் மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும். அவருக்கு வேலை போய்விட்டது, தனது வேலை தேடலுக்கு நடுவே இதையும் செய்தார்” என்னும் சீத்தாராமனுக்கு இரண்டு குழந்தைகள்.
ம. சீத்தாராமன், டிராய், மிச்சிகன் |