ஊட்டிக்குப் போலாம் என்று வாண்டுகள் குதித்ததில் திடீர் முடிவு செய்து ஷெவர்லே டவேரா (டவரா அல்ல) காரை வாடகைக்கு எடுத்து மூட்டை முடிச்சுகளோடு கிளம்பிவிட்டோம். ஊட்டியும் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது.
பிளாக் தண்டர் தாண்டியதும் மலைப்பாதை ஆரம்பிக்க இருபுறம் அடர் மரங்கள். மலைத்தொடரில் ஆங்காங்கே வெள்ளிக் கோடுகளாய் அருவிகள். அருமையான சாலை. பரவசமான அனுபவம். வண்டியின் எல்லா ஜன்னல்களின் வழியாகவும் “அங்க பாரு - இங்க பாரு” என்று நகரும் மேகங்களையும், வெள்ளிக்கம்பி அருவிகளையும், சாலையோரத்தின் குரங்குக் கூட்டங்களையும் அவ்வப்போது நாசியைத் தாக்கிய யூகலிப்டஸ் இலைகளின் வாசனையும் நிறையவே பரவசமூட்டின. இருபத்தேழோ முப்பத்துநாலோ ஹேர்பின் பெண்டுகள் என்று அறிவிப்பு போட்டிருக்க குதித்துக்கொண்டிருந்த குழந்தைகளை அவற்றை எண்ணச் சொல்லிவிட்டு பார்வையை வெளியே செலுத்த வாகனம் வளைந்து உயர்ந்து ஏறியது. வழியில் டெலஸ்கோப் வியூ இருந்த இடத்தில் நிறுத்திச் சூடான சோளத்தில் மிளகாய்ப் பொடி, உப்பு (ஸ்ஸ்) தூவித் தின்ன டெலஸ்கோப் நிலையத்திற்கு வெளிச்சுற்றில் கம்பியைப் பிடித்து நின்றுகொண்டு பள்ளத்தாக்கைப் பார்க்கக் கோடாகக் கீழே தண்டவாளம் தெரிந்தது. அப்போது நேரம் 11:30 இருக்கும். “ஊட்டி ட்ரெயின் இந்நேரம் இந்தப் பக்கம் வந்தா எப்படி இருக்கும்” என்று நண்பனிடம் சொல்லி வாய்மூடுவதற்குள் தொலைவில் ரயிலின் ‘கூ' கேட்டது. தலைவழியே புகைந்துகொண்டு கடந்தது ரயில்வண்டி.
##Caption## குன்னூரை அடைந்ததும் முகத்திலறைந்தது யதார்த்தம். பச்சைப் பட்டாடை உடுத்திப் பார்த்திருந்த மலைகளின் இளவரசி நவீன நாகரிகத் தாக்கத்தாலோ என்னவோ சுரிதார், ஜீன்ஸ் என்று மாறி, இப்போது டூ பீஸ் உடைக்கு மாறிவிட்டாள் போலத் தோன்றியது. பச்சை தொலைந்து, நிறைய கட்டடங்கள். நிறைய வாகனங்கள். நிறைய மக்கள். ரியல் எஸ்டேட் எனும் பூதம் மாநிலத்தின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்கவில்லை என்று கண்கூடாகத் தெரிந்தது. ஒருவழியாக ஊட்டிக்குள் நுழைய “அது நடிகர் கார்த்திக் வீடு ஸார்” என்று ஓட்டுனர் காட்டிய அடுக்கு மாடிக் கட்டடத்தைக் கடந்தபோது ஏதாவது ஜன்னல் வழியாக கார்த்திக் பார்க்கிறாரா என்று தேடினேன். ஒரு விடுதியில் நிறுத்தி விசாரித்தபோது “காட்டேஜூக்கு நாலாயிரம் ரூவா ஸார்” என்று சொன்னதைக் கேட்டு விலைவாசி எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று உணரமுடிந்தது. அமெரிக்காவின் புறநகரங்களில் இருக்கும் Extended Stay விடுதியில் (சமையலறை, ஒரு பெட்ரூம், ஒரு வரவேற்பறை) வாடகை ஒரு நாளைக்கு 60லிருந்து 80 டாலருக்குள் கிடைக்கும்.
காட்டேஜ் எடுத்து பெட்டிகளை உள்தள்ளி, குளிரில் உறைந்து போன கட்டுச் சாதத்தைப் பிரித்து வெட்டியெடுத்துச் சாப்பிட்டுவிட்டு அமர்ந்தோம். உறவினர் வீட்டுப் பெண்மணிகள் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் போட்டுக் கம்பளி சுற்றிக்கொண்டு புஸ்புஸ் என்று குளிரில் நடுங்கி மூச்சுவிட, என் ரெண்டு வாண்டுகளும் சாதா உடையில் சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து “கு-ஹ்-ளி-ஹ்-ர-ஹ்-லை-ஹ்-யாடீ” என்று அவர்கள் பற்கள் கடகடக்கக் கேட்டதைப் பார்த்துப் பாவமாக இருந்தது. எனக்கும் ஏனோ அவ்வளவு குளிர் தெரியவில்லை. பாஸ்டன் குளிருடன் இதை ஒப்பிடுவதே தவறு. அன்று ஊட்டியில் பதினைந்தோ என்னவோ செல்ஷியஸ் இருக்க மழையில்லாது அருமையாக இருந்தது.
ஒரு மணி நேரம் கழித்து வெளியே கிளம்பி ஏரிக்குச் சென்றோம். திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் சைக்கிள் பெடலைச் சுற்றிக்கொண்டே படகில் பாட்டுப் பாடுவதைப் பார்த்து முதல் தடவை ஊட்டி வந்த போது ஒரு பெடல் படகை எடுத்து அனாயசமாகப் பெடலைப் போட்டதில் ஐம்பதடி தூரம் செல்வதற்குள் வியர்த்து நாக்குத் தள்ளியது. பக்கத்தில் கடந்து சென்ற படகொன்றிலிருந்து ஒரு பெருசு “ஜிம்ல எக்ஸர்ஸைஸ் பண்ற மாதிரி வேகமா மெதிக்காதீங்க தம்பி. ரொம்ப மெதுவாச் சுத்துங்க. சுத்தாட்டியும் பரவாயில்லை. அப்படியே மொதங்குங்க. வேகமாப் படகோட்டி என்ன செய்யப் போறீங்க“ என்று சிரித்துக்கொண்டே சொன்னதும் தான் உறைத்தது. அதை நினைவுபடுத்திக் கொண்டு, எதற்கு வம்பு என்று பத்து பேர் அமரக்கூடிய தட்டைப் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கிளம்பினோம். இஞ்சினுக்குப் பக்கத்தில் சமையல் வாயு சிலிண்டர்! மற்ற நகரங்களில் சமையல் வாயுவில் டாக்ஸி ஓடினால், ஊட்டியில் படகுகள் இயங்குகின்றன. புகையற்ற படகுகள் பசுமை அழியும் வேகத்தைக் குறைப்பதில் ஒரு சிறு பங்காவது அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
##Caption## படகுச் சவாரி முடிந்து கரையோரப் பூங்காவுக்குச் சென்றோம். உள்ளே மின்சாரத்தில் இயங்கும் குட்டிக்கார்களில் அவரவர்கள் மோதிக்கொண்டிருக்க ஒரத்தில் சில விளையாட்டுச் சாதனங்கள். வெளியே வேகமாகச் சுற்றும் தட்டு வடிவ ராட்டினம் ஒன்று. ஏறி அமர்ந்து கொள்ள நேர் வட்டத்தில் தட்டையாகச் சுற்றாது ஏறி இறங்கி பல கோணங்களில் அசுர வேகத்தில் சுற்றும் அதில் ஏறினால், குடல் வாய்க்கு வந்துவிடும் போலத் தோன்றியதால் “நான் படம் எடுக்கிறேன்” என்று மற்றவர்களை ஏற்றிவிட்டுக் கழன்று கொள்ள, அத்தைமார்கள் இருவரும் கண்களை அழுந்த மூடிக் கொண்டு முனிவர்போல அமர்ந்து கொண்டார்கள். குழந்தைகள் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்துக்கொண்டே சுற்றினார்கள். ஏகப்பட்ட சத்தமெழுப்பிய அதைப் பார்த்து பயமாக இருந்தது. சரியாக ஒரு மாதம் கழித்து இங்கு திரும்பியதும் செய்தித் தாள்களில் வாசித்த செய்தி யொன்று அதிர வைத்தது.
கேரளாவிலிருந்து சுற்றுலா வந்திருந்த மாணவிகள் கூட்டமொன்று அதே ராட்டினத்தில் ஏறியிருக்கிறார்கள். உச்ச வேகத்தில் சுற்றியபோது ஒரு இருக்கை மட்டும் பெயர்ந்து வெளியே எறியப்பட இரு மாணவிகள் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஒரு நிமிடம் உடல் நடுங்கியது.
ஊட்டி மலர்ப் பூங்காவிற்குச் சென்றோம். என்ன அழகு! முன்பு பார்த்ததைவிட பளிங்காகப் பராமரிக்கிறார்கள். மக்கள் கூட்டம் அலை மோதினாலும் அப்பூங்காவின் அழகு எல்லா இரைச்சலையும் அடக்கிவிடுவதாக இருந்தது. காலாற நடந்தோம். என்ன, அவசரத்துக்கு ஒதுங்கக் கழிவறை எதுவும் அருகினில் இல்லை. பூங்காவின் அந்தக் கோடியில் (மலையின் ஏற்றத்தில்) ஏதோ ஒரு மூலையில் இருக்கிறது என்று சொன்னார்கள். ஏறி அதை அடைவதற்குள் “வந்து”விடும் போலத் தோன்றியதாலும், உப்பு நீரில் வளரும் செடி எதுவும் அருகில் கண்ணுக்குத் தட்டுப்படாததாலும், வெளியில் வந்து ஒரு விடுதிக்குள் சென்று பாரமிறக்கினேன். வயதானவர்கள் தான் பாவம். சும்மாவே அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். அந்தக் குளிரில் அவ்வளவு தூரம் ஏறிச்செல்வது மிகவும் கடினம். இதற்கு யாராவது “ஆவன” செய்தால் நலம்!
தொட்டபெட்டா, செவன்ஹில்ஸ் என்று சில இடங்கள் சுற்றினோம். செவன்ஹில்ஸில் பத்துப் பதினைந்து குதிரைகளுடன் ஆட்கள் நின்று “வாங்க ஒரு ரவுண்டு போலாம் ஸார்” என்று அழைக்க, “டாடி, டாடி” என்று குழந்தைகள் குதித்தார்கள். “நூத்தம்பது ஸார். ஃபுல் ரவுண்டு” என்று சொல்லவும் அவர்களைத் தாண்டி நடக்க, அந்தக் குதிரை விட்டை போட்டு முடிக்குமுன் “அம்பது ரூவா கொடுங்க ஸார்” என்று இறங்கினார்கள். நூற்றைம்பது, ஐம்பது பிரச்சினையில்லை. ஆனால் அதை முறையாக நிர்ணயித்து அறிவிப்பு வைத்து வசூலித்தால் நம்பகத்தன்மை கூடி நிறையப் பேர் சவாரிக்கு வருவார்கள் என்பது என் கருத்து. குழந்தைகள் ஏறிப் போக இயற்கையின் அழகில் மௌனமாய் நின்றேன்.
வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன் |