தீபா ராஜகோபால்
மூன்று வயது அருணைச் சாப்பிட வைப்பதற்குள் அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா எல்லோரும் பேசிய வசனம், சொன்ன கதை, ஆடிய நடனம், ஓடிய ஓட்டம் எல்லாவற்றையும் படம்பிடித்தால் ஒரு சீரியல் தயாராகிவிடும். அத்தனை பாடு! விளையாடுவதற்காக எடுத்த பொம்மைகளை வீடெங்கும் இறைப்பான்; விளையாடி முடித்தபின் வீடே ஒரு போர்க்களம் போல இருக்கும். எடுத்துவைக்கச் சொன்னால் அதற்கு மறுபடியும் கலாட்டா. குளிக்க, எண்களையும் எழுத்துக்களையும் கற்றுக் கொள்ள, உடை மாற்ற, வெளியே கிளம்ப... எதற்கெடுத்தாலும் போராட்டம்தான்.

'இதையெல்லாம் மாற்ற ஏதாவது ஒரு மாயாஜாலம் கிடைக்குமா?' ஏங்கிக் கிடந்தார் சுகுணா சுனில்.

கிடைத்தது. இப்போதெல்லாம் அருண் ரொம்பச் சமர்த்துப் பையன். காய்கறிகளை அடம்பிடிக்காமல் சாப்பிடுகிறான். ஆங்கில அகரவரிசை, எண்கள் எல்லாம் அத்துப்படி. அதுமட்டுமா, ஏதாவது வேண்டுமென்றால், 'please' என்று தொடங்கி மரியாதையாகக் கேட்கிறான். அழகாக நன்றி சொல்கிறான். விளையாடி முடித்தால் பொம்மைகள் சரியாகத் தமது இடத்துக்குப் போய் விடுகின்றன!

"எல்லாம் SmartCookie என்ற பெயரிலான DVD-க்கள் செய்த மாயம்" என்கிறார் சுகுணா தயக்கம் இல்லாமல்.

இந்த டிவிடியில் அப்படி என்னதான் இருந்தது? அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் தீபா ராஜகோபாலைச் சந்திக்க வேண்டும்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தோடு அமெரிக்காவுக்கு வந்தார் தீபா ராஜகோபால். இண்டியானா மாநிலப் பல்கலையில் கணிதம் மற்றும் கணினியில் முதுகலை படித்தபின் ஜெனரல் மோட்டார்ஸ், PeopleSoft ஆகியவற்றில் மென்பொருள் துறையில் பணிசெய்தார். ஆனால் குழந்தை பிறந்ததும் இவரது வாழ்க்கை மாறியது. வளரும் குழந்தைக்குச் சரியான பழக்கவழக்கங்கள், நட்பு, பகிர்தல், சேர்ந்து வாழ்தல் ஆகிய பண்புகளைச் சுவையாகத் தரும் விழிமக் காட்சி கிடைக்குமா என்று இந்தியாவுக்குச் சென்றிருந்த போது தேடினார். அதில் ஆரம்ப நிலை எண் மற்றும் எழுத்துக்களும் இருக்க வேண்டும். அவற்றை இசையோடு கலந்து இன்பமாகச் சொல்லவும் வேண்டும். கிடைக்கவில்லை.

சிலர் சோர்ந்து விடுவார்கள். தீபா அப்படிப்பட்டவர் அல்ல. கிடைக்காததைத் தயாரிக்க நாமே முயற்சித்தால் என்ன என்று யோசித்தார். வீட்டில் இருந்த கேம்கார்டரை (Camcorder) எடுத்துக்கொண்டு சுட்டுத் தள்ளினார். அதற்கான அடிப்படை வடிவைத் தானே எழுதி அமைத்தார். குழந்தைகள் பார்க்கும் விழிமக் காட்சியில் சொல்லும் வழிமுறைகளைக் குழந்தைகள் பின்பற்றி நடக்க வேண்டுமென்றால் அவற்றைச் சொல்வதும் நடித்துக் காட்டு வதும் குழந்தைகளாகவேதாம் இருக்க வேண்டும் என்பதை தீபா புரிந்து கொண்டிருந்தார். இப்படித் தன் மகள் காவ்யாவுக்காகத் தயாரித்த DVD நன்றாக அமைந்திருந்தது.

இதைப் பெரிய அளவில் தயாரித்தால் பிற பெற்றோர்களும் வரவேற்பார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள். எனவே திரைக் கதை, வசனம், காட்சிகள் இவற்றைத் திட்டமிட்டுக் கொண்டு, இந்தியாவுக்குச் சென்று அங்கே படப்பிடிப்பு, தொகுப்பு, இசைப் பதிவு என்று எல்லாவற்றையும் செய்தார். அமெரிக்காவில் அவர் எடுத்த பல காட்சிகளும் அதில் பயன்பட்டன. அப்படிப் பிறந்துதான் SmartCookie டிவிடி. இப்போதெல்லாம் தொகுப்பு, இசை இவற்றுக்காக அத்துறை வல்லுநர்களைப் பயன்படுத்திச் செய்கிறார். அதுமட்டுமா, குழந்தைகளுக்கு இந்தியக் கலாசாரம், ரங்கோலி, நடனம் இவற்றை அறிமுகப்படுத்த கோடை முகாம்களும் நடத்துகிறார்.

அருண் தன் பிடிவாதமான வழிகளை மாற்றிக் கொண்டது தீபா ராஜ கோபால் வெளியிட்ட டிவிடிகளைப் பார்த்துத் தான். இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பார்க்க: www.smart-cookie.com

தீபாவைப் பற்றிய இன்னொரு ரகசியத் தைச் சொல்லியே ஆகவேண்டும். அவரது சாதனையைப் பற்றி 'அவள் விகட'னில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். அதில் வந்த தீபாவின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு இயக்குனர் சேரன் தனது 'ஆட்டோ கிரா·ப்' படத்தில் நடிக்கக் கூப்பிட்டாராம். இவர்தான் எனக்குக் குடும்பம்தான் முக்கியம் என்று கூறி நடிக்க மறுத்து விட்டாராம். (பெரியவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவும் தீபாவிடம் விஷயங்கள் உண்டு போல இருக்கிறதே!)

தகவல்: சுகுணா சுனில்

மதுரபாரதி

© TamilOnline.com