முட்டாள்களும் பட்டு வியாபாரியும்

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



ஒரு ஊரில் ஒரு பட்டு வியாபாரி இருந்தான். அவன் பணக்காரன் மட்டுமல்ல; யாருக்கும் எந்தவித உதவியும் செய்யாத கஞ்சனும் கூட. எளிதில் யாரையும் நம்பிவிட மாட்டான். தனக்குக் கீழே புத்திசாலியான வேலைக்காரர்களை வைத்தால் அவர்கள் தன்னை ஏமாற்றி விடுவார்கள் என்று நினைத்த அவன், சில மூடர்களை வேலைக்கு வைத்துக் கொண்டான். உயர்தர பட்டுத் துணிகளை வாங்கி, சந்தைக்குச் சென்று விற்பதுதான் அவனது தொழில். உடன் உதவியாக வேலைக்காரர்களும் வருவார்கள்.

ஒருமுறை மிகவும் உயர்தரமான பட்டுத்துணிகள் சிலவற்றைப் பக்கத்து ஊரிலிருந்த ஜமீன்தார் கேட்டிருந்தார். வியாபாரியும் பல இடங்களில் அலைந்து திரிந்து தங்க இழைகளில் நவரத்னங்கள் பதித்த பட்டுத்துணிகளை வாங்கினான். பின்னர் அவற்றைப் பாதுகாப்பாக ஒரு பெரிய பெட்டியில் வைத்துப் பூட்டினான். தனது குதிரையின் மேல் அந்தப் பெட்டியை வைத்துக்கொண்டு வேலைக்காரர்கள் உடன்வரப் பக்கத்து ஊரை நோக்கிப் புறப்பட்டான்.

நடுவழியில் செல்லும் போது திடீரென மழை வந்துவிட்டது. குதிரையும் கால் வழுக்கிக் கீழே விழுந்துவிட்டது. வியாபாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேலும் அது காட்டுப் பகுதி என்பதால் திருடர் பயம் வேறு. “பக்கத்து ஊருக்குப் போய் வேறு குதிரையும், உதவிக்கு ஆட்களும் அழைத்து வருகிறேன். அதுவரை பெட்டியை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று வேலைக்காரர்களிடம் கூறிவிட்டு அவன் புறப்பட்டுச் சென்றான்.

சற்று நேரத்தில் மழை மிகவும் வலுத்துப் பெய்ய ஆரம்பிக்கவே, பெட்டியும் நனைய ஆரம்பித்தது. வேலைக்காரர்களில் ஒருவன் “அய்யய்யோ பெட்டி நனைகிறதே, முதலாளி வந்தால் திட்டுவாரே” என்றான். மற்றொருவனோ, “ஆமாம், அதை நனையாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னாரே” என்றான். உடனே மற்றொருவன் பூட்டியிருந்த பெட்டியை உடைத்துத் திறந்தான். அதிலுள்ள உயர்ந்த பட்டாடைகளை எடுத்துப் பெட்டி நனையாமல் போர்த்தினான். “பெட்டி இனிமேல் நனையாது. இப்போது திட்டுவாரா சொல்லுங்கள்!” என்றான் பெருமையுடன்.

சற்று நேரத்தில் அங்கு ஒரு திருடர் கூட்டம் வந்தது. இவர்களை விசாரித்தது. பட்டாடைகளை எடுத்து வெளியே மழையில் நனையப் போட்டிருக்கும் இவர்கள் முழு மூடர்கள் என்று அது முடிவு செய்தது.

உடனே திருடர்களின் தலைவன் வேலைக்காரர்களிடம், “நீங்கள் பெட்டியின் மீது இந்தத் துணிகளைப் போர்த்தி இருப்பது வீண். துணி நனைந்துவிட்டால், இந்தப் பெட்டி வீணாகி விடும். அதனால் அந்தத் துணிகளை என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் தரும் தோலாடையைப் போர்த்தினால் பெட்டி நனையவே நனையாது. உங்கள் முதலாளியும் பாராட்டுவார்” என்றான். வேலையாட்களும் அதன்படியே செய்தனர். திருடர்கள் பட்டுத்துணிகளைக் கவர்ந்து கொண்டு அங்கிருந்து சென்றனர்.

சற்று நேரத்தில் வியாபாரி ஒரு புதிய குதிரையுடனும் இரண்டு வேலையாட்களுடனும் அங்கே வந்தான். பெட்டி தோலாடை போர்த்தப்பட்டு அநாதையாகக் கிடந்தது. வேலையாட்களிடம் விசாரித்தான். அவர்கள் பெருமையுடன் நடந்ததைக் கூறவும், கோபம் கொண்ட வியாபாரி அவர்களை அங்கிருந்து அடித்துத் துரத்தினான். “போனது போகட்டும். இனிமேலாவது புத்திசாலியான ஆட்களை வேலைக்கு வைத்துக் கொண்டு முன்னேற்றத்திற்கு உழைப்போம்” என்று முடிவெடுத்தான்.

என்ன குழந்தைகளா, கதை பிடிச்சிருந்ததா? சரி. அடுத்தமாதம் வேறொரு கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com