சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை புத்தகக் கண்காட்சியில் உலவிக் கொண்டிருந்தபோது ஓர் உரையாடல் காதில் விழுந்தது. ‘எந்தக் கடைக்குப் போனாலும் ஒண்ணு திருக்குறள் வச்சிருக்கான். இல்லாட்டி பாரதி கவிதைகள் வச்சிருக்கான்...' இவர் கூறியதில் உறைந்துகிடக்கும் உண்மை என்னவென்றால் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களில் திருக்குறளும் பாரதி கவிதைகளும் அடக்கம் என்பது. பாரதியின் வீச்சு அப்படிப்பட்டது. ‘மண்ணெண்ணய், தீப்பெட்டியிலும் ஸாதாரணமானதாக' தன் எழுத்து பரவும் நாளை பாரதி கனவு கண்டிருக்கிறான். அந்தக் கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய வலுவான சக்தியாக, ஒதுக்கிவிட முடியாத ஓர் இயக்கமாகவே பாரதி உருவாகிவிட்டான் என்றால் அதற்கு எந்தத் தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ காரணமன்று. மக்கள் அவன் படைப்புகளை விரும்புகிறார்கள்.
இந்த நூறாண்டு காலத்தில் அவனுடைய எழுத்துகளின்மேல் அரசாங்கத்தின் தடை இரண்டுமுறை விதிக்கப்பட்டிருந்தது. அவன் உயிரோடு இருந்த காலத்திலேயே விதிக்கப்பட்ட தடை இரண்டாண்டுகள் நீடித்தது. பின்னால் 1928 செப்டம்பர் 11ல் பர்மாவில் விதிக்கப்பட்ட தடையுத்தரவு சென்னையில் அமலுக்கு வந்து, சில ஆண்டுகள் நீடித்தது. அதன் பின்னர் பாரதி எழுத்துகளின் பதிப்புரிமையை 1934 தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஜோஷிங்லால் மேத்தாவுடைய சுராஜ்மல் அண்டு கம்பெனியும், அதைத் தொடர்ந்து சுமார் மூன்றாண்டுகள் ஏவி மெய்யப்பச் செட்டியாரும் வைத்திருந்தனர். இந்தக் காலகட்டத்தில் பாரதி எழுத்துகள் ஒன்றுகூட பதிப்பையே காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அச்சிடப்படவில்லை; மேற்கோள் காட்டவோ, நாடக மேடைகளிலும் திரைப்படங்களிலும் பாடவோ கூட ‘ராயல்டி' தொகை தரவேண்டிய காரணத்தால், மேடைகளில் மேற்கோளாகக் கூட காட்டப்படவில்லை. ஒருசில சிறிய கூட்டங்களில் வேண்டுமானால் இது நடந்திருக்கலாம். பெரிய அளவிலான பொதுக் கூட்டங்களில் இது நடைபெறவில்லை என்பதைப் பதிவுகள் உறுதி செய்கின்றன. ஆக, கடந்த நூறாண்டுகளில் சுமார் 20-21 ஆண்டு காலம் பாரதி எழுத்துகள் பதிப்பையே காணவில்லை. மேற்கோளாக் கூடக் காட்டப்படவில்லை; அரங்குகளில் பாடப்படவும் இல்லை. இருந்தும் பாரதியின் எழுத்துகளுக்கான செல்வாக்கு குறைந்தபாடில்லை. குறையவும் போவதில்லை. ‘வெள்ளத்தை எதிர்த்து ஏறியதாகச்' சொல்லப்படும் தெய்வீக நூல்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் போலவே, பாரதியின் படைப்புகளும் கால வெள்ளைத்தை எதிர்த்து ஏறிய வண்ணமாக இருக்கின்றன.
##Caption## பாரதி கவிதைகள் ஒருபுறம் என்றால், பாரதி இறந்து 90 ஆண்டுகள் முடிவடையும் தருவாயிலும்கூட, இன்னமும் பாரதியின் ‘ஆதார பூர்வமான' வாழ்க்கை வரலாறுகள் வெளிவந்த வண்ணமாக இருக்கின்றன. ‘ஒருவரோடு சமகாலத்தில் வாழ்ந்து, அவருடன் பழகிய ஒருவருக்கே அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதும் தகுதியுண்டு' என்ற பொன்நோக்கு, பொது விதி, பாரதியைக் குறித்த அளவில் மீறப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகின்றன. பலர், பலவிதமான கருத்துகளின் தொகுப்பாகவும், பார்வைகளின் வெளிப்பாடாகவும் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாறும் பாரதியுடையதுதான்; தமிழ்நாட்டிலேயே பலவிதமான தவறான தகவல்களும் பார்வைகளும் நம்பிக்கைகளும் அதீத துதிபாடல்களும் அவசியமற்ற வெறுப்புகளும் மலிந்து கிடக்கும் வாழ்க்கை வரலாறும் பாரதியைக் குறித்தவைதான்.
எதிர்க் கருத்துகளும் முரண் நோக்குகளும் நமக்கு ஏற்புடையவையே. பாரதியை எல்லாக் கோணங்களிலும் பார்ப்பது வாசகர்களுடைய உரிமை. பாரதியை மட்டுமல்ல; திருக்குறளையே கூட அப்படிப்பட்ட எதிரெதிர்க் கருத்துகளுக்கு உள்ளாக்குவதும் வாசகர்களுடைய, ஆய்வாளர்களுடைய உரிமைதான். பாரதியையும் வள்ளுவரையுமே கேள்விக்கு ஆளாக்கும் உரிமை ஆய்வாளர்களுக்கு இருக்குமானால், இந்த ஆய்வாளர்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் உரிமை வாசகர்களுக்கு உண்டு. காலம் கழியக் கழிய, பாரதிக்கும் ஆய்வாளருக்கும் இடையிலுள்ள காலவெளி அதிகரிக்க அதிகரிக்க, ஆய்வாளரின் பொறுப்பு கூடுகிறது. பாரதி வாழ்க்கையின் சில அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஆய்ந்து, தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தும்போது ஆய்வாளருடைய பார்வை கூர்மையாகவும் முழுமையானதாகவும் சார்பற்றதாகவும் இருந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயப் பொறுப்பின் சுமை அதிகரிக்கிறது.
அண்மையில் நண்பர் ஒருவர் ஒரு தலையணை அளவிலான பாரதி ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பொன்றைப் பரிசளித்தார். ‘பாரதி 125 - ஆய்வுக் களஞ்சியம்' என்ற பெயரில் புதுவைப் பல்கலைக்கழக தமிழியற்புல முதன்மையர் திரு. அ. அறிவுநம்பியும் வழக்குரைஞர் திரு. க. இரவியும் பதிப்பாசிரியர்களாகச் செயல்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. பல்கலைக்கழகம் ஒன்றின் பெயரைத் தாங்கியபடி வெளிவந்திருக்கும் இந்தத் தொகுப்பில் மிக அரிய ஆய்வுரைகள் அடங்கியிருக்கும் என்ற நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்கினேன். பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நடத்தி, பலநாட்டு அறிஞர்களுடைய ஆய்வுப் பார்வையை பாரதியின்மேல் செலுத்த வைத்து, இத்தகைய அரிய பணியை மேற்கொண்டிருக்கிறார்களே என்று மனம் வாழ்த்தியது.
ஆனால் பதிப்புரையின் இறுதிப் பகுதியில் ‘கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள கருத்துகளுக்கு அந்த அந்தக் கட்டுரையாளர்களே பொறுப்பாவர். கருத்தரங்கக் குழுவினருக்கு இதில் எந்தவிதத் தொடர்புமில்லை' என்று அழுத்ததந் திருத்தமாகச் சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது சற்று வியப்பாக இருந்தது. இப்படிப்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களின் பின்புலத்துடன் வெளியிடப்படும் பதிப்புகளாயினும், அப்படிப்பட்ட ஆய்வுகளை அணுகும்போது வாசகர்கள் எத்தகைய எச்சரிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது; எப்படியெல்லாம் இத்தகைய ஆய்வுத் தொகுப்புகளில் காணப்படும் கருத்துகளை தங்களுடைய அறிவுத் துலாக்கோலால் எடையிட்டுக் காணவேண்டியிருக்கிறது என்பதற்கான ஓர் ஆரம்ப அறிமுக முயற்சியாகவும், caveat emptor என்று வணிக உலகில் பிரசித்தமாக இருக்கும் ‘வாங்குபவன் எச்சரிக்கையாக இருக்கக் கடவன்' என்ற பொன்மொழி, வாசகர்களுக்கும்--குறிப்பாக இத்தகைய ஆய்வுநூல்களின்மேல் தம்முடைய முழு நம்பிக்கையையும் வைத்துக்கொண்டு படிக்கும் வாசகர்களுக்கும் பொருத்தமாக இருக்கும் ஒன்றுதான் என்ற கருத்தை வலியுறுத்தவுமே இந்த முயற்சியை மேற்கொள்கிறேன்.
##Caption## டாக்டர் வா.செ. குழந்தைசாமியின் மிக நிதானமான, நடுவுநிலை தவறாத மையவுரையுடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தைப் புரட்டப் புரட்ட அதிர்ச்சிகளே காத்திருந்தன. எடுத்துக்காட்டாக ஒரு கட்டுரையை இங்கே சொல்கிறேன். “பாரதி” யார்? என்ற தலைப்பில் திரு தி. அன்பழகன் அவர்கள் செய்துள்ள ஆய்வுக் கட்டுரை. தொடக்கத்தில் பாரதி-பாரதிதாசன் குறித்த சில கருத்துகளைச் சொல்கிறார். பிறகு, ‘பாரதியை ஏன் பார்ப்பனக் கவிஞர் என்று சொல்கிறீர்கள்' என்று கேட்கும் தன்னுடைய நண்பருக்கு விடையாக ‘பாரதியைவிட பாரதிதாசன் சிறப்பாகக் கவிதை படைத்திருந்தாலும் அதற்குப் பாரதிதான் காரணம் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் பாரதியின் தோள்மீது நின்றுகொண்டுதான் பாரதிதாசன் உலகைப் பார்த்துப் பாடினார். அடிமை என்ற சொல்லை அகராதியிலிருந்து நீக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக நின்ற பாரதிதாசன், தன்னை பாரதிக்கு அடிமை என்று அறிவிப்பதில் பூரிப்படைந்தார் என்பதும் எங்களுக்குத் தெரியும். இவையெல்லாம் தெரிந்தும் நாங்கள் பாரதியைப் பார்ப்பனக் கவிஞர் என்று கூறுவதற்குக் காரணம், பாரதிதாசனின் நாத்திக வாடையில்லாத எந்த ஒரு கவிதையையும் கூட பார்ப்பன ஏடுகளும் சொற்பொழிவாளர்களும் மருந்துக்குக்கூட பயன்படுத்தவில்லை. இதற்குப் பதிலடியாகத்தான் நாங்கள் பாரதியாரை பார்ப்பனக் கவிஞர் என்று கூறுகிறோம்' எனக் குறிப்பிட்டேன். அவர் சிரித்துக் கொண்டே ‘கதை இப்படிப் போகிறதா! இப்போது தான் உண்மை புரிகிறது'என்று மனநிறைவு கொண்டார்.' இது கட்டுரையாசிரியரின் கூற்று.
மேற்படி ஆய்வுக் கட்டுரையில் மிக லேசான பகுதிகளுள் ஒன்று இது. ஒரே சூழலில் எழுதப்பட்ட இரண்டு வேறுவேறு கவிதைகளை வேண்டுமானால் ஒப்பிடலாமே தவிர ஒட்டு மொத்தமாக எந்த இரு கவிஞர்களையும் ஒப்பிட முயல்வது என்பதே தவறான போக்கு. தாகூரையும் பாரதியையும் ஒப்பிட முடியாது. ஆனால் வேல்ஸ் இளவரசருக்கு வரேவேற்பு கவிதையையும் ‘ஜன கண மன அதி நாயக' பாடலையும் (அதன் ஐந்து தரவுகளையும் மொத்தமாகச் சேர்த்து) ஒப்பிடலாம். இவ்வளவுதான் செய்யமுடியும். இருந்தபோதிலும் ஒருவரை மற்றவரைக் காட்டிலும் உயர்வாக அவர் குறிப்பிட்டிருப்பது அவர் பார்வையைக் காட்டுகிறது. அதில் நமக்கு வேறுபாடில்லை. அவர் கருத்துப்படி ஒருவர் உயர்வான கவிஞர். மற்றவர் அவ்வளவாக உயர்வற்றவர். இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக சாதிக் காரணங்களை எடுத்துச் சொன்னதையும் நாம் மறுக்கவில்லை. அவர் கருத்துப்படி அது சரியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
கட்டுரை அங்குமிங்குமாகச் சுற்றிச் சுழன்று பாரதி, கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த சம்பவத்தை வந்து தொடுகிறது. அதுவும் இந்தக் கட்டுரையாளர் பாரதி செய்திருப்பதாகத் தான் கருதும் தன்னுடைய முடிவுகளுக்கு ஆதாரமாக எதைச் சொல்கிறார் என்றால் ஒரு சொற்பொழிவை. அதைத்தான் யாரும் ஒத்திட்டுப் பார்த்து உறுதி செய்துகொள்ள முடியாது. எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசியதாக சிலவற்றைக் குறிப்பிடுகிறார் கட்டுரை ஆசிரியர். “பாரதியின் முற்போக்குச் சிந்தனைக்கு முகமூடி போட்டு மறைக்கும் செயலில் சிறுகதை மன்னராக விளங்கும் ஜெயகாந்தன் இறங்கி நமக்கு நல்ல வேடிக்கை காட்டுகிறார். அதற்காக அவரைக் கோமாளி எனக் கூறுவதாகக் கருதிவிடக்கூடாது... புதுச்சேரியில் பாரதி தங்கியிருந்தபோது அங்குள்ள கனகலிங்கம் எனும் ஆதி திராவிடச் சிறுவனுக்கு பாரதி பூணூல் அணிவித்தார். இதற்கு ஜெயகாந்தன், இப்பூணூல் அணிவிக்கும்போது பிராமணர்களுக்குரிய காயத்திரி மந்திரத்தை பாரதி சொல்லாமல் பிரம்மோபதேசம் செய்துவைத்தார்... இது பிராமணர்களுக்கு உரியது அல்ல... இதில் மிகவும் முக்கியமானதாக ஜெயகாந்தன் குறிப்பிடுவது இப்பூணூல் சடங்கைச் செய்ய பாரதிக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என்பதுதான்.”
ஏன் அவ்வாறு தகுதியில்லை என்பதற்கு ஜெயகாந்தன் என்ன காரணம் சொல்கிறார் என்பது குறித்து ஆய்வாளர் எதையும் சொல்லவில்லை. அடுத்ததாக மனுதர்ம சாஸ்திரப்படி கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான விதிமுறைகளை பாரதி இந்தச் சடங்கின்போது கடைப்பிடிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறார். அதாவது அதை அந்த வார்த்தைகளில் சொல்லாமல் “மேற்கண்ட விதிகளும் கறாராகப் பின்பற்றப்பட்டனவா என்பதெல்லாம் கனகலிங்கம் பூணூல் விவகாரத்தில் புதைந்து கிடக்கும் மர்ம முடிச்சுகளாகும்” என்று பூடகமாகச் சொல்லியவாறே அடுத்த திக்கில் பயணிக்கத் தொடங்குகிறார்.
பாரதி கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்தது சரியா தவறா, அப்படி ஒரு அடையாளம் இருந்தால்தான் ஒருவனை உயர்த்த முடியுமா என்பன போன்ற கேள்விகளுக்குள் நாம் புகவில்லை. ஆனால், மேற்படி பத்திகளில் மிகத் தெளிவாக நடத்தப்பட்டிருக்கும் திரிப்பு வேலையை வெளிப்படுத்துவது முக்கியமானதாகும். ஒரு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவரின் பெயரைப் பதிப்பாசிரியராகப் போட்டு ‘பன்னாட்டுக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகள்' என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பு, தவறான முடிபுகளுக்கும், பாரதியைப் பற்றிய உண்மைக்கு மாறான கருத்துகளுக்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதில் நமக்கு அக்கறை உண்டு.
இந்த ஆய்வாளர் அப்படி என்ன விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்கிறார்? அவை எவ்வளவு தூரம் உண்மையானவை, இவற்றை மறுப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உண்டா? அவர் சொல்வனவற்றையும் உண்மை நிலைமையையும் மேலே பார்ப்போம்.
ஹரி கிருஷ்ணன் |