ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை
இந்தியாவின் முக்கியமான திருவிழாக்களுள் ஒன்று கும்பமேளா. மகா சங்கமம் என்று சொல்லப்படும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான அலகாபாத் போன்ற குறிப்பிட்ட புண்ணிய தீர்த்தங்களில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட நாளில் கும்பமேளா கொண்டாடப்படும். எனது குழந்தைப் பருவத்திலேயே என்னை இந்த விழா வசீகரித்துவிட்டது. 1974 மற்றும் 1986ல் நடந்த இரண்டு கும்பமேளாவிலும் நான் ஹரித்வாருக்குச் சென்று நீராடியிருக்கிறேன். அடுத்து மூன்றாவதாகவும் நீராடி ‘ஹாட் ட்ரிக்' சாதனை செய்ய நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஆண்டு ஆக்ஸ்போர்டுக்குச் சென்றிருந்ததால் அது நடக்கவில்லை. ஹரித்வார் அல்லாமல் 1992ல் கும்பகோணத்தில் நடந்த கும்பமேளாவிலும் (மகாமகத் திருவிழா) நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சில கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட அமைப்பில் சேரும் போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வியாழன் (குரு) கும்பராசியில் இருக்கும்போதும், சூரியன் மேஷராசியில் இருக்கும் போதும் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறுகிறது. குரு சிம்ம ராசியிலும், சூரியனும் சந்திரனும் கடக ராசியிலும் சேரும் போது நாசிக்கில் இந்த விழா நடைபெறுகிறது. சூரியன் துலாராசியிலும் குரு விருச்சிக ராசியிலும் அமரும்போது உஜ்ஜயினியில் கும்பமேளா நிகழ்கிறது. சூரியனும் சந்திரனும் மகர ராசியிலும் குரு ரிஷப ராசியிலும் சேரும் போது, அமாவாசை அன்று பிராயாகையில் (அலகாபாத்தில்) கங்கை, யமுனை, சூட்சும நதியான சரஸ்வதி மூன்றும் சங்கமிக்கும் இடத்தில் கும்பமேளா நடைபெறுகிறது.
##Caption## கங்கையும் யமுனையும் பாய்ந்து செல்வதைப் பார்க்க முடிந்தாலும் சரஸ்வதி நதி நம் கண்களுக்குத் தெரியாது. அது பூமிக்கடியில் ஓடுவதாக நம்பப்படுகிறது. காஷ்மீரத்து சாரஸ்வத் பிராமணர்கள், மங்களூர் கெளடசாரஸ்வத் பிராமணர்கள் ஆகியோரின் முன்னோர்கள் சரஸ்வதி நதிக்கரைகளில் வாழ்ந்து வந்ததாக ஐதீகம். சிலர், சரஸ்வதி என்ற நதியே இல்லை என்று கூறுகின்றனர். சிலர், புராதன காலத்தில் சரஸ்வதி நதி இன்றைய ராஜஸ்தான், குஜராத் வழியாக ஓடிப் பின்னர் வறண்டு விட்டதாகச் சொல்கிறார்கள். எத்தனை கருத்துகள் இருந்தாலும், சரஸ்வதி நதி பூமிக்குக் கீழே சூட்சுமமாக ஓடி கங்கை, யமுனையுடன் சங்கமிப்பதாக மக்கள் நம்புகிறார்கள். அப்புனித நன்னாளில் அங்கு நீராடுவது, ஆயிரம் அஸ்வமேத யாகங்களைச் செய்வதற்கும், நூறு வாஜபேய யாகங்களைச் செய்வதற்கும், நூறாயிரம் தடவை பூலோகத்தைச் சுற்றி வருவதற்கும் ஈடானது என்று நம்பப்படுகிறது.
இந்த மாபெரும் திருவிழா போஷ் மாதப் பெளர்ணமியில் நடைபெறுவதுடன், நான்கு உபதிருவிழாக்களையும் கொண்டுள்ளது. முதலாவது மகர சங்கராந்தி (பொங்கல்) அன்று நடக்கிறது. இரண்டாவது, இந்தியப் பஞ்சாங்கத்தின்படி போஷ் மாத அமாவாசையில் நிகழ்கிறது. மூன்றாவது வசந்த பஞ்சமி அன்றும் (வசந்த விழா) கடைசி நீராடல் மகா சிவராத்திரி அன்றும் நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து புனித நீராடுகின்றனர். சிலர் கங்கைக் கரையிலேயே சில மாதங்கள் தங்கித் தவமிருந்து பின் நீராடுகின்றனர். சாதுக்கள் யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் முன் செல்லவும், மல்யுத்த வீரர்கள் பின் தொடர்ந்து வரவும் நகருக்குள் ஊர்வலமாகப் பிரவேசிக்கின்றனர். நிர்வாண சாதுக்கள், அவர்களது அந்தஸ்திற்கும் வகிக்கும் இடத்திற்குத் தக்கவாறும் முக்கியத்துவம் பெற்றனர். குகைகளிலும் கணவாய்களிலும் வாழும் சாதுக்கள்கூட எக்காள வாத்தியங்கள் முழங்க வெளியே வந்து, மக்கள் முன் தோன்றுகின்றனர். இந்த விழா ஐம்பத்து மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் நடக்கிறது.
கும்பமேளாவின் கதை கும்பமேளா நிகழ்ச்சி கடலைக் கடைந்த புராணக்கதையுடன் தொடர்புடையது. கடலின் அடியில் மறைந்திருந்த சாகா மருந்தான அமிர்தத்தை தேவர்களும், அசுரர்களும் அடைய விரும்பினர். கடலைக் கடைந்து அதை எடுக்க முடிவு செய்த அவர்கள், மேரு மலையை மத்தாகவும், ஆதிசேஷனைக் கயிறாகவும் கொண்டனர். தேவர்கள் ஆதிசேஷனின் வால் பாகத்தையும், அசுரர்கள் அதன் தலைப் பாகத்தையும் பிடித்துக்கொண்டு கடலைக் கடைந்தனர்.
லட்சுமி தேவி உள்பட ஒன்பது பொக்கிஷங்கள் ஆழ்கடலிலிருந்து வெளிவந்தன. அதையடுத்துக் கொடிய நஞ்சும் வெளி வந்தது. உலகத்தை அந்த நஞ்சின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, சிவன் அதனை எடுத்து விழுங்கினார். இறுதியாக மஹரிஷி தன்வந்திரி அமுத கலசத்துடன் வெளியே தோன்றினார். அதனைப் பருக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போட்டியும் யுத்தமும் ஏற்பட்டது. இந்த யுத்தத்தின்போது, பன்னிரண்டு தடவை கலசத்திலிருந்த அமுதம் துளித்துளியாக வெவ்வேறு இடங்களில் கீழே சிந்தியது. மீதியும் கீழே சிந்திவிடாமல் இருக்க சூரியன், சந்திரன், வியாழன், சனி ஆகியோர் பாதுகாத்தனர். அவ்வாறு அமிர்தம் சிந்திய பன்னிரண்டு இடங்களில் நான்கு மட்டும் இந்தியாவில் உள்ளன. அதனால் தான் ஹரித்வார், நாசிக், உஜ்ஜயினி, அலகாபாத் ஆகிய நான்கு இடங்களில் மட்டும் கும்பமேளா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அமுத கலசத்தைப் பாதுகாத்த சூரியன், சந்திரன், வியாழன், சனி ஆகிய நான்கு கிரகங்களும் ஓர் அமைப்பில் சேர்ந்திருக்கும் போது கும்பமேளா நடைபெறுகிறது.
தென்னிந்தியாவில், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவிலின் மகாமகக் குளத்திலும் அமுதம் விழுந்ததாக நம்பப்படுகிறது. கும்பகோணம் நகரம் கோவில்களின் நகரமாகும். சக்ரபாணி, சாரங்கபாணி ஆலயம், திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோவில், தாராசுரம் போன்றவை அங்கு முக்கியமானவை. மேலும் சுற்றுப்புறங்களில் நவக்கிரகங்களுக்கான கோவில்களும் அமைந்துள்ளன. அதில் மிகவும் பிரபலமானது, கும்பகோணத்திற்கு முப்பது மைல் கிழக்கே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை |