சாதனைப்பாதையிலே
ஒவ்வொரு பயணமும் ஏதோ ஓர் இடத்தில் தொடங்குகிறது. தொடங்கும்போது சாதாரணமாகக் காணப்பட்டாலும் போகப்போக 'ஓ! நான் நினைத்தபடி அவ்வளவு சாதாரணமானதல்ல என் பயணம். இந்தப் பாதை சாதனைப் பாதை!' என்ற எண்ணம் வரலாம். அல்லது பார்ப்பவர் அப்படிச் சொல்லலாம். அத்தகைய பயணத்தைத் தொடங்கி, உறுதியோடு மேலே சென்று கொண்டிருப்பவர்களில் நால்வரை நாம் இதிலே சந்திக்கலாம்.

நித்யா வெங்கடேஸ்வரன்

இந்தியாவில் நான்கு மாத காலம் நடனப் பயணத்துக்குப் பிறகு மார்ச்சில் அமெரிக்கா திரும்பிய நித்யா வெங்கடேஸ்வரன் இப்போதுதான் கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவி லேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது தலைமுறை இந்திய அமெரிக்கரான நித்யாவுக்கு பரதநாட்டியம்தான் பேச்சு, மூச்சு, உயிர் எல்லாமும். இந்தப் புராதனக் கலை வடிவத்தைத் தனது முழுநேரப் பணியாகவும் கொண்டிருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய கலைவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னையின் டிசம்பர் மாத சங்கீத சீசனினில் பல சபாக்களில் நாட்டியமாடினார் நித்யா. அதிலும் மைலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸில் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பெயரில் மாமேதை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்கு நாட்டியாஞ்சலி வழங்கி முடித்தபோது பலரின் கண்களில் கண்ணீர் ஈரமிட்டிருந்ததாம்.

"எனக்கு எம்.எஸ். அம்மாவின் பிராபல்யம் தெரியும். ஆனால் அவர்மேல் இத்தனை பேருக்குத் தனிப்பட்ட அபிமானம் உண்டு என்பது அப்போதுதான் புரிந்தது. எவ்வளவு மரியாதையோடு அவரைப்பற்றிப் பேசுகிறார்கள்!" என்று வியந்து போகிறார் நித்யா. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசீயக் கலைகள் மையத்திலும் பெங்களூரிலும் அவர் இந்த அஞ்சலி நிகழ்ச்சியை வழங்கினார்.

"அமெரிக்காவின் குளிரூட்டப்பட்ட அரங்கங்களில் ஆடிவிட்டு, இந்தியாவின் வெம்மையான சூழலில் நிகழ்ச்சி வழங்கக் கொஞ்சம் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தாக இருக்கிறது. ஆனால் அங்கே நம்முடன் பணிசெய்யும் இசை, நட்டுவாங்கம் மற்றும் பக்கவாத்தியக் கலைஞர்கள் மிகுந்த தேர்ச்சி உள்ளவர்கள். நமக்குப் பயனுள்ள பல குறிப்புகளை வழங்குகிறார்கள். நிறையக் கற்றுக்கொண்டேன்" என்று சொல்லவும் நித்யா தவறவில்லை.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நித்யா வெங்கடேஸ்வரன் தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்றபோது அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து அசந்து போய்விட்டார். "212 அடிக் கோபுரத்தின் முன்னே நடனம் ஆடியது எனக்குப் பணிவைத் தந்தது. நான் அங்கே சிவ ராத்திரி அன்று சிவபெருமானின் பெருமை யைக் குறிந்த இரண்டு உருப்படிகளைப் பதினைந்தே நிமிடங்களில் வழங்கிய போதும் அது மிகுந்த நிறைவைத் தருவதாக அமைந்தது. பிரஹதீஸ்வரரின் சன்னதியில் நின்றபோது எனக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. ஒரு கனவு நனவானது போலத் தோன்றியது" என்று அதை விவரிக்கிறார்.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் 'நாட்யாஞ்சலி', சென்னை நாட்யாஞ்சலி, சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபாவின் நாட்டிய விழா, கார்த்திக் ·பைன் ஆர்ட்ஸ், ஹம்ஸத்வனியின் NRI விழா, நாத இன்பம் ஆகியவை இவர் பங்கு கொண்ட பிற நிகழ்ச்சிகளாகும்.

தனது நடனத்துக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகத் தமிழ், நட்டுவாங்கம், சம்ஸ்கிருதம் முதலியவற்றைக் கற்றுக் கொள்கிறார். மிகுந்த அன்போடு சென்னை யில் அவருக்கு நட்டுவாங்கம் மற்றும் சம்ஸ்கிருதம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் பணம் வாங்க மறுத்துவிட்டதைச் சொல்லி ஆச்சரியப்படுகிறார். "என் நடனத்தைப் பற்றிய விமர்சனம் செய்தித் தாளில் வந்திருந்தால், ஒருவேளை நான் கவனிக்கத் தவறிவிட்டால் என்ன செய்வது என்று அவர்கள் அதை எடுத்து வைப்பார்கள்" என்று சொல்லி நெகிழ்ந்து போகிறார் நித்யா வெங்கடேஸ்வரன்.

மதுரபாரதி

© TamilOnline.com