அமெரிக்கத் தமிழ்த் திரில்லர் மெய்ப்பொருள்
'தமிழ் ஆங்கிலப் படம்', ‘ஹாலிவுட் தமிழ்த் திரில்லர்' என்பது போன்ற சுய முரணான வார்த்தைகளால் ‘மெய்ப்பொருள்' படத்தை வர்ணிக்கிறார்கள் நேட்டி குமாரும் (Natty Kumar) கிரிஷ் பாலாவும்(Krish Bala). வழக்கமான ஃபார்மூலா தமிழ்ப் படங்களைப் பார்த்து அலுத்துப் போனவர்கள் இவர்கள். ஹாலிவுட் படத்துக்கு இணையான, சேர் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு நகத்தைக் கடிக்க வைக்கும் விறுவிறுப்போடு ஒரு திரில்லரை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தே இவர்கள் ‘மெய்ப்பொருள்' படத்தை எடுத்திருக்கிறார்கள். அதை இயக்கியும் இருக்கிறார்கள்.

நேட்டி என்கிற நடராஜ் குமார் ‘மோகமுள்' படத்தைத் தயாரித்த டி.என். ஜானகிராமனின் மகன். அப்பா கொடுத்த ஊக்கத்தினால் அமெரிக்காவுக்கு வந்தபின் ஃபிலிம் டெக்னாலஜி படித்தவர். தயாரிப்பு இயக்கம் இரண்டிலும் நேட்டியோடு இணைந்து பணியாற்றிய கிரிஷ் பாலா படத்தின் கதாநாயகனாக நடித்துமிருக்கிறார். இருவருமே சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள். அதோடு கிரிஷ் பெர்க்கலியில் படத்தொகுப்பு பயின்றவரும் கூட.

ஆனாலும் மெய்ப்பொருள் படத்தைத் தொகுத்தவர் பல விருதுகளைப் பையில் வைத்திருக்கிற தமிழ் நாட்டுத் தொகுப்பாளர் பி. லெனின். பாலா முதலில் லெனினை எடிட்டிங் செய்துதரக் கேட்டுக் கொண்ட போது ஒப்புக்கொண்டார், ஆனால் ஒரு கண்டிஷன், தனது பெயரைப் போட வேண்டாம் என்பதுதான் அது. அப்படிச் சொன்ன லெனின் படத்தின் ரஷ்ஷைப் பார்த்தபின் என் பெயரைப் போட்டு விடுங்கள் என்று கூறினார். நீங்கள் ஊகித்தது சரிதான், படம் மிக வித்தியாசமானது.

வித்தியாசம், வித்தியாசம் என்றுதான் எல்லா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் தமது அடுத்த படத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். மெய்ப்பொருளில் என்ன வித்தியாசம்?

மென்பொருள் பொறியியலாளர்கள், கம்பெனி நிர்வாகிகள், எஞ்சினியர்கள், ஒரு சமூக சேவை அமைப்பின் தலைவர், ஒரு வழக்கறிஞர், ஒரு சிறுநீரக நிபுணர், ஓர் இல்லத்தரசி, ஒரு வைரஸ் நிபுணர் - இவர்களோடு தொழில்முறை நடிகர்கள் என்று பல வகையானவர்கள் நடித்திருப்பது வித்தியாசம்.

ஓரிடம் பிடித்துப் போனதால் அங்கே படப்பிடிப்பை நடத்தாமல், எந்தக் காட்சிக்கு எந்த இடம் பொருத்தம் என்பதைப் பார்த்து அங்கே சென்று ஷூட் செய்தது வித்தியாசம்.

ஆப்ரிக்கர், சீனர், இந்தியர் என்று பலர் இணைந்து நடித்திருப்பது வித்தியாசம்.

ஜான் மேஸி என்கிற ஹாலிவுட் இசையமைப்பாளர் இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பது வித்தியாசம்.

கிறிஸ்டஃபர் எல்ரிட்ஜ் என்கிற ஹாலிவுட் கேமராமேன் இந்தப் படத்துக்குக் கேமராவைக் கையாண்டிருப்பது வித்தியாசம்.

ஏன், கதையே வித்தியாசம் தான்.

##Caption## சாம் (கிரிஷ் பாலா) ஒரு நியூரோ சர்ஜன். கைநடுங்கினால் நரம்பியல் நிபுணரிடம் வருவார்கள். ஆனால் அவருக்குக் கை நடுங்கக் கூடாது. ஒரு சந்தர்ப்பத்தில் சாம், ராஜன் என்னும் அஸ்ட்ரோபிசிஸிஸ்ட் ஒருவரைச் சந்திக்கிறார். ராஜன் வரப் போவதைக் கூறுவதில் வல்லவர். அதைக் கேட்டு நடுங்குகிறது சாமின் கை!

அழகும் இளமையும் ததும்பும் தேவி (அனுஷா), சாமின் மனைவி. தென்றல் பத்திரிக்கையின் நிருபர். எந்தச் செய்தியானாலும் தான் முதலில் அறிவிக்க வேண்டும் என்று துடிப்பாள். எந்தப் பிரபலத்தையும் தான்தான் முதலில் பேட்டி காண வேண்டும். அப்படி ஒரு துறுதுறுப்பு. அனுஷாவுக்கு ஒரே தொழில்முறைப் போட்டி சஷியிட மிருந்துதான். சில சமயம் அவள் முந்திக் கொண்டு விடுகிறாள். பிரபல நடிகர் தரனைப் பேட்டி காணும் விஷயத்திலும் அப்படித்தான்.

ராஜனின் ஹேஷ்யங்களை நம்பிவிட சாம் ஒன்றும் மூட நம்பிக்கையாளனல்ல. ஆனால்... ஆனால்... ராஜன் சொன்னது ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும்போது சாம் பதறிப் போகிறான். காலம் கை நழுவுகிறது. நடக்கக் கூடாததெல்லாம் நடக்கிறது.

என்ன செய்வதென்று தெரியாத சாம், தனது நெருங்கிய நண்பன் விஸ்வாவின் உதவியை நாடுகிறான். விஸ்வா நெருங்கியவன்தான், ஆனால் சில சமயம் சாத்தானுக்கும் சாட்சி கூறுவான்.

எது கற்பனை? எது நிஜம்? சாம் இவ்விரண்டின் புகைமூட்டத்தில் சிக்கித் திணறுகிறான்.

இனம் பிரித்துக் காண முடியாத குழப்பத்தில் தேவியிடமிருந்தே விலகிப் போகிறான். அவனது ஒவ்வொரு முடிவும் வாழ்க்கையை பெரிதும் பாதிப்பதாக இருக்கிறது.

எதிரி யார்? அழகுச் சிலையாக நிற்கும் மனைவி தேவியா? நம்பிக்கைத் துரோகம் செய்வதாகத் தோன்றுகிற நண்பர்களா? தன்னை வாட்டியெடுக்கும் சந்தேகங்கள் தானா?

காலம் கடப்பதற்கு முன்னால் மெய்ப்பொருளைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சாம். திகில் மிகுந்த ஒவ்வொரு திருப்பத்திலும் உண்மை எங்கு ஒளிந்திருக்கிறது என்று சாமுடன் சேர்ந்து நாமும் மெய்ப்பொருளைத் தேடத் தொடங்குகிறோம்.

ஏப்ரல் 24, 2009 அன்று திரையில் உண்மை விளங்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

“உண்மையில் நடந்தது என்ன என்று தெரிந்துகொள்ள எனக்கே ஆர்வமாக இருக்கிறது” என்கிறார் டாக்டர் தீபா (கெய்சர் பெர்மனன்டேவில் சிறுநீரக நிபுணர்). தான் நடித்த சில பகுதிகள் ‘என்ன நடக்கிறது?' என்று அறியும் ஆவலைத் தூண்டி விட்டதாம். இவரது மகளும் நடித்திருப்பதால் மேலும் சில பகுதிகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும், “படம் பயங்கர சஸ்பென்ஸ்தான், எப்போது தியேட்டரில் பார்க்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் தீபா.

கதாநாயகி தேவியின் தந்தையாக வருபவர் முரளி. ‘சங்கரா கண் அறக்கட்டளை'யின் தலைவர் என்ற முறையில் முன்னரே நன்கறியப்பட்ட இவர் பாடகராகப் பல மேடைகள் ஏறியதுண்டு. சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் பிரபலமான ‘பல்லவி' குழுவில் பாடுகிறார். ஆனால் நடிப்பு? இதுதான் முதல்முறை.

“அந்த இளைஞர்களின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது” என்கிறார் முரளி. அவருடைய தந்தையார் ‘ராமகிருஷ்ணா கலை மன்றம்' என்று வைத்து நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஒரு நாடகத்தில் வில்லி காந்திமதி அவரைச் சுட்டுவிட்டார். நான் சின்னப் பையன். பயந்து போய் கிரீன்ரூமுக்கு ஓடினேன். அங்கே போய் அப்பாவுக்கு ஆபத்து எதுவுமில்லை என்று உறுதி செய்துகொண்டேன்” என்கிறார் முரளி.

“தேவிக்கு அப்பாவாக நடித்தேன். என் மனைவி கலா படத்திலும் எனக்கு மனைவி. அவள் இன்னும் இயல்பான நடிகை. தேவியாக நடித்த அனுஷா ரொம்ப நட்போடு இருந்தார்” என்று சொல்லும் முரளியிடம் மெய்ப்பொருளைப் பற்றிக் கேட்டோம். “நான் நடித்த காட்சிகளை வைத்து ஏதோ சஸ்பென்ஸ் என்று புரிந்தது. ஆனால் நிஜமாகவே என்ன நடக்கிறது என்று அறிய உங்களைப் போலவே நானும் ஆர்வமாகத் தான் இருக்கிறேன்” என்கிறார்.

முரளி படத்தின் டிரெய்லரைப் பார்த்திருக்கிறார். (நீங்களும் இங்கே அதைப் பார்க்கலாம்: YouTube) "நச்சுன்னு இருக்கு டிரெய்லர். அதப் பாத்தப்புறம் படம் பார்க்கிற ஆசை அதிகமாய்டிச்சு” என்கிறார் முரளி.

தமிழ் தெரியாத இசையமைப்பாளர் ஜான் மேசியின் பின்னணி இசை படத்தின் ஒரு முக்கிய அம்சம். மேசி மட்டுமல்ல, சினிமாட்டோகிராபர் எல்ரிட்ஜுக்கும் தமிழ் தெரியாது. அதனால் என்ன, சினிமாவே ஒரு தனி பாஷைதானே. அந்த மொழியைச் செம்மையாக வழங்குவதில் இவர்கள் நிபுணர்கள். இவர்கள் கைவண்ணத்தில் படம் முழுவதும் ‘திக் திக்'.

கதாநாயகி தேவி ‘தென்றல்' நிருபர் என்பதால் படத்தின் பல இடங்களில் தென்றல் இதழைப் பார்க்கமுடியும். அமெரிக்காவின் முழுமையான தமிழ்ப் பத்திரிகையான தென்றல், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் முழுத் தமிழ் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் இடம் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறது.

ஆங்கில சப்-டைடில்களுடன் அமெரிக்காவில் வெளியாகும் ‘மெய்ப்பொருள்', தெலுங்கில் ‘யெதி நிஜம்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. படம் இரண்டு மணி நேரம் (அதற்குக் குறைந்தால் அது தமிழ்ப் படமா என்ன!) ஓடும்.

நாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் வள்ளுவர்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்றல்லவா சொல்லியிருக்கிறார். எனவே மெய்ப்பொருளை அறிய நீங்களே படத்தைப் பார்ப்பதுதான் நல்லது.

மேலும் தகவலுக்கு: www.meipporulthemovie.com

***


வாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

படத்தைத் தயாரித்துள்ள டிரீம்ஸ் ஆன் ஃப்ரேம்ஸ் வாசகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பையும் அறிவித்திருக்கிறது. அவர்கள் எடுக்கப் போகும் அடுத்த படத்தில் நீங்களும் பங்கேற்க முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: எங்கெங்கே மெய்ப்பொருள் திரையிடப்படுகிறது என்ற விவரமும் இந்த இதழில் தரப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகிலுள்ள ஓரிடத்தில் போய்ப் படத்தைப் பார்க்க வேண்டும். கரும்பு தின்னக் கூலியா?

அதோடு முடியவில்லை, நீங்கள் இன்னொன்றும் செய்ய வேண்டும். படம் வெளியாகி 2 வாரங்களுக்குள் உங்கள் விமர்சனத்தை dreamsonframes@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மூன்று பேர் இவர்களது அடுத்த தயாரிப்பில் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுவார்கள். அது நீங்களாக இருக்கலாம்!

***


உங்கள் ஊரில் மெய்ப்பொருள்

கீழ்க்கண்ட அரங்குகளில் ஏப்ரல் 24, 2009 அன்று ‘மெய்ப்பொருள்' வெளியாகும்.

Movie City
8, 1655 Oak Tree Rd, Edison, NJ 08820
phoenixtheatres.com

Indian Movie Center
6, 1433 The Alameda, San Jose, CA 95126
phoenixtheatres.com

Norwalk
8, 13917 Pioneer Blvd., Norwalk, CA 90650
phoenixtheatres.com

இவற்றைத் தவிர டெட்ராயிட், சிகாகோ ஆகிய இடங்களிலும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

மதுரபாரதி

© TamilOnline.com