'கல்யாண்' என்று நட்போடு அழைக்கப்படும் டாக்டர் கு. கல்யாணசுந்தரம் (பி: 1949) வேதியியலில் முதுகலைப் பட்டத்தைச் சென்னையில் பெற்றபின், தனது PhD ஆய்வை அமெரிக்காவின் இண்டியானாவில் செய்தார். இங்கிலாந்தின் ராயல் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் கிரேட் பிரிட்டனில் மேற்கொண்டு ஆய்வு செய்தபின் தற்போது சுவிட்ஸர்லாந்திலுள்ள லேபரடோரி ஃபார் போடோனிக்ஸ் அண்ட் இன்டர்ஃபேஸஸ் (LPI-Swiss Federal Institute of Technology at Lausanne) அமைப்பில் ஆய்வாளர்/ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பாஸடேனாவிலுள்ள கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, நார்த் கரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியாகப் பணியாற்றியதுண்டு. நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் துறைசார் ஆய்வேடுகளில் பதிப்பித்துள்ளார்.
கணினித் தமிழ் முன்னோடிகளில் ஒருவரான கல்யாண், மையிலை தமிழ் எழுத்துருவை வடிவமைத்து இலவசமாகப் பயன்பாட்டுக்குத் தந்துதவினார். இந்திய மொழிகளுக்குள்ளே முதலில் இரட்டைமொழி எழுத்துருவான TISCIIயை நிறுவுவதில் முத்து நெடுமாறன் அவர்களுடன் இணைந்து தலைமையேற்றார். தமிழ் நூல்களை மின்வடிவில் சேமித்து வைக்கும் அரிய முயற்சியான ‘மதுரைத் திட்டம்' என்பதைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறார். உத்தமம் (INFITT-International Forum for Information Technology in Tamil) அமைப்பின் தலைவர். தமிழ்நாடு அரசின் பன்னாட்டுத் தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவில் தமிழ்க் கணினியைத் தகுதரப்படுத்தும் பிரிவிலும், தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் பன்னாட்டு ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றி உள்ளார். கணினியில் தமிழ்ப் பயன்பாட்டுக்கு இவரது கொடையை கௌரவிக்கும் வகையில் கனடாவின் ‘இலக்கியத் தோட்டம்' அமைப்பு இவருக்கு 2008ல் ‘சுந்தர ராமசாமி' விருதை வழங்கியது.
தமிழில் கணினிப் பயன்பாட்டு வளர்ச்சி என்று எண்ணிப் பார்த்தால் டாக்டர் கல்யாண் அவர்களை நீக்கிவிட்டுச் சிந்திக்கவே முடியாது என்னுமளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. மகளின் பெயர் கவிதா. தென்றலுக்காக மின்னஞ்சல் வழியே இவரோடு உரையாடிய பொழுது...
தென்றல்: ஒரு வேதியியலாளரான நீங்கள் இணையத் தமிழுக்குச் செய்துள்ள தொண்டுகள் ஏராளம். இந்த ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?
டாக்டர் கல்யாண்: பல்கலைக்கழக அளவில் வேதியியல் ஆராய்ச்சியில் பங்கு பெறும்பொழுது கணினியைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். ஐரோப்பாவிலும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் கணினியைப் பெரும்பாலோர் தங்கள் மொழியிலேயே பயன்படுத்துவதைக் கண்டு பலமுறை வியந்ததுண்டு. 1993-1994 அளவில் அதுவே "ஏன் நாமும் நம் தாய் மொழியிலேயே இவ்வாறு செய்யாமலிருக்கிறோம்?" என்ற ஆதங்கக் கேள்வியாக என்னுள் மாறியது. அதனால் கணினியில் பிற மொழிகள் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்பது பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். இப்படித்தான் எனக்கு தமிழ்க் கணினி மேல் ஆர்வம் ஏற்பட்டது.
கே: 'மையிலை' என்ற இலவசத் தமிழ் எழுத்துருவை உருவாக்கி வழங்கியவர் நீங்கள். அதன் பின்னணி என்ன?
ப: 1990-1995 ஆண்டுக் காலகட்டத்தில் இணையம் பெருமளவில் வளர்ந்து கொண்டிருந்தது. இணையவழி கருத்துப் பரிமாற்றம் வளர்ச்சியடையக் கணினியில் அனைவரும் சுலபமாக எந்த ஒரு மொழியையும் பயன் படுத்துவது இன்றியமையாதது. ஆங்கிலம் மட்டும்தான் கணினியில் என்ற நிலை மாறவேண்டும். அப்பொழுது கணினிகளில் தமிழைப் பயன்படுத்த எழுத்துருக்களையும், மென்பொருட்களையும் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை.
##Caption##இதுபற்றி ஒருமுறை என் நண்பர் ஒரு வருடன் (ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்) பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் ஆர்வம் கொண்டு எனக்கு எழுத்துருக்களை வடிவமைக்கத் தேவையான மென்பொருள் ஒன்றை இலவசமாகக் கொடுத்து உதவினார். அதைக்கொண்டு சில தமிழ் எழுத்துருக்களைத் தயாரித்தேன். அவற்றில் ‘மையிலை' முதலில் செய்த ஒன்று. அதை பலவிதக் கணினிகளில் சோதனை செய்யத் திருக்குறளையும் உள்ளிட்டு இணைய நண்பர்கள் பலருக்கு அனுப்பினேன். அவர்கள் அந்த எழுத்துருவைத் தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். பின் நானே இணையதளம் ஒன்று அமைத்து அதன்மூலம் உலகில் எவர் வேண்டுமானாலும் இலவசமாக இறக்கிப் பயன்படுத்த வகை செய்தேன்.
கே: இணையத் தமிழைத் தகுதரப்படுத்த (standardization) எடுக்கப்படும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி கண்டதாகத் தெரியவில்லையே. இதன் காரணங்கள் என்ன?
ப: ஒன்று, கணினியின் பயன்பாடு பிற மொழிகளில் வளரும்பொழுது அந்தந்த நாட்டு அரசும், கணினித் தொழில்நுட்ப வல்லுனர்களும் வளரும் நிலையிலே/ஆரம்ப காலத்திலேயே ஆர்வம் கொண்டு கணினிசார்ந்த பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தேவையான தகுதரங்களை (standards) தீர்மானித்தனர். இந்திய மொழிகளுக்கு இந்திய அரசோ, மாநில அரசுகளோ பல ஆண்டுகளுக்கு ஆர்வம் காண்பிக்காமல் இருந்தனர். இணையம் பெருமளவில் வளர்ச்சி அடைந்து பாமரர்களுக்கு உலகளவில் கருத்துப் பரிமாற்றத்திற்கு இன்றியமையாது என்ற நிலை வந்த பிறகுதான் கணினிப் பயன்பாட்டுக்குத் தேவையான தகுதரங்களைத் தீர்மானிக்க ஆரம்பித்தனர்.
இரண்டாவதாக, கணினித் தகுதரங்கள் தனிப்பட்ட முறையில் நிச்சயிக்கப்பட்டனவே ஒழியப் பன்னாட்டு முயற்சியாக, குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, தீர்மானிக்கப் படவில்லை. இந்திய அரசு இந்திய மொழிகளுக்கு ISCII என்ற ஒரு தகுதரத்தை அறிவித்தது. ஆனால் அதுபற்றிப் பல ஆண்டுகள் பிரசுரங்கள் இல்லாததால் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அறியாமலேயே இருந்தனர். இந்திய மொழிகளில் இணையத்தில் தமிழ் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட நிலையிலும் 1997-1998 வரை தமிழக அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.
கே: உத்தமம் என்ற அரசுசாரா அமைப்பின் தலைவர் நீங்கள். உங்களது தற்போதைய முயற்சிகள் என்ன?
ப: உத்தமத்தின் நோக்கம் கணினியிலும் இணையத்திலும் தமிழில் தகவல் பரிமாற்றம் பெருமளவில் நடக்கத் தேவையான வசதிகள் செய்வதே. அதற்காக உலகில் பல நாடுகளில் உள்ள மென்பொருள் தயாரிப்பாளர்களும் கணினி சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் உள்ளவர்களும் ஒன்றுகூடித் தகுதரங்கள் நிர்ணயிக்கும் பொருட்டுக் கணினி மாநாடுகளையும் தொழில்நுட்பக் கருத்தரங்கங்களையும் நடத்துகிறோம்.
கே: உத்தமம் எட்ட வேண்டிய முக்கிய இலக்காக எதைக் கருதுகிறீர்கள்?
ப: தமிழைப் பெருமளவில் பயன்படுத்தும் நாடுகளின் அரசும், அங்குள்ள மென்பொருள் தயாரிப்பாளர்களும், கணினி பயன்படுத்துவோர் குழுக்களும் உத்தமத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவதே.
கே: தமிழ் இணைய மாநாடுகள் 2004-வரை மிகச் சிறப்பாக நடைபெற்றன. அவை நின்று போனதன் காரணம் என்ன? வரும் ஆண்டுகளில் மீண்டும் நடத்த சாத்தியக்கூறுகள் உண்டா?
ப: உத்தமத்தின் நோக்கம் தமிழ் இணைய மாநாடுகளை ஆண்டுதோறும் நடத்துவதே. நடுவில் உத்தமத்தின் செயற்குழு இரு ஆண்டுகள் சற்றே சோர்ந்த நிலையில் இருந்ததாலும், இலங்கையில் மாநாடு நடத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்ததாலும், மற்ற நாடுகளில் முன்னின்று நடத்த நிறுவனங்களோ தனியார் குழுக்களோ இல்லாததாலும் கடந்த 3-4 ஆண்டுகளில் தமிழ் இணைய மாநாடுகள் நடக்கவில்லை. 2009 முடிவதற்குள் ஒரு மாநாட்டை நடத்த உள்ளோம். விரைவில் இதுகுறித்துச் செய்தி அறிவிக்கப்படும்.
கே: இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்தபடியாக இணையத்தில் பெரு வளர்ச்சி கண்டிருப்பது தமிழ் என்கிறார்களே, அதற்கான காரணங்கள் என்ன?
ப: இணையத்தில் தமிழ் பெருவளர்ச்சி கண்டிருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு: முதலில், பெரும்பாலான தமிழர்கள் தமது தாய்மொழியின்மேல் மிகுந்த ஆர்வம் காட்டுவதுடன் தமக்குத் தெரிந்தவற்றை இணையவழிப் பரிமாற்றம் செய்வதில் ஆர்வம் காட்டுவதே. இரண்டாவது காரணம், இந்திய மொழிகளிலேயே கணினித் துறை வல்லுனர்கள் தொகை என்று பார்த்தால் தென்மாநிலங்கள் முன்னிலையில் இருப்பது.
கே: தாங்கள் தொடங்கி, தொடர்ந்து நடத்திவரும் 'மதுரைத் திட்டம்' மிகுந்த தொலைநோக்கோடு செய்யப்பட்டு வருகிறது. இயற்கைச் சக்திகளோ காலமோ இந்தத் தமிழ் இலக்கிய மின்பதிப்புகளை அழித்துவிட முடியாது என்கிற அளவில் பாராட்டத்தக்கதும் கூட. இப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
##Caption## ப: கணினியில் தமிழைப் பயன்படுத்தும் ஆர்வம் வந்தபிறகு எப்படி இந்த ஆர்வத்தைச் செயல்படுத்துவது என்ற கேள்வி. இணையம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பொக்கிஷம். பல துறைகளில் இணையத்தில் உள்ளவை பயன்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தனியார் முயற்சிகளால் இயங்கிவரும் மின் நூலகங்கள் வழியே ஆயிரக்கணக்கான நூல்களின் மின்பதிப்புக்களை இலவசமாகப் பெற முடிவது. Project Gutenberg போன்றவை இணையவழி மின்னஞ்சல் குழுக்களில் பங்குபெற்ற எங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன. தமிழிலும் இம்முறையில் ஒன்று நடத்தலாமே என்ற கேள்வி எழுந்தது. அந்த சமயம் நான் மையிலை எழுத்துருவை இலவசமாகத் திருக்குறள் மின்பதிப்புடன் இணையம் வழி கொடுத்துவந்ததால் அதை ஒரு பொதுக்குழு முயற்சியாகச் செய்யத் தீர்மானித்தோம். இப்படித்தான் மதுரைத் திட்டம் தோன்றியது.
கே: மதுரைத் திட்டத்தை நீங்கள் தொடங்கிய போது TSCII எழுத்துரு இருந்தது. பின்னர் ஒருங்குறிக்கு (Unicode) மாற்ற வேண்டியதாயிற்று. இதற்கு நிரந்தரத் தீர்வு உண்டா?
ப: கணினியின் திறன் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துகொண்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஐரோப்பியர்கள் தங்கள் மொழியிலேயே பயன்பாடு அதிகரித்ததும் கணினியில் பயன்படும் எழுத்துருக்கள் இரட்டை மொழி வகையாக (bilingual encoding, Latin-1 போன்றவை) மாறின. பிறகு இணையம் தோன்றியது. தகவல் பரிமாற்றம் உலகளவில் இன்று நடைபெற்று வருகிறது. கணினியில் எழுத்துருக்கள் பயன்பாடும் பன்னாட்டு முறையாக ஆகியுள்ளது. ‘ஒருங்குறி' (Unicode) என்று அழைக்கப்படுவது ஒரே எழுத்துருக் கொண்டு பன்மொழிக் கோப்பு (multilingual document) ஒன்றைத் தயாரிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டதே.
மதுரைத்திட்டம் இந்த வகையில் தமிழ் மொழிக்கெனவேயான இணைமதி, மையிலை எழுத்துருக்களை ஆரம்ப காலத்தில் பயன்படுத்தியது. பிறகு இரு மொழிப் பயன்பாடு தகுதரம் வழி அமைக்கப்பட்ட TSCII எழுத்துருவைப் பயன்படுத்தி, தற்போது மின்பதிப்புகள் ஒருங்குறியிலும் வெளியிடப்படுகின்றன.
கே: தமிழ் ஆர்வமும் அதன் வளர்ச்சிக்கான பணிகளும் புலம் பெயர்ந்தவர்களிடையே மிக அதிகம் காணப்படுகிறதென்பது உண்மையா?
ப: நான் இதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் ஆர்வம் என்பது தமிழ் இனத்தைச் சார்ந்தது. ஆர்வம் அனைவருக்கும் ஒரே அளவில்தான். ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே கணினிப் பயன்பாடும் இணைய வழிக் கருத்துப் பரிமாற்றமும் அதிக அளவில் உள்ளதால் புலம்பெயர்ந்தவர்களின் பங்கு அதிகமாகத் தோன்றலாம். இன்று தமிழகத்தில் ஒவ்வொருவரும் கணினியை இணையத் தொடர்புடன் தங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ளத் தேவையில்லை. கணினிக் குடில்கள் (internet cafe) எங்கு பார்த்தாலும் உள்ளன. கட்டணமும் குறைவே. இன்று இணையத்தில் 2000க்கு மேல் வலைப்பதிவுகள் (Tamil Blogs) உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தமிழகத்தில் வாழும் தமிழர்களால் நடத்தப்படுபவைகளே.
கே: பழஞ்சுவடிகளை மின்னுருவில் வலையில் சேமிக்கும் திட்டத்தில் உங்கள் பங்கு என்ன? அதன் சாதனை என்ன?
ப: மதுரைத் திட்டம் பிரசுரிக்கப்பட்ட தமிழ்நூல்களை மின்வடிவில் மின்பதிப்புக்களாக வெளியிடுவதில் முக்கிய கவனம் செலுத்திவருகிறது. டாக்டர் நா. கண்ணன், திருமதி சுபாஷிணி ஆகியோருடன் சேர்ந்து ‘தமிழ் மரபு அறக்கட்டளை' என்ற ஒரு தனி ஆர்வலர் பன்னாட்டு முயற்சி ஒன்றை நடத்தி வருகிறோம். அதில் மின்பதிப்புகள் மட்டுமல்லாமல் பலவிதமான பல்லூடகங்களைக் (multimedia) கொண்டு தமிழர் கலாசாரம், பண்பாடு சேர்ந்தவற்றையும் மின்வடிவில் காக்க முயன்று வருகிறோம். இதுவரை புத்தக வடிவில் வெளியிடப்படாத பழஞ்சுவடிகளையும் மின்வடிவத்தில் சேமித்து வருகின்றோம்.
கே: தமிழ் மின்நூலகம் என்ன செய்கிறது?
ப: தமிழ் மின்நூலகம் என்பது எனது முதல் முயற்சி. இணைய தளம் வழியாகத் தமிழர்களுக்கு தேவையான தமிழ் எழுத்துருக்கள், மின்பதிப்புகள், தமிழ்க் கணினி சம்பந்தப்பட்ட செய்திகளைப் பங்கிட்டுக் கொள்ளும் முயற்சி. பிறகு அது பல துறைகளில் விரிவாக்கப்பட்டது.
கே: பெர்க்கலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பீடம் நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ள நீங்கள் வரவிருக்கிறீர்கள். அதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருக்கும்?
ப: மின்பதிப்புகளின் ஒரு முக்கிய அம்சம் சுலபமாக ஒரு குறிப்பிட்ட சொல்லையோ அல்லது சொற்றொடரையோ எந்தத் தமிழ் நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதே. சிலப்பதிகாரம் முழுமையாகத் தெரியாவிட்டாலும் இன்று கணினித் தேடுபொறியால் எந்த இரு வார்த்தைகள் எங்கு காணப்படுகின்றன என்பதைச் சில வினாடிகளில் பிடித்து விடலாம். இப்படிப் பல நூல்களில் சுலபமாகத் தேடும் வசதி மொழி வளர்ச்சி ஆராய்ச்சியில் (Linguistics, etymology) ஈடுபட்டோருக்கு ஒரு வரப்பிரசாதம். தமிழ் மின்பதிப்புகளை எப்படி ஒரு தரவுவகை வங்கி (database bank) கொண்டு தமிழ் மொழியாராய்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்பது பற்றி பெர்க்கலி தமிழ்ப்பீடக் கருத்தரங்கில் காண்பிக்க உள்ளேன்.
கே: உங்கள் முயற்சிகளில் தென்றல் வாசகர்கள் எப்படி உதவலாம்?
ப: தமிழில் உள்ள நூல்கள் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மதுரைத் திட்டத்தின் வழி இதுவரை வந்துள்ள மின்பதிப்புகள் மிகமிகக் குறைவே. தமிழ் இலக்கியக் கடலிலே இது ஒரு சிறிய துளி. தமிழ் இலக்கியம் பாதுகாத்தல், உலகிலுள்ள தமிழர்களிடையே அவற்றை இலவசமாகப் பகிர்ந்துகொள்ளல் இவை இரண்டும் எங்களது முக்கிய நோக்கங்கள். இந்தப் பணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றால் பெருமளவில் இயங்கலாம். நூலைத் தமிழில் தட்டச்சு செய்தல், படி திருத்துதல் ஆகியவை அடிப்படைப் பணிகளாகும். இந்தப் பணியில் பங்குகொள்ள விருப்பமுள்ளோர் என்னுடன் தனி அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
உரையாடல்: மதுரபாரதி
இணையத் தமிழ் வளர்ச்சியில் தமிழக அரசின் பங்கு
இணையம் வழி தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்ய வசதி செய்யும் நோக்குடன் 1997ம் ஆண்டு முதன்முறையாக ஒரு மாநாடு சிங்கையில் நடைபெற்றது. அதுமுதல் தமிழக அரசு இம்முயற்சிகளில் ஆர்வம் காட்டிப் பங்குபெற்று வருகிறது.
1999ஆம் ஆண்டு சென்னை தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் எழுத்துத்துருக்களுக்கான இரு தகுதரங்களையும் (TAB, TAM) விசைப்பலகைக்கான ஒரு தகுதரம் (Tamilnet99 keyboard) ஒன்றையும் அறிவித்தது. அதே சமயம் இணையவழி தமிழ்க் கல்வி கற்க 'தமிழ் இணையப் பல்கலைக் கழகம்' (Tamil Virtual University) ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறது. தமிழ் மொழிக்கான தகுதரங்களை நிர்ணயிக்கப் பல தொழில்நுட்பச் செயற்குழுக்கள் (IT Task Forces) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 1999-2000 உத்தமம் ஆரம்ப காலத்திலிருந்து தமிழக அரசு உத்தமத்துடனும் கணினி சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றுடனும் ஒன்றுகூடித் தகுதரங்கள் நிர்ணயிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. தவிர, 1999, 2003 ஆண்டுகளில் சென்னையில் பெரிய அளவில் தமிழ் இணைய மாநாடுகளைத் தமிழக அரசு நடத்தியுள்ளது.
- டாக்டர் கல்யாண் |