தென்றல் பேசுகிறது...
'இந்தி-சீனி பாய் பாய்' (இந்தியரும் சீனரும் சகோதரர்கள்) என்கிற கோஷத்தை 60களில் நேரு அரசு பிரபலப்படுத்தியது. சீனாவுக்கு இத்தகைய நல்லெண்ணங்கள் புரிவதில்லை. தமது செல்வாக்கு மண்டலத்தை விரிவாக்குவதே குறியாக இருந்த மாசேதுங் அரசு இந்தியாவைத் தாக்கி, சில இந்தியப் பகுதிகளைக் கையகப்படுத்தியது. ‘சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது' என்பது போன்ற தேசபக்திப் பாடல்கள் அப்போது திரையரங்கத்தில் ஒலித்தன. இன்னமும் அருணாசலப் பிரதேசம் போன்ற இடங்களைத் தனக்குச் சொந்தமானதென்று சீனா பேசி வருகிறது. மிகச் சாமர்த்தியமாகச் சீனா இந்தியாவைச் சுற்றியிருக்கும் பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, நேபாளம் என்று எல்லா நாடுகளிலும் தனது கிடுக்கிப்பிடியை உறுதி செய்துகொண்டுள்ளது. அதைவிடப் பெரிய ஆதிக்கம் அதன் வணிக ஆதிக்கம். மின்னணு, கணினி, பொம்மைகள் என்று எதை எடுத்தாலும், உலகில் எங்கு சென்றாலும் சீனப் பொருட்களே குவிந்து கிடக்கின்றன. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளோடான வர்த்தக நிலுவை சீனாவுக்குப் பெருமளவில் சாதகமாக இருக்கிறது. இப்போது அமெரிக்க டாலரை உலகச் செலாவணிப் பீடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதாகச் சீனா பேசத் தொடங்கிவிட்டது. சகாராவையடுத்த 48 ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்களை சீனாவில் ஒரு மாநாட்டுக்கு அழைத்து விருந்தோம்பல் செய்துள்ளது. அவர்களைக் கைக்குள் போட்டுக்கொள்ள எதை வேண்டுமானாலும் சீனா செய்திருக்கும் என்பதை ஊகிக்கச் சாணக்கியன் வரவேண்டியதில்லை. உலக அரசியல், பொருளாதாரம், ராணுவம், விளையாட்டு, தொழில் என்று எல்லா முக்கியத் துறைகளிலும் சீனா மிகச் சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்திவரும் இந்த நிலை உலகின் ஜனநாயக சக்திகளுக்குப் பெரும் சவாலாக இருக்கத்தான் போகிறது.

***


அமெரிக்காவில் நடந்த ‘வேலையிழந்தோர் ஒலிம்பிக்ஸ்' ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்த போதும் மறுபக்கம் ‘பொருளாதாரப் பேரழிவு' என்னும் துயரமான உண்மையைப் பிரதிபலிக்கிறது. ஒரு நம்பிக்கையிழந்த நிலை சிலரைச் சிரித்துக் கொண்டே சமாளிக்க வைக்கலாம்; பக்குவப்படாத வேறு சிலரை வன்முறைக்கு, குற்றங்களுக்குத் தள்ளலாம். ஒபாமா ஆசனமேறிய நேரம் சிரமமான நேரம். ஆனாலும் அவர் மிகவும் உறுதியான முகத்தோடு பணியாற்றி வருகிறார். கேட்பதற்கு நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசுகிறார். அவரது திறமையை, கொள்கைகளை, வாக்குறுதிகளை, மனத்திண்மையை உரசிப் பார்க்கும் காலகட்டம் இது. ஓர் அரசு இத்தகைய இக்கட்டான பகுதியைத் தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் சந்திக்க நேர்வது அபூர்வமல்ல. ஆனால், ஒபாமா நன்கு தெரிந்தே இப்படிப்பட்ட காலத்தில் பதவியேற்றிருக்கிறார். பொருளாதாரப் பண்டிதர்கள்கூட இன்னும் எத்தனை நாள் இந்த நிலைமை தொடரும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. தேசத் தலைமையின் சீர்மையை ‘நீட்டி அளக்கும் கோல்' இதைவிடத் தேவையில்லை.

***


அமெரிக்கத் தமிழர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு என்றுமே தென்றல் உறுதுணையாக நின்றுள்ளது. அமெரிக்காவிலேயே முழுதும் தயாரிக்கப்பட்ட ‘மெய்ப்பொருள்' மர்ம, திகில் படத்தின் வெளியீட்டைத் தென்றல் அட்டைப்படக் கட்டுரையாக்கி மகிழ்கிறது. கணினித் தமிழ் முன்னோடி டாக்டர் கல்யாணசுந்தரம் அவர்களோடான பேட்டி, ஒரு தனிநபர் தமிழுக்கு எவ்வளவு பாடுபட முடியும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. வெற்றி பெற்ற ஒவ்வொரு கதையுமே மாறுபட்டதாக, தனித்துச் சிறப்பதாக இருப்பதைக் காணலாம். அமெரிக்காவில் வாழும் தமிழரிடத்தே உறைந்திருக்கும் படைப்பாற்றலுக்கு மேடையமைத்துத் தருவதில் தென்றல் மீண்டும் பெருமை கொள்கிறது.

***


வாசகர்களுக்கு மஹாவீர ஜயந்தி, ஈஸ்டர், ராமநவமி மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


ஏப்ரல் 2009

© TamilOnline.com