மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொங்கல், புத்தாண்டு விழா
ஜனவரி 31, 2009 அன்று மெட்ரோப்ளெக்ஸ் (டல்லாஸ்) தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் மற்றும் புத்தாண்டு விழா கார்லண்ட் பிளாஸா கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமியரின் தமிழ் வாழ்த்துப் பாடல் மற்றும் இராதிகா அவர்களின் இறை வணக்கத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. கால்டுவெல் வேள்நம்பி அவர்கள் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வரவேற்றார். திருமதி. இரஜினி இராமகிருஷ்ணன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

வெங்கட் தியாகராஜன் அவர்கள் சங்கத்தால் புதிதாக ஆரம்பித்துள்ள கூகிள் குரூப் குறித்து விளக்கினார். பிறகு பல குழுக்களின் கோலாட்டம், கும்மியாட்டம், கிராமியக் கலையாட்டம் மற்றும் பாடல்களுடன் விழா களை கட்டியது. பங்கேற்றவர்களுக்குச் சங்கத்தின் சார்பாக நினைவுப் பரிசுகளை திருமதி. இராதா சூரி வழங்கினார்.

கோப்பல் தமிழ்க் கல்வி நிலைய நிர்வாகி முத்துக்குமார் இராமலிங்கம், சங்கர் ஹரிஹரன் ஆகியோர் புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்புகளை விளக்கிப் பேசினர். அதன் பிறகு 'ஊடகங்கள் மக்களைச் சீர்படுத்துகின்றன, சீர்கெடுக்கின்றன' என்ற தலைப்பில், சமூக சேவகியும், மத்திய சினிமா தணிக்கை உறுப்பினருமான திருமதி. லக்ஷ்மி இராஜாராம் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. நான்கு பேர் கொண்ட இரு அணிகள் காரசாரமான வாதத்தை எடுத்து வைத்தனர். முடிவில் ஊடகங்கள் தேவை அவை மக்களைச் சீர்படுத்துகின்றன என்று நடுவர் தீர்ப்பளித்தார். சங்கத்தின் சார்பாக நினைவுப் பரிசுகளை நடுவர் வழங்கினார்.

சங்கத்தின் 2008-ம் ஆண்டு மலரைச் சங்கத் தலைவர் இராம்கி இராம கிருஷ்ணன் வெளியிட, முதல் பிரதியை பால் பாண்டியன் பெற்றுக்கொண்டார். பிறகு, சென்ற ஆண்டு சேவை செய்த மாணவ, மாணவியருக்கு நற்சான்றிதழ்களை திருமதி. கீதா பாண்டியன் வழங்கினார்.

‘திரை இசை வந்த திசை' என்ற தலைப்பில் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாகத் தலைவர் இராம்கி இராமகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.

பரணிதரன் ராதாகிருஷ்ணன்

© TamilOnline.com