உதவும் கரங்கள் கலாட்டா-2009
ஏப்ரல் 11, 2009, அன்று, ஃபுட்ஹில் கல்லூரியிலுள்ள ஸ்மித்விக் அரங்கிலும் (Foothill College, Smithwick Theater), வெளியேயும் உதவும் கரங்களின் வசந்த விழாவான 'கலாட்டா-2009' நடக்க இருக்கிறது. பிற்பகல் முழுவதும் நடைபெறப் போகும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் உச்ச கட்டமாக மாலையில் விரிகுடாவின் மிகப் பிரபல பல்லவி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் திரட்டப்படும் நிதி, உதவும் கரங்களின் தொடரும் சமூகநலப் பணிகளுக்கு அளிக்கப்படும்.

ஏழ்மை, எயிட்ஸ், மனநோய் போன்றவற்றால் ஆதரவற்றுப் போகும் குழந்தைகள், பெண்கள், முதியோர் ஆகியோருக்கு 25 வருடங்களாக உதவும் கரங்கள் கை கொடுத்து, இடமும், உணவும் அளித்து உதவி வருகிறது. அத்தகைய குழந்தைகள் படித்து முன்வருவதற்காகப் பள்ளிகளையும் நடத்துகிறது.

வித்யாசாகர் 1983ம் ஆண்டு உதவும் கரங்கள் அமைப்பை நிறுவினார். அவர், தானே அனாதையாக இருக்கையில் பராமரிக்கப்பட்டதால் சமூகத்துக்கு நன்றி கூறும் வகையில் இதனை ஆரம்பித்தார். இந்த இயக்கத்துக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். இவர் 'தந்தை தெரஸா' எனப் போற்றப்படுகிறார்.

கடந்த ஆண்டில் வெள்ளி விழா கண்ட உதவும் கரங்கள் பல சமூக சேவைப் பணிகளை நடத்தியுள்ளது:

சென்னையிலுள்ள முதல் நிலையத்தின் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன; ராமகிருஷ்ண வித்யாநிகேதன் பள்ளியில் உயர்நிலை வகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் கிளையில் ராமகிருஷ்ண வித்யாமந்திர் பள்ளி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. மேலும் HIV எயிட்ஸ் நோயாளிகளுக்கும், மனநோயுள்ளோருக்கும் அடைக்கலம் தரும் பணி விரிவாக்கப் பட்டுள்ளது.

சென்னை திருவேற்காட்டில், ஜீவன் எனப்படும் சமூகநலப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பணி உதவும் கரங்கள் நிலையத்தில் மட்டுமல்லாமல் வெளிச் சமூகத்திலேயே, மற்றவர்களோடு சேர்ந்து சேவை செய்யும் திட்டங்களின் ஆரம்பம் எனலாம். இதன் மூலம், விசேஷத் தேவையுள்ள சிறுவர் நல மருத்துவமனை, முதியோர் இல்லம், நர்ஸிங் கல்லூரி, கணினி (computer) கல்வி நிலையம் போன்ற பல சேவை நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. திருவேற்காடு அருகில் காயத்ரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் வாங்கப்பட்டுள்ளது. இது முழுவதும் வளர்ந்து இயங்கும் போது சுற்றியுள்ள 32 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ சேவையளிக்கும்.

உதவும் கரங்களின் சான் ப்ரான்ஸிஸ்கோ விரிகுடா வட்டம் 2003-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உதவும் கரங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை வளர்க்கவும், சேவை செய்வதற்குத் தேவையான நிதி திரட்டவும் அதன் 150-க்கும் மேலான தொண்டர்கள் பாடுபட்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் கலாட்டா 2004-2007, எஸ்.வி.சேகர், கிரேஸி மோஹன், 'க்ரியா' (Krea) போன்ற குழுக்களின் நாடகங்கள் போன்றவற்றை நடத்தியுள்ளனர்.

இதில் ஒரு முக்கிய நிகழ்ச்சியான கலாட்டா ஐடல் (Galaata Idol) நிகழ்ச்சியில், 15-வயதினர் முதல் முதியவர் வரை எவரும் பங்கேற்றுத் தம் பாட்டுத் திறனைப் பலமொழிகளிலும் பாடிக் காட்டலாம். நடுவர்கள் தேர்வில் முதல் இரண்டு இடங்களை அடையும் போட்டியாளர்கள், பல்லவி குழுவினருடன் சேர்ந்து பாடும் வாய்ப்புப் பெறுவார்கள். இம்முறை, கலாட்டா ஐடல் நிகழ்ச்சியில் முதன்முறையாக ஜோடிப் பாடல் (டூயட்) போட்டி ஆரம்பித்துள்ளனர். கலாட்டா ஐடலில் கலந்துகொள்ள வேண்டிய விவரங்களை http://www.galaata.org இணையதளத்தில் காணலாம். அங்கு சென்ற வருடப் போட்டியின் வீடியோக்களையும் கண்டு மகிழ்வதுடன் போட்டி விதிமுறைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

இம்முறை நடக்க இருக்கும் வேறு நிகழ்ச்சிகள்:
* லொள் சபா. அதாவது LOL சபா, அதாவது laugh out loud சபா! இந் நிகழ்ச்சியில் நகைச்சுவை மன்னர்களும் அரசிகளும் தங்கள் திறனைக் காட்ட முடியும்.
* 'நடனம் ஆடுவோமா' என்ற நடனப் போட்டி. நடனம் சிறிதே தெரியுமென்றாலும் கூட ஆடி, வெற்றி பெற முடியுமா என்று பார்க்கலாமே!

இது போன்ற பல நிகழ்ச்சிகள் நிறைந்த இந்தக் கொண்டாட்டம், ஒவ்வொரு வருடமும் பல வள்ளல்களின் நன்கொடையாலும், தொண்டர்களின் முயற்சியாலுமே சாத்தியமாகிறது. அதற்காக, உதவும் கரங்கள் நன்கொடைகளையும் தொண்டர்களையும் வரவேற்கிறது.

வள்ளல் (sponsor level) மற்றும் பிற நிலைகளில் நன்கொடை அளிக்கவும் கலாட்டா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், உதவும் கரங்களுக்காகத் தொண்டு புரியவும் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள்:
http://www.udavumkarangal-sfba.org,
http://www.galaata.org

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com