ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் தினம்
ஏப்ரல் 5, 2009 அன்று ஸ்ரீ லலித கான வித்யாலயாவின் மும்மூர்த்திகள் தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கபர்லி அரங்கில் கொண்டாடப்பட உள்ளது. வித்யாலயாவின் இயக்குநர் லதா ஸ்ரீராம், தந்தை ராஜகோபாலிடமும், எஸ். ராஜம் அவர்களிடமும் பயின்றவர். செம்மங்குடியின் பிரதம சிஷ்யரான பி. எஸ். நாராயணசாமியின் சிஷ்யரான இவர், கடந்த 17 ஆண்டுகளாக ப்ரீமாண்ட் நகரில் கர்நாடக இசையைப் பயிற்றுவித்து வருகிறார்.

வித்யாலயா மாணவர்கள் மூன்றாம் வருடமாக மும்மூர்த்திகளைப் போற்றும் வகையில் பஞ்சரத்ன கிருதி, நவக்ரஹ க்ருதி, ஷ்யாமா சாஸ்திரி க்ருதி மற்றும் ஸ்ரீராமரின் பெயரில் சில துதிகளையும் வழங்க இருக்கின்றனர். முதன்முதலில் ஒரு சிஷ்யையின் இல்லத்தில் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா இன்று சிறப்பானதொரு விழாவாக வளர்ந்திருக்கிறது. முதல் வருடத்தில் வெறும் ஆறு மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் தற்போது மாணவ, மாணவியர் கலைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து இசை விருந்து படைக்க இருக்கின்றனர்.

நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் விதமாக கிளீவ்லேண்ட் வி.வி. சுந்தரம் அவர்களும், மிருதங்க வித்வான் 'சங்கீத ரத்னகாரா' குருவாயூர் துரை அவர்களும் வருகை தரவிருக்கின்றனர். விழாக் குழுவினர் அனைவரையும் கலந்துகொள்ள அழைக்கின்றனர்.

© TamilOnline.com