'சாயாவனம்' என்ற நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970-களில் அறிமுகமானவர் எழுத்தாளர் சா. கந்தசாமி. இவர் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரையில் ஏழு நாவல்களும் பதினொரு சிறுகதைத் தொகுப்புகளும் வெளி வந்துள்ளன.
சா. கந்தசாமி 1940-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். தற்போது வசிப்பது சென்னையில். சென்னையில் 1963-லிருந்து சில நண்பர்களுடன் சேர்ந்து இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளுடன் இயங்கினார். இதன் பேறாகவே 'கசடறதபற' எனும் இதழ் உருவானது. நல்ல இலக்கியத்தைப் படைப்பதற்கும் மோசமான வற்றை அழிப்பதற்கும் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த இதழ் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுவில் இலக்கியம் தவிர்த்த ஓவியம், ஓவியர் பற்றிய செய்திகள் வெளிவந்தன. மேலும் திரைப்படம், இசை தொடர்பான உரையாடல்களும் மேற்கிளம்பின.
கலைகளைப் பற்றிய ஆர்வமும் இலக்கியப் படைப்பாளிக்கு அவசியம் என்பதை 'கசடதபற' உணர்த்திற்று. படைப்பனு பவத்தின் எல்லைகள் விரிவும் ஆழமும் வேண்டுவதாக இருக்கும் என்ற உண்மையை உறுதிபட எடுத்துரைத்து வந்தது. இது தான் குறும்பட இயக்க முயற்சிகளிலும் கந்தசாமியை ஈடுபட வைத்துள்ளது. சுடுமண் சிலைகள் என்ற தமிழகப் பாரம்பரியக் கலைகள் பற்றிய குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோரின் வாழ்வும் பணியும் பற்றிய குறும்படங்களை எடுத்துள்ளார்.
இந்த வகையில் சமகால எழுத்தாளர் களுள் சா. கந்தசாமி தனித்தன்மையுடன் திகழ்கின்றார். இலக்கியத்துக்கும் கலை களுக்கும் இடையிலான ஊடாட்டம் எத்தகைய புதிய களங்களை நோக்கி நகர்த்தும் என்பதற்கு கந்தசாமியின் படைப்புலகு சாட்சி. அதேநேரம் காட்சிக் கலைத்தன்மை கதைகூறல் மொழிநடையில் எத்தகைய தாக்கம் செலுத்தியுள்ளது என்பது விமரி சனத்துக்குரியது. மொழி பற்றிய பிரக்ஞை, மொழியின் வளம் போதாமை கொண்டதாகி உள்ளது. இது ஒரு விமரிசனமாகவும் முன்வைக்கப் படுகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால் கந்தசாமியின் படைப்புலகம் அனுபவங்களின், வாழ்க்கையின் அடிநாத மாகத் தொழிற்படும் மனித உணர்வுகளின், சிக்கல்களின், முரண்பாடுகளின் களமாகவே உள்ளது. குறிப்பாக, படித்த நடுத்தர வர்க்கத்து மனேபாவங்களின் பலதளம் விரிவாகப் பதிவாகிறது. அவரது நாவல்களில் 'தொலைந்து போனவர்கள்', 'சாயாவனம்', 'விசாரணைக் கமிஷன்' போன்றவற்றுக்குத் தனியான அடையாளம் உண்டு. 'விசாரணைக் கமிஷன்' நாவலுக்கு 1998-ம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
சாகித்திய அகாதமி வெளியீடான 'நவீன தமிழ்ச் சிறுகதைகள்' எனும் தொகுப்பின் தொகுப்பாசிரியராகவும் உள்ளார். இத் தொகுப்புத் தேர்வின் பின்னுள்ள இலக்கிய அரசியல் எத்தகையது என்பது தெளிவானது. ஆகவே கந்தசாமியின் இலக்கியக் கோட்பாட்டுக்கான கூறுகள் எதுவாக இருக்க முடியும் என்பதை உணர்த்தும் தொகுப்பாகவும் இதைக்கருத முடியும்.
ஒரு பேட்டியில் "மொழி என்பது அலங்காரமாக இருக்கக் கூடாது என்பது என் கொள்கை. அண்ணா, கருணாநிதி, லா.ச.ரா இவர்களைப் படிச்சதுனால ஏற்பட்ட விளைவு மொழியை அலங்காரமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்" (சுபமங்களா) எனக் கந்தசாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால் படைப்புலகத்தை, மொழியைப் புரிந்துகொள்ள இவருக்குக் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எந்த அளவிற்கு உதவியுள்ளார்கள் என்பது ஓர் அடிப்படைக் கேள்வியாகவே எழுகிறது. அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பெயரை இவர் உச்சரிப்பதற்கு வேறு நோக்கம் இருக்க வேண்டும். இலக்கியத் தகுதியை நிலை நாட்டுவதற்கான பதில் அல்ல. கந்தசாமியின் படைப்புலகத்துடன் தேர்ந்த வாசிப்பனுபவம் கொண்ட வாசகர் ஒருவர் நிச்சயம் ஏமாற்றப்படுவார் என்றே கருதலாம்.
எவ்வாறாயினும் படைப்பாளியின் உரைகளுக்கு அப்பால் படைப்புகள் வெளிப்படுத்தும் அனுபவம், புரிதல்தான் முக்கியம். அதாவது வாசகர் மனம்தான் எதையும் தீர்மானிக்க முடியும். கந்தசாமியின் படைப்புலகம் 1970-களுக்குப் பிற்பட்ட தமிழ்ப் படைப்புலகில் தனித்து அடையாளம் காட்டுமளவிற்குத் தனித்தன்மை கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் பிரதி களைத்தான் கந்தசாமி தமிழுக்குத் தந்துள்ளார்.
தெ.மதுசூதனன் |