மார்ச் 2009: வாசகர் கடிதம்
உங்கள் சாதனை மகத்தானது. வாழ்க்கையின் எல்லாம் அம்சங்களுக்குமே உரிய இடத்தை வழங்கி, உயர் உள்ளத்துக்கும் உயர் நலத்துக்கும் முதலிடம் தந்து ஒரு பத்திரிகையை நடத்துவது இலட்சியவாதிகளாலும், கெட்டிக்காரர்களாலுமே முடியும். நீங்கள் மாதந்தோறும் செய்து காட்டுகிறீர்கள். ‘சினிமா சினிமா'விலிருந்து ‘ஹரிமொழி' வரையில் சின்ன மீனைப் போட்டு பெரிய மீன்களைக் காண்பிக்க முயல்கிறீர்கள்.

சுப்ரமணியன் ரமேஷ் எழுதியது என் மனத்தைத் தொட்டது. இறைமையை எழுத்தாக்குவது எழுத்தின் சாத்தியப்பாடுகள் இருக்கும்வரை இயலாது. இறைமையை அடைந்தவர்கள் 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்' (உதாரணம்: உபநிடதங்கள், கீதை, சங்கரர், வள்ளுவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர்).

எல்லாத் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் தென்றலை அனுப்பி வையுங்கள். நல்மனம் பெற்று மாறட்டும்.

ஜானகிராமன், மிச்சிகன்

*****


பிப்ரவரி 2009 இதழில் இளங்கோ மெய்யப்பன் எழுதிய 'அப்பாவின் சொத்து' சிறுகதையைப் படித்தேன். எனது பாராட்டுகளை எழுத்தில் கூறவே முடியாது. 'அற்புதம்'.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி (மின்னஞ்சலில்)

*****


நான் தென்றலுக்குச் சந்தா செலுத்தித் தொடர்ந்து செலுத்தும் வாசகன். இலக்கியம் மற்றும் பிற நிகழ்வுகள் குறித்த உங்கள் கட்டுரைகளை மிக ஆர்வமாக வாசித்து வருகிறேன்.

பிப்ரவரி இதழில் வெளிவந்த அரவிந்த் சுவாமிநாதனின் அசோகமித்திரன் நேர்காணலை மிகவும் ரசித்து வாசித்தேன். அசோகமித்திரனிடம் இருந்து பல சுவையான தகவல்களையும் சம்பவங்களையும் சுவாமிநாதன் பெற முடிந்தது நன்று.

ஆ. சுந்தரேசன் (மின்னஞ்சலில்)

*****


நான் தென்றலைத் தொடர்ந்து விரும்பிப் படிக்கிறேன். அதில் தரமும் பல்சுவையும் உள்ளது.

உங்கள் இதழில் தமிழினப் படுகொலை பற்றி எதுவும் வரவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதைக் குறித்துத் தமிழ்நாடே கொந்தளிப்பில் உள்ளது. இதற்கு ஏதாவது காரணம் உண்டா?

இந்த நாட்டில் நான் 26 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எல்லா ஸ்ரீலங்கன் தமிழர்களுமே விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அல்ல. ஆனால் சிங்களப் பெரும்பான்மையினர் தமிழ்ச் சிறுபான்மை மக்கள்மீது செய்யும் வன்கொடுமையே விடுதலைப் புலிகள் உருவாகக் காரணம்.

ஏ. ஞானராஜா

*****


நாம் ஈழத் தமிழர் படும் அல்லல்களைப் பற்றி ஈழத் தமிழர் எழுதிய சிறுகதைளை முன்னர் வெளியிட்டதுண்டு. ஜனவரி 2009 இதழில் புதியபாரதி எழுதி வெளியான 'அக்னி புஷ்பம்' கவிதையும் ஈழத்தமிழர் படும் துன்பத்தை விவரிப்பதே. கட்டுரையாக வெளியாகவில்லை என்பதால் தென்றல் மௌனம் காப்பதாகப் புரிந்துகொள்வது தவறு. தமிழர் எந்த நாட்டில் இருந்தபோதும் அவர்களை நம்மவராகப் பார்ப்பதே தென்றலின் பார்வையும். ஆனால், நீங்களே மிகச் சரியாகக் கூறியுள்ளபடி, தமிழினப் படுகொலையை எதிர்ப்பதும் புலிகளை ஆதரிப்பதும் ஒன்று என்பதே தற்போது தமிழகக் கொந்தளிப்பிலும் வெளிப்படுகிறது. இதைப் பற்றிய தென்றலின் முழுமையான பார்வையை இந்த இதழில் வெளிப்படுத்தியிருக்கிறோம் - ஆசிரியர்

*****


ஏ.ஆர். ரஹ்மான் பற்றிய கட்டுரை ('மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை', பிப்ரவரி, 2009) உலகத்தரம் வாய்ந்தது, ரஹ்மானைப் போலவே! கட்டுரை சரியாக, நடுநிலைமையோடு, நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டிருந்தது. எழுதிய சேதுபதி அருணாசலத்துக்கு வாழ்த்துகள்.

உமா வெங்கடராமன், மௌண்டன் வியூ, கலி.

*****


தென்றல் இதழ் படித்து மகிழ்ந்தேன். ஒரு காலத்தில் கண்ணதாசன், தென்றல் என்ற பெயரில் அரசியல், கலை, இலக்கியம் பற்றிப் பத்திரிகை நடத்திப் பெருமை சேர்த்தார். அதேபோல் நீங்களும் அமெரிக்காவாழ் தமிழர்களுக்காக, அனைவர் நெஞ்சத்தையும் தொடும்விதமாக கவிஞர்கள், ஆன்மீகவாதிகளின் பேட்டிகள், சமையல் குறிப்புகள், நிகழ்வுகள் மற்றும் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றி எழுதுவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தென்றல் இதழ் வான்கோழிகள் வலம்வரும் இடத்தில் வண்ண மயிலாகவும், காக்கைகளைக் காண இயலாத இடத்தில் குயிலாகவும் வலம்வருவது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

பாண்டி வேலு, இல்லினாய்ஸ்

*****


நான் முதன்முதலாக அமெரிக்காவில் தென்றல் இதழைப் பார்த்துப் பரவசமடைந்தேன். இத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தமிழன் வந்து தமிழில் பத்திரிகையும் நடத்தி தமிழை வளர்க்கும் விதம் என்னை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் சில மாதங்களாக எனது மனதைத் தொடும்படியான ஒரு விடயம் தென்றல் மீது எனக்கு இருந்த ஈர்ப்பை அகற்றி விட்டது. அது என்னவென்றால் என் உடன் பிறவாத சகோதர சகோதரிகள் இலங்கையில் தினம்தோறும் சொல்லொணாத் துயருற்று மடிந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களைப் பற்றி ஒரு வரி கூடத் தென்றலில் வராதது தான். குறைந்தபட்சம் ஒரு மனிதாபிமான அடிப்படையில் எதிர்ப்பைக் காட்டும் ஒரு வரியைச் சேர்த்தால் நன்றாக இருந்திருக்கும்.

வா. அலெக்சாண்டர், ஆன் ஆர்பர், மிச்சிகன்.

*****


'புதிய வேர்கள்' சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. இன்றைய அவசர உலகத்தில் அமெரிக்கா, சென்னை, பெங்களூரு எல்லாம் ஒன்றுதான். கதையில் உண்மை நிலைமை அப்படியே பிரதிபலிக்கிறது. கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

ஜி. ஸ்ரீனிவாசன், சாண்டா கிளாரா, கலி.

© TamilOnline.com