தமிழர்களுக்கு மோசமான நேரம்
இயற்கையாக உருவாகும் தலைவர்களைப் புறக்கணித்து, தலைமையால் நியமிக்கப்படுபவர்களால் கட்சி வழிநடத்தப்படும் போக்கு மக்களின் அதிகாரத்தை ஒரு சிலர் கைப்பற்றி தங்கள் வசப்படுத்தும் சூழலாக மாறியிருக்கிறது. இந்தச் சூழல் வெளிநாட்டினர் கட்சிக்குள் ஊடுருவக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது அல்லது தலைவர்கள் வெளிநாடுகளுக்குத் தங்கள் நாட்டை காட்டிக் கொடுப்பதற்கான வாய்ப்புகளை இது உருவாக்குகிறது. முதலில் கட்சிகளுக்குள் வரும் இந்தத் தன்மை, பிறகு அரசு மட்டத்திலும் தன் கைகளை விரிக்கும். இப்பொழுது இந்தியாவில் இது தான் நடந்திருக்கிறது.
- வ.ஐ.ச. ஜெயபாலன், கவிஞர், எழுத்தாளர்

*****


இலங்கையில் தற்போது தமிழர்களுக்கு மோசமான நேரமாக இருக்கிறது. இலங்கையில் அமைதி ஏற்பட தூதராகச் செல்ல அழைத்தால் செல்வதற்குத் தயாராக உள்ளேன். அதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறேன்.
- ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

*****


தமிழ்த் திரைப்படங்களின் அணுகுமுறை தவறாக இருக்கிறது. ஆபாசமும், வன்முறையும் தான் மேலோங்கி இருக்கின்றன. திரைப்படங்களில் இருப்பதைப் போல நிஜ வாழ்க்கையில் நடப்பதில்லை. விஷயம் தெரிந்தவர்கள் பலகீனமாகவும், விஷயம் தெரியாதவர்கள் போலியாகவும் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கக் கூடிய நிலைதான் தமிழகத்தில் இருக்கிறது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். ஒவ்வொருவரும் தனித்தன்மை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதிர்க்கக் கூடிய, அங்கீகரிக்க விரும்பாத விஷயங்களை நமது வீடுகளுக்கு ஊடகங்கள் கொண்டு வந்துவிடுகின்றன. 'தொடர்'கள் என்ற பெயரில் தரம் தாழ்ந்த விஷயங்களைத் தொலைக்காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் எதிர்த்து காந்தீய வழியில் போராட வேண்டும்.
- ஞான ராஜசேகரன், இயக்குநர்

*****


'மதச்சார்பின்மை' எனும் சொல்லும் 'இந்துத்வா' எனும் சொல்லும் இன்றைக்கு எப்படித் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டும், கையாளப்பட்டும் வருகிறது என்பதை ஓரளவு சிந்தித்தால் கூடத் தெரிந்து கொள்ளலாம். சிறுபான்மையினர் சிறிதும் சந்தேகப்படாமல் வாழ்வதற்கே பெரும்பான்மையினர் செக்யூலரிஸத்தை ஏற்றனர். நேருஜியின் மறைவுக்குப் பின்னர், சென்ற 40 ஆண்டுகளாக மதச் சிறுபான்மையினரின் வாக்குகள் ஓட்டு வங்கிகளாக மாறின. மதச்சார்பற்ற கோட்பாடு இந்து மதத்திற்கு மட்டுமே எதிராகப் பயன்படுத்தப்பட்டது.
- டாக்டர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம்

*****


நாடாளுமன்ற எம்.பி.க்களான நீங்கள் நாட்டு மக்களை அவமதிக்கிறீர்கள். அவர்களது பணத்தை வீணடிக்கிறீர்கள். நீங்கள் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லாதவர்கள்.
- சோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற சபாநாயகர்

*****


கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகளில் தமிழ்ப்பாடல்கள் பாடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து என் அனுபவத்தில் நிறையவே சொல்லமுடியும். முதலில் இசைநிகழ்ச்சிக்கே அதிகம் செல்லாதவர்கள், இசையே தெரியாதவர்கள்தான் இதை அடிக்கடிச் சொல்கிறார்கள். இன்றைய இசைநிகழ்ச்சிகளில் மிக அதிகமாகத் தமிழ்ப்பாடல்கள் பாடப்படுகின்றன என்பதே உண்மை.
- ஜெயமோகன்

*****


டீன் ஏஜ் பிள்ளைகளிடம் பெற்றோர் கோபப்படுவதால், என்ன விதமான பாதிப்பு வரும் என்பதற்கு ஒரு சில உதாரணங்கள் சொல்கிறேன். என்னிடம் கவுன்சிலிங்கிற்கு வந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன், 'என் அம்மாவைக் கத்தாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கச் சொல்லுங்கள்; நான் நன்றாகப் படிக்கிறேன் மேடம்' என்றான். சொன்னபடியே செய்தும் காட்டினான். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டினால், பிரச்சனை பெரிதாகுமே தவிரத் தீராது. இஞ்சினியரிங் மட்டும்தான் பெரிய படிப்பு; இதைப் படித்தால் தான் பெரிய ஆளாக முடியும் என்ற நிலைமையெல்லாம் தற்காலத்தில் இல்லை. உதாரணத்துக்கு உங்கள் பிள்ளை அழகாகப் படம் வரைகிறான் என்றால் வரைகலை ஓவியர் (கிராஃபிக் ஆர்டிஸ்ட்), ஆடை வடிவமைப்பாளர் என்று வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு நிறைய வழிகள் இன்றைக்கு உள்ளன. தானாகவே எடுத்துப் படிக்கிறபடி உங்கள் பிள்ளைகளைப் பொறுப்புடன் வளருங்கள். இந்தப் பொறுப்பு அவர்களைத் தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றும். பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் படிக்கும்போது, நீங்கள் டென்ஷனாக வாய்ப்பு ஏது?
- பிருந்தா ஜெயராமன், உளவியலாளர்

*****


எனக்கு 10 வயதில் என் தந்தை கொல்லப்பட்டார், 11ல் என் சித்தப்பா, 15 வயதில் ஒரு தேவாலயத்தில் என் பாட்டி கொல்லப்பட்டார். ஆனால் நாங்கள் அஹிம்சையைக் கடைப்பிடித்ததால் கொலைசெய்த நபரையும் அவரது செயலையும் (வன்முறையையும்) பிரித்துப் பார்த்தோம். அவரை நேசிப்போம், செயலை அல்ல. "வெறுக்கும் நிலைக்கு என்னை யாரும் தாழ்த்த முடியாது. ஏனென்றால் வெறுப்பின் விலை யாராலும் தாங்கமுடியாத பாரம்" என்று என் தாத்தா கூறுவார்.
- மார்ட்டின் லூதர் கிங் III, சென்னை, பிப்ரவரி 25, 2009.

*****


இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணாத மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகளும், மக்களும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்
- விஜயகாந்த்

© TamilOnline.com