நாகேஷ் மறைந்துவிட்டார். குண்டுராவ் என்ற இயற்பெயர் கொண்ட இவர் உண்மையில் ஒல்லிராவ்தான். தாராபுரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த நாகேஷிற்கு சிறுவயதிலேயே நடிப்பில் ஈடுபாடு இருந்தது. சென்னையில் ரயில்வேத் துறையில் பணியாற்றிக் கொண்டே நாடகங்களில் நடித்தார். சிறுசிறு வேடங்களில் நடித்தவர், பின் தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். ‘எதிர்நீச்சல்' திருப்புமுனையாக அமைந்தது.
கையில் தட்டோடு சாப்பாட்டுக்காக "மாது வந்திருக்கேன்" என்ற அவரது எதிர் நீச்சல் குரலைக் கேட்டு மனம் உருகாதவர் இருக்க முடியாது. அதே நேரத்தில், புற்றுநோயால் எந்த நிமிடமும் உயிர் போகலாம் என்ற நிலையில் 'நீர்க்குமிழி' படத்தில் அவர் செய்யும் அட்டகாசத்துக்கு ஒரு மெல்லிய துயரத்தோடு சிரிக்காதவர்களும் இருக்க முடியாது. 'காதலிக்க நேரமில்லை' ஓஹோ புரொடக்ஷன்ஸ் தயாரிப்புக்கான கதையைச் சொல்லி பாலையாவை அவர் அலற வைப்பது 'ஆல் டைம் கிளாசிக்'. நகைச்சுவையும் குணசித்திரமுமாக ஒரு மறக்க முடியாத கலவையை நாகேஷ் 'சர்வர் சுந்தரம்' படத்தில் வழங்கினார்.
##Caption## ஆனால் நடிகர் திலகத்தையே நாடி பிடித்துப் பார்த்த படம் 'திருவிளையாடல்'. நாகேஷ் தருமியாகவும் சிவாஜி இறையனாராகவும் வரும் அந்த மண்டபத்துக் கேள்வி-பதில் காட்சியில் நாகேஷ் அப்படியே சிவாஜியை நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். அதற்கு டப்பிங் செய்யும் சமயத்தில் இயக்குனர் உட்பட எல்லோரும் எங்கே அந்தக் காட்சியை சிவாஜி வெட்டச் சொல்வாரோ என்று அஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு இன்ச் கூடக் குறைக்காமல் அது படத்தில் வரவேண்டும் என்று சொல்லி குணத்தால் உயர்ந்தார் நடிகர் திலகம். ஆனால் அந்த இடத்தில் நடிப்பால் உயர்ந்தவர் நகைச்சுவைத் திலகம் நாகேஷ்தான்.
திடுதிப்பென்று ஜிப்பாவை உயர்த்தி இடுப்பு வேட்டியிலிருந்து எலுமிச்சம் பழத்தை எடுக்கும் 'தில்லானா மோகனாம்பாள்' வைத்தி ஆகட்டும், 'அனுபவி ராஜா அனுபவி'யில் குடுமி வைத்துக்கொண்டு 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்று மவுண்ட் ரோடில் பாடும் பட்டிக்காட்டானாகட்டும், எல்லாப் பாத்திரங்களுக்குமே நாகேஷ் மெருகூட்டினார் என்பதில் சந்தேகம் இல்லை. 'மகளிர் மட்டும்', 'நம்மவர்', 'பஞ்சதந்திரம்', 'தசாவதாரம்' போன்ற புதிய படங்களிலும் நாகேஷின் நடிப்பு சிறப்பாகத் தான் இருந்தது. சில வில்லன் பாத்திரங்களையும் நன்றாகச் செய்திருக்கிறார்.
நாகேஷ் ஒரு சகாப்தம் என்று சொல்வது வெறும் மரபுவழி வார்த்தையல்ல. உண்மை. அவரை ஆரம்பத்திலிருந்து பார்த்து ரசித்த மனங்கள் ஒரு வெறுமையை உணர்ந்தே தீரும். அத்தகைய நடிகனுக்குத் தென்றல் அஞ்சலி சமர்ப்பிக்கிறது.
மதுரபாரதி |