2009 மார்ச் 21-22 தேதிகளில் அமெரிக்கத் தமிழ் நாடக விழா-2009ஐ ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நடத்தவிருக்கிறது. இதில் உள்ளூரிலிருந்து மட்டுமல்லாது கலிபோர்னியா மற்றும் நியூஜெர்சியிலிருந்தும் நாடகக் குழுவினர் கலந்து கொண்டு நான்கு நாடகங்களை வழங்க உள்ளனர். பாரதி கலை மன்றம் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் என முத்தமிழ் விழாவை நடத்தி வருகிறது. அத்துடன் இளைய சமுதாயத்தினருக்கு தமிழ் கற்றுத்தரும் பணியினையும் செய்து வருகிறது. உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்களையும் ஆதரித்து, ஊக்குவித்து வருகிறது.
இனி விழாவில் வரவிருக்கும் நாடகங்கள் பற்றி...
மீனாக்ஷி தியேட்டர்ஸ் குழுவினர் மார்ச் 21 அன்று தமது 23வது படைப்பாக மெரீனாவின் 'தனிக்குடித்தனம்' நாடகத்தை அரங்கேற்ற உள்ளனர். ஹூஸ்டனைச் சேர்ந்த இந்நாடகக் குழுவின் தலைவரும் இயக்குநருமான சாரநாதன் ஓர் இதய மருத்துவ நிபுணர். முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார். இவர் தனித்துவமிக்க பல நாடகங்களைப் படைத்து இயக்கியுள்ளார். தனிக்குடித்தனம் 1970களைக் களமாகக் கொண்ட குடும்பச் சித்திரம். தனிக்குடித்தனம் செல்வதில் ஆர்வமாக இருக்கும் ஓர் இளைஞன், அதற்காகப் பல திட்டங்கள் தீட்டுகிறான். அவன் குடும்பத்தினர் அதற்குச் சம்மதித்தனரா, முடிவில் அவனால் தனிக்குடித்தனம் செல்ல முடிந்ததா என்பதை நகைச்சுவையோடு சொல்கிறது கதை. பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் நடித்துப் புகழ்பெற்ற இந்நாடகத்தை அவரது நினைவாக மீனாக்ஷி தியேட்டர்ஸ் அரங்கேற்றுகிறார்கள்.
##Caption## அன்று மாலை கலிபோர்னியாவைச் சேர்ந்த க்ரியா குழுவினரின் 'தனிமை' நாடகம் அரங்கேறுகிறது. க்ரியாவின் இயக்குநர் தீபா இராமானுஜம் 2000ம் ஆண்டிலிருந்து பத்து படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். ‘தனிமை' நாடகம், பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவர் எவ்வாறு தம் தனிமையைத் துறந்து வாழ்வை வளமாக்கிக் கொள்கிறார் என்பதை நகைச்சுவையுடனும், ஆழ்ந்த சிந்தனையுடனும் சொல்ல வருகிறது.
மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை கிரேஸி மோகன் எழுதிய 'ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது' என்னும் நகைச்சுவை நாடகம் அரங்கேற உள்ளது. இந்த நாடகத்தை நியூஜெர்ஸியைச் சேர்ந்த ‘ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ்' குழுவினர் அளிக்க உள்ளனர். தனது வீட்டுக்கு வரும் குடித்தனக்காரர்கள் நூறு பேரையாவது விரட்ட வேண்டும் எனத் திட்டம் தீட்டுகிறார் வீட்டுச் சொந்தக்காரர் ஆதிகேசவன். அதற்காகப் பத்துக் கட்டளைகள் விதிக்கிறார். ஏதாவது ஒரு விதியை மீறினாலும் குடித்தனக்காரரை விரட்டி விடுகிறார். நூறாவதாக வரும் அய்யாச்சாமி எப்படி எல்லா விதிகளையும் சமாளித்து, வீட்டுச் சொந்தக்காரரையே திண்டாட வைக்கிறார் என்பதுதான் கதை.
விழாவின் இறுதி நாடகமாக ஹூஸ்டனைச் சேர்ந்த ‘தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்' குழுவினரின் ‘நீங்காத நினைவுகள்' இடம் பெறுகிறது. 'ஹூஸ்டன் அனந்தா' இந் நாடகத்தை எழுதி இயக்கியிருக்கிறார். 30 வருடங்களுக்கும் மேலாக இவர் இத் துறையில் இருக்கிறார். மேலும் நாடகங்களில் இசை, பாட்டு, நடனம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பவர் இவர். தனது நாடகங்களுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். பாசம், நேசம், அன்பு போன்ற பல உணர்ச்சிகளைக் கொண்ட குடும்பக்கதை ‘நீங்காத நினைவுகள்'. நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த வள்ளியம்மை ஆச்சி ஒரு விதவை. அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதால், தனது துணைக்காக ஒரு பெண்ணை தத்தெடுத்து வளர்க்கிறார். அவரது பிள்ளைகள் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க நினைக்கின்றனர். ஆச்சி அதை விரும்பவில்லை. இந்தப் போராட்டத்தைச் சித்திரிக்கிறது ‘நீங்காத நினைவுகள்'.
ஹூஸ்டன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் இந்நாடகவிழாவிற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இணையதளம்: www.bkmhouston.org
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள: பத்மினி: 713.666.6980 சாரநாதன்: 281.980.4364 ஸ்ரீராம்: 832.539.1120
ராஜன் ராதாகிருஷ்ணன் |