தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?
இதுவரை: ஆரம்ப நிலை நிறுவனங்கள் தற்போதைய பொருளாதாரப் புயல் சூழ்நிலையில் எப்படிப் பிழைப்பது என்றும், அதற்கும் மேலாக, தழைத்து மீண்டும் வளர்வது எப்படி என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் சமீப காலமாக என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பியுள்ள பல கேள்விகளும் அவற்றைப் பற்றிய என் கருத்துக்களும் 'கதிரவனைக் கேளுங்கள்' பகுதியில் இப்போது இடம் பெறுகின்றன.

சென்ற பகுதியில், மூலதனம் கிடைக்கும் வரை பிழைத்திருக்க வேண்டுமென்பது ஆரம்பநிலை நிறுவனங்களின் முதல், அடிப்படை விதி; ஆனால், வெறுமனே பிழைத்திருப்பதில் ஒரு பயனுமில்லை. மீண்டும் பொருளாதார நிலை அனுகூலமாக ஆரம்பிக்கும் போது, மூலதனத்தைக் கவரும் வண்ணம் மீண்டும் தழைத்து வளர்வதற்குத் தயாராக இருப்பதற்கு ஆயத்தமாகும் முறையில் செயல்பட வேண்டும் என்று பார்த்தோம். இப் பகுதியில் அதற்கான வழிமுறைப் பட்டியலோடு ஆரம்பிக்கிறோம்.

*****


சரி, தழைப்பதற்குப் பிழைக்கும் வழிமுறைகளைப் பற்றிக் கேட்க மிக ஆவல். சொல்லுங்களேன்?

இதோ ஆரம்பித்து விடுகிறேன். அதற்கு முன் இன்னொரு சிறு குறிப்பு. வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வழிமுறைகள் வேறுபடக் கூடும். ஆனால், பின்வருவன சில பொது விதிகள் எனலாம். இன்னும் சில விதிகள் துறையைப் பொறுத்து இருக்கலாம், அவற்றைத் துறை நிபுணர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

தெளிவாகத் தெரிவதற்காக, முதலில் நான் பட்டியலை மட்டும் சுருக்கமாகக் கொடுத்து விட்டு, பின்பு ஒவ்வொன்றாக வழிமுறைகளை விளக்குகிறேன். இவற்றில் சில, நிலைமையைச் சமாளிக்க ஏதாவது செய்வது. ஆனால் மற்றும் சில, நிலைமையைச் சாதகப்படுத்திக் கொள்வது. "இடுக்கண் வருங்கால் நகுக!" என்று திருவள்ளுவரும், "பாதகங்களின் பலன்கள் இனிமையானவை (Sweet are the uses of adversity)" என்று ஷேக்ஸ்பியரும் சொன்னதை நினைவில் கொண்டு, ஒரு கடும்புளிப்பான எலுமிச்சம் பழம் கொடுத்தால் அதை வைத்து எப்படி சுவையான லெமனேட் ரசம் செய்யலாம் என்று யோசிக்கும் வழிமுறைகள். இரண்டு வகைகளையும் யோசித்துப் பாருங்கள்.

ஒரு காசுக் கேள்வி: ஒவ்வொரு காசின் முக்கியத்துவத்தையும் எண்ணிப் பாருங்கள். இது வரவு, செலவு இரண்டுக்குமேதான்!

கவனக் கூர்மை: மிக முக்கிய வணிக வாய்ப்பு, மிக முக்கிய விற்பொருள் மேல் மட்டும் கவனம்.

விற்பனை, வருமானம்: எப்படியாவது விற்பனையையும் வருமானத்தையும் அதிகரிக்க முயலுங்கள்.

வருங்காலத்துக்குத் தயாரித்தல்: இப்போது விற்க வாய்ப்பேயில்லையா? வருங்கால விற்பொருளைத் தயாரியுங்கள்.

செலவைக் குறைத்தல்: எச்சரிக்கையுடன் ஆனால் துரிதமாக, நிறுவனத்தில் உள்ள எல்லோர் உதவியுடன் செலவைக் கூடுமான அளவுக்குக் குறையுங்கள்.

தீர்மானங்கள், மாற்றங்கள்: தற்போதைய தகாத சூழ்நிலை உங்கள் நண்பனாகக் கூடும்! (எப்படி?)

வணிகத்துவத்துக்கு (marketing) முக்கியத்துவம்: வணிகத்துவம் விற்பனை உயர மிக அவசியம்.

வினியோகத்தை ஒருமுகப்படுத்தல் (concentration): வினியோகம் மிக செலவுள்ளது. ஒரு சிலவற்றை மட்டுமே செய்யுங்கள்

மாற்றுவகை நிதி திரட்டல்: VC மூலதனத்தார் மட்டுமன்றி, நிறுவனக் கடன், சார்பு நிறுவனங்கள் (strategic partners) போன்ற மாற்று நிதி திரட்டு (திருட்டு அல்ல!) வழிகள்.

##Caption## நிறுவனக் குழுவை உயர்தரமாக்கல்: இந்நிலையில், அதிகத் திறமையுள்ளோர் கிடைப்பது சற்றே எளிது!

வாடிக்கையாளர் நெருக்கம்: தற்போது உங்களுக்குள்ள வாடிக்கையாளர்கள் மீது அதிக கவனம் செலுத்த வாய்ப்பு இது! பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

போட்டியாளர்கள் நீக்கம்: உங்களுக்குத் தடுமாற்றம் என்றால், உங்கள் போட்டியாளர்களுக்கும்தான். அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசியுங்கள்.

எண்ணங்களை மாற்றல்: நீங்கள் பிடித்த முயலுக்கு இன்னும் மூன்றே காலா, இல்லை இப்போது நான்கா?

உலகளவு பார்த்தல்: வணிகரீதிக்கு இது சற்று வளர்ந்த நிறுவனங்களுக்கு; தொழில்நுட்பத்துக்கு, எல்லா நிறுவனங்களுக்கும்.

நிறுவன விற்பனைக்கு முன்முயற்சி: எல்லாம் முடிந்த பின் உடனே விற்கிறேன் என்றால் காசு பெயராது... முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக முன்கூட்டியே யோசித்து பாலமமைக்க வேண்டும்.

ரெண்டு அளவு, ஒரு வெட்டு: செய்வது சரியாகப் புரியாத நிலையில் அதை அதிகமாகச் செய்ய வேண்டாம் (தேஷ் தேஷ்பாண்டே கூறியது!) என்ன செய்ய வேண்டும் என்று சரியாகத் தெரியாவிட்டால் ஏதோ செய்துவிட வேண்டும் என்று பரபரக்காதீர்கள்!

அடுத்து, மேற்கொண்ட பட்டியலில் சுருக்கமாகக் கூறியதை ஒவ்வொன்றாக விவரிப்போம்.

*****


2009-ம் ஆண்டில் புதுநிறுவனங்கள் பிழைக்கவும் தழைக்கவும் என்ன செய்ய வேண்டும், எத்தகைய வாய்ப்புக்கள் உள்ளன என்பதை இனிவரும் பகுதிகளில் மேற்கொண்டு காண்போம்.

தொடரும்

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com