பாதுகாப்பு, அச்சமல்ல!

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Aravind Swaminathan


குழந்தைகளே ஒரு கதை சொல்றேன், கேளுங்க!

வீரபுரி என்ற நாட்டை வீரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அன்று மன்னனுக்குப் பிறந்த நாள். அதனால்நாடே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் அன்னதானம், ஏழை மக்களுக்குப் பரிசுகள், பொன் முடிப்புகள் என்று நகரமே கோலாகலத்தில் திளைத்திருந்தது.

விழா முடிந்த பின்னர் பட்டத்து யானை மீது மன்னன் உலா வருவதாக ஏற்பாடு. அதனால் யானைப் பாகன் யானையை நன்றாகக் குளிப்பாட்டி, அலங்கரித்து, அம்பாரி வைத்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தான். உடன் துணையாக பின்னால் மன்னனது பட்டத்து குதிரையும் ராஜ அலங்காரத்துடன் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தது. அவை ஒரு ஒடுக்கமான பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தன. அப்போது... எதிரே ஒரு பன்றி வேகமாக ஓடி வந்தது. அதன் உடல் முழுதும் ஒரே சகதி, சேறு. அதன் பின்னால் அதே போன்று சில பன்றிகள் ஓடிவந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்த யானை, ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அவற்றுக்கு வழி விட்டது.

இதைக் கண்டதும் அந்தப் பன்றிக்கு ஒரே பெருமிதம். "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது. அதனால்தான் ஓரமாக ஒதுங்கி நின்று வழி விட்டது" என்று பிற பன்றிகளிடம் பெருமையுடன் சொன்னது.

இதைக் கேட்டுக் கொண்டே வந்த குதிரைக்குக் கோபம் வந்து விட்டது. "யானையே, உன் ஆற்றலுக்கு முன்னால் இந்தப் பன்றிகள் எம்மாத்திரம். ஏன் இப்படி நடந்து கொண்டாய், உண்மையிலேயே பயந்து விட்டாயா என்ன?" என்றது சீற்றத்துடன்.

அதற்கு யானை பொறுமையாக, "நண்பனே, நாம் சுத்தமாக அலங்கரிக்கப்பட்டு மன்னரின் பிறந்த நாள் விழாவுக்காகச் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது இந்த அசுத்தமான பன்றிகளோடு போராடிக் கொண்டிருந்தால், அதன் உடம்பிலுள்ள சேறு, சகதி எல்லாம் பட்டு நாமும் அசுத்தமாகி விடுவோம். அப்புறம் விழா நடப்பதே பிரச்சனையாகி விடும். அதனால்தான் ஒதுங்கி நின்று வழிவிட்டேனே தவிர, பயத்தினால் அல்ல" என்றது.

உண்மையை உணர்ந்து கொண்ட குதிரை, யானையுடன் இணைந்து பொறுமையுடன் நடக்கத் தொடங்கியது.

சரி, குழந்தைகளே, அடுத்த மாதம் வேறொரு கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com