மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி தீரா நோய் தீர்த்தருள வல்லான்' என்று அப்பர் பெருமான் சிவபெருமானைத் துதிக்கின்றார். இன்றைய நாகரிக உலகில் மனிதர்களை வாட்டி வதைக்கும் நோய்களில் முக்கியமானது டயாபடீஸ் என்னும் சர்க்கரை நோய். கலியுகத்தில் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்களைக் காப்பாற்ற பல பரிகாரத் தலங்களை உருவாக்கி அவற்றில் அமர்ந்துள்ளான் சிவபெருமான். அப்படிப்பட்ட தலங்களில் ஒன்று கோயில் வெண்ணி. தென்னிந்தியாவில் தஞ்சை-திருவாரூர் பேருந்து சாலையில் சாலிய மங்கலத்தை அடுத்து உள்ளது இந்த ஊர். தஞ்சை-நாகூர் ரயில் பாதையில் நீடாமங்கலத்துக்கு முன்னர் உள்ள ரயில் நிலையத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற சிறப்பினைக் கொண்டதாக இத்திருத்தலம் விளங்குகிறது. இங்குள்ள இறைவன் ஸ்ரீ கரும்பேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவர் தன்னை வணங்கும் அடியார்களின் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் திருவருள் உடையவராக விளங்குகிறார். இவருக்கு வெண்ணி கரும்பேசுவார், வெண்ணிநாதர் என்ற திருநாமங்கள் உண்டு. இறைவியின் பெயர் சௌந்தர்ய நாயகி.
தலம் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்தை தரிசித்துப் பாடியுள்ளனர். இதனால் 'தேவார மூவர் ஏத்திய திருத்தலம்' என்ற சிறப்பினைக் கோயில் வெண்ணி பெறுகின்றது. இது நான்கு யுகங்களையும் கண்ட திருத்தலம் என்றும் கூறப்படுகின்றது. ஒருகாலத்தில் இங்கே இறைவன் கரும்புக் காட்டில் சுயம்புத் திருமேனியாக இருந்திருக்கிறார். கோயில் கட்ட மண்ணை வெட்டும் போது அது லிங்கத்தில் பட்டு ரத்தம் கசிந்திருக்கிறது. இதைக் கண்ட மன்னர் முசுகுந்தச் சக்கரவர்த்தி இச்சுயம்புத் திருமேனிக்கு சதுர ஆவுடையார் அமைத்து, கருவறை எழுப்பிக் கோவில் அமைத்ததாக வரலாறு கூறுகிறது.
மூர்த்தி ##Caption##சுயம்பு லிங்கத்தில் பாணம் ஒரு கரும்புக் கட்டுப் போல் அமைந்துள்ளது. தலையின் உச்சியில் லேசான வெட்டுக்காயத் தழும்பும் உள்ளது. முசுகுந்த சக்ரவர்த்தி ஆலயம் எழுப்பியபோது தல விருட்சமாக எதை அமைப்பது என்ற சர்ச்சை ஏற்பட்டதாம். அது கரும்புக்காடாக இருந்த காலத்தில் இரு முனிவர்கள் வந்து வழிபட்டுள்ளனராம். அவர்களில் ஒரு முனிவர் கரும்பே இருக்கட்டும் என்றும் மற்றொரு முனிவர் சுயம்பு லிங்கத்தைச் சுற்றிலும் நந்தியா வட்டை மரங்கள் இருந்ததால் அதுவே தல விருட்சமாக விளங்கட்டும் என்றும் கூறினாராம். அப்போது இறைவன் அசரீரியாக, லிங்கத் திருமேனி கரும்புக் கட்டு போல் அமைந்துள்ளதால் நந்தியாவட்டை மரமே தல விருட்சமாக இருக்கட்டும் என்று கூறினாராம் அதன்படி நந்தியாவட்டையே இவ்வாலயத்தில் தலவிருட்சம். வெண்ணி என்றால் நந்தியாவட்டை. ஆகவேதான் இறைவன் வெண்ணி கரும்பேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
தீர்த்தம் சூரிய, சந்திர தீர்த்தங்கள் ஆலயத்துக்கு வெளியில் உள்ளன. கரிகால் சோழன் இளவயதில் தன்னை எதிர்த்து வந்த சேர, பாண்டியர் மற்றும் குறுநில மன்னர்களை இவ்வூரில் எதிர்கொண்டு மாபெரும் வெற்றி கண்டார். அதற்கு இத்தல இறைவனும், தென்கிழக்குப் பகுதியில் எழுந்தருளியிருக்கும் கொற்றவையுமே காரணம் என திடமாக நம்பியதால் நன்றிக்கடனாக இவ்வாலயத்திற்குப் பல திருப்பணிகள் செய்துள்ளார். வரலாறும் 'வெண்ணிப் போர்' என இந்த யுத்தத்தை வர்ணிக்கிறது. சங்கப் புலவர்களில் ஒருவரான வெண்ணிக் குயத்தியார் இவ்வூரைச் சேர்ந்தவரே.
கோயில் அமைப்பு கிழக்கு நோக்கிய திருக்கோயில். மூன்று நிலைகள் உள்ள சிறிய ராஜகோபுரம். உள்ளே சென்றால் நந்தியெம் பெருமான். பலிபீடம். தெற்கு நோக்கிய சந்நிதியில் இறைவி சௌந்தர்யநாயகி சௌந்தர்ய ரூபத்துடன் அருள் பாலிக்கிறார். இவருக்கு வளையல்களை காணிக்கையாக அளிப்பதன் மூலம் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வழிபாடு ஆலயத்துக்குச் செல்லக் கோயில்வெண்ணி பேருந்து நிலையத்தில் இறங்கி 1/2 கி.மீ. தூரம் நடக்க வேண்டும். கோயில் பக்கம் கடை ஏதும் கிடையாது. ஆகவே பூஜைப் பொருட்களை முன்னதாகவே வாங்கிச் செல்லுதல் நல்லது. அர்ச்சகர் வீடு ஆலயத்தின் அருகேயே உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரவையையும், சர்க்கரையையும் வாங்கிச் சென்று கொடுத்தால் அர்ச்சகர் அதனை சுவாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து தருகிறார். அதனை பிரகாரத்தைச் சுற்றி வரும்போது தூவி விட வேண்டும். அவற்றை எறும்பு போன்ற ஜீவராசிகள் உண்ணுவதால் நமது நோய்கள் அகல்வதாக நம்பிக்கை. பக்தர்கள் பலரும் நம்பிக்கையுடன் வந்து வழிபட்டுப் பலன் பெற்றுள்ளதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார். நாட்டுக்கோடை நகரத்தாரின் நிர்வாகத்தில் இந்த ஆலயம் உள்ளது. தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
சர்க்கரை நோய்க்கு மருந்து உண்பவர்கள் கூடவே ஸ்ரீ வெண்ணி கரும்பேஸ்வரரையும், ஸ்ரீ சௌந்தர்ய நாயகியையும் தரிசித்துப் பிரார்த்தித்து வந்தால் விரைவில் குணம் பெறலாம் என்பது ஐதீகம்.
சீதா துரைராஜ் |