ஸ்ரீலங்கா தமிழர் நிலை - தாளம் படுமோ தறி படுமோ!
புதுக்குடியிருப்பு இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது. அங்கே 2,50,000 தமிழ்க் குடிமக்களும் எண்ணிக்கையறியப்படாத புலிகளும் இருக்கலாம் என்பது யூகம். "இது முடிவின் ஆரம்பம்" என்று இலங்கை ராணுவ தளபதி அறிவித்துச் சில நாட்களாகிவிட்டன. தாக்கி நெருக்கிக் கொண்டே போகிறார்கள். உள்ளே மாட்டிக் கொண்டிருக்கும் சாதாரணர்கள் உயிரிழக்கக் கூடாதே எனப் பன்னாட்டுச் சமூகம் கவலைப்படுகிறது. "சிவிலியன்களை மீட்டு வெளிக்கொணர நாங்கள் உதவத் தயார்" என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருக்கிறார். இலங்கை அரசும் "ஆஹா, அதற்கென்ன, உங்கள் உதவியை வரவேற்கிறோம்" என்று வாயளவில் கூறிவிட்டுத் தனது இடைவெளியற்ற தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

"விடுதலைப் புலிகளின் விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டது" என்று இலங்கை அரசு கூறுகிறது. மிகுந்த நெருக்கடியில் இருக்கும் புலிகள் போர்நிறுத்த வேண்டுகோள் விடுத்தனர். புலிகள் ஆயுதங்களைக் கீழே போடாவிட்டால் போர் நிறுத்தத்தைப் பற்றிப் பேச்சே இல்லை என்கிறது இலங்கை அரசு. அவர்கள் வலுவான இடத்திலிருந்து பேசுகிறார்கள். பேச முடியும்.

இதில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருப்பது புதுக்குடியிருப்பில் உணவும் இருப்பிடமும் குடிநீரும் சுகாதார வசதிகளும் மருத்துவமும், ஏன், உயிருக்குப் பாதுகாப்பும் இல்லாமல் மாட்டிக்கொண்டிருக்கும் இரண்டரை லட்சம் தமிழ்க் குடிமக்கள்தாம். ஒருபக்கம் இலங்கையரசின் இடையறாத சுற்றிவளைத்த தாக்குதல்; அங்கிருந்து தப்பி ஓட முயன்றால் புலிகளே தம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் கணக்கற்ற வன்முறை. இந்த நீடித்த போரில் அந்தப் பகுதியில் இருந்த மருத்துவமனைகள் கூடத் தகர்க்கப்பட்டு விட்டன.

##Caption##இன்றைக்குப் புலிகள் மட்டும்தான் தமிழர்களின் ரட்சகர்கள் என்பதாக ஒரு பிம்பம் ஏற்பட்டாலும், TELO, ENLF, EROS, PLOTE, EPRLRF என்று பல தமிழர் போராட்ட அமைப்புகள் இலங்கையில் தோன்றின. இலங்கையில் நடக்கும் போராட்டத்தை எல்.டி.டி.ஈ. தொடங்கிய 1982லிருந்தே கணக்கிடுவது ஒரு தவறான நோக்கில். இத்தனை அமைப்புகள் - சில மிதவாதமும் வேறு சில தீவிரவாதமும் - பேசுபவை, தோன்றியதற்குக் காரணம் யோசித்தால் 1982க்கு முன்னாலிருந்தே சிங்கள ஆதிக்க ஸ்ரீலங்கா அரசு தமிழர்களை நான்காம் தரக் குடிமக்களாக நடத்தி வந்த உண்மை புலப்படும். மேற்கல்வி, அரசுப் பணி மற்றும் பிற வாழ்வாதாரங்கள் ஆகியவை தமிழருக்கு மறுக்கப்பட்டன. நள்ளிரவில் போலீஸ் வந்து தமிழர் வீட்டுக் கதவைத் தட்டி யாரையும் அழைத்துச் செல்லும், பிறகு அவர் வீடு திரும்ப மாட்டார் என்பது நெடுங்கால நடைமுறை. இத்தகைய காரணங்களால்தான் பல தமிழர் அமைப்புகள் இலங்கையில் தோன்றின.

ஆனால், வேலுப்பிள்ளை பிரபாகரனின் எல்.டி.டி.ஈ. ஒரு வலுவான சக்தியாகத் தோன்றியது. பிற தமிழர் இயக்கங்களை உள்ளிழுத்துக் கொண்டது அல்லது இரக்கமின்றி அழித்தொழித்தது. "நான் வெற்றி பெற்றால் ஈழ அரசு ஜனநாயக அரசாக இருக்காது. ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்தும் சோஷலிஸப் பாணி அரசாக இருக்கும்" என்று அவர் கூறியதிலிருந்தே அவரது மனப்பான்மை புரியவரும். இதைக் காரணம் காட்டியே தமிழக முதல்வர் கருணாநிதி "இந்த நிலைப்பாடு இருக்கும் வரை புலிகளை ஆதரிக்க முடியாது" என்று தெளிவாகக் கூறினார். இந்த மனப்பான்மை காரணமாகவே புலிகள் ஸ்ரீலங்கா அரசை எவ்வளவு துன்புறுத்தினரோ அதே அளவோ அல்லது அதிகமாகவோ, தம்மோடு உடன்படாத தமிழர்களைத் துன்பத்துக்கு ஆளாக்கி வருகின்றனர் என்பதும் உண்மை.

ஸ்ரீலங்காவுக்கு முக்கியமாக நிதி உதவி செய்வது அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டமைப்பு, ஜப்பான், நார்வே ஆகியவை. இந்த நாடுகள் போரைச் சற்றே நிறுத்தி சிவிலியன்களைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால், எங்கே சற்றுத் தளர்த்தினாலும் புலிகளின் கை ஓங்கிவிடுமோ என்ற அச்சத்தில் ஸ்ரீலங்கா அரசு ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்கிறது. தான் செய்யும் படுகொலைச் செயல் வெளியுலகை எட்டக் கூடாதென்பதற்காக செஞ்சிலுவை போன்ற சர்வதேசச் சேவை அமைப்புகளையும் பத்திரிகை நிருபர்களையும் போர்ப் பகுதிக்குச் செல்லவொட்டாமல் தடுத்து வருகிறது.

ஸ்ரீலங்கா அரசு பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தளவாட உதவியுடன் இந்தப் போரை நடத்தி வருகிறது. இவை இந்தியாவின் நட்பு நாடுகளல்ல. நாளைக்குப் போர் முடிந்தபின் சிதைந்து கிடக்கும் ஸ்ரீலங்காவில் மறுகட்டுமானப் பணிகளுக்கான மிகப்பெரும் வணிக வாய்ப்பு இருப்பதை அறிந்துள்ளன. குறிப்பாகச் சீனா. அமெரிக்காவே மழையாகப் பொழியும் சீனப் பொருட்களின் கீழே சிக்கித் தவிக்கிறதென்றால், ஸ்ரீலங்கா எந்த மட்டு?

இந்தச் சந்தர்ப்பத்தை ஓர் அரசியல் வாய்ப்பாக எண்ணித் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மனிதச் சங்கிலி, கடையடைப்பு, ஊர்வலம், வேலை நிறுத்தம் என்று நடத்தித் தள்ளுகிறார்கள். சென்னை உயர்நீதி மன்றம் 2009ஆம் ஆண்டில் இதுவரை 10 நாட்களுக்கும் குறைவாகவே செயல்பட்டுள்ளதாம்! அடையாள வேலைநிறுத்தம் வேறு, அரசு எந்திரத்தின் செயல்பாட்டையே முடக்குவது வேறு. எதற்காக நிற்கிறோம் என்றுகூடப் புரியாத பச்சிளங் குழந்தைகள் மழையில் கைகோர்த்து நிற்க வைக்கப்பட்டிருந்தனர் சென்னையில். சினிமாத் துறையின் சீமான் போன்றவர்கள் "என்னைக் கைது செய்யாதீர்கள், தூக்கில் போடுங்கள்" என்று வீரவசனங்கள் பேசுகிறார்கள். நேற்றுவரை தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறியப்பட்டிருந்த எல்.டி.டி.ஈ. இன்றைக்குத் தமிழ்நாட்டின் செல்லக்கிளி! கொலையுண்ணும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக எண்ணுபவர் புலிகளையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயம். இவற்றுக்கெல்லாம் மேலே தீக்குளிப்பு வேறு. மெய்யான பற்றினால், சகோதரத் தமிழரின் துன்பத்தால் உந்தப்பட்டே முத்துக்குமார் போன்றவர்கள் தீக்குளித்திருக்கலாம். அவர்களது தியாகத்துக்கு விலை கிடையாது. அவர்களது நோக்கத்தை மாசு படுத்தவும் முடியாது. ஆனாலும் தீக்குளிப்பை வானளாவப் புகழ்ந்து பின்பற்றத் தக்க பெருஞ்செயலாகப் பேசுவது தவறான முன்னுதாரணம்.

##Caption## அமெரிக்காவின் ஜார்ஜியாவில் (அட்லாண்டா) தமிழர் இன அழிப்பைக் கண்டித்து பிப்ரவரி 7, 2009 அன்று 200 பேர் திரண்டு CNN தொலைக்காட்சியின் எதிரே ஓர் அமைதிப் பேரணி நடத்தியிருக்கிறார்கள். 'தமிழர்களைக் கொல்வதை உடனடியாக நிறுத்து', 'எல்லா அன்னையர்களின் கண்ணீரும் சமமானவை' போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை அவர்கள் ஏந்திச் சென்றனர். இவ்வாறு உலக நாடுகளின் கவனத்தைக் கவருதல், உண்மையில் ஸ்ரீலங்காவில் நடப்பது என்ன என்பதை அறிவுறுத்துதல் ஆகியவை உலகெங்கிலுமுள்ள தமிழரின் கடமையாக இருக்கிறது.

'போரைக் கைவிட்டு ஆயுதங்களைக் கீழே போட்டால் பொதுமன்னிப்பு' என்று ஸ்ரீலங்கா அரசு அறிவிக்க வேண்டும். அப்படிச் சமாதானம் நாடும் தமிழருக்குக் கொடுமை இழைக்கப்படாமல் பன்னாட்டு அமைப்புகள் மேற்பார்வைக் குழு ஒன்று இயங்க வேண்டும். "தனித் தமிழீழ நாட்டைக் கொடு" என்று இறையாண்மையுள்ள ஒரு நாட்டிடம் கூற யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால் உலக நாடுகள் எல்லாம் செய்ய வேண்டியது என்னவென்றால் 'உங்கள் அமைப்புக்குள்ளேயே இருந்துகொண்டு, தமக்கென நல்லதொரு சுயாட்சியை அமைத்து, வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளும், சமநீதியோடும் தன்மானத்தோடும் வாழும் சுதந்திரத்தைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும்' என்று கூறுவது தான். ஸ்ரீலங்கா அரசின் உண்மையான வெற்றி அது காட்டும் பெருந்தன்மையில் தான் இருக்கிறது. இதை இந்தியா உட்பட எல்லா நாடுகளும் ஒரே குரலில் கூறுவதற்கான அரசியல் நடவடிக்கைகளை உலக அரங்கில் மேற்கொண்டாக வேண்டும்.

மதுரபாரதி

© TamilOnline.com