நியூ இங்கிலாந்து குழந்தைகள் தினம்
நவம்பர் 15, 2008 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் (NETS) ஃப்ரமிங்காம் (மாஸசூஸட்ஸ்) குழந்தைகள் தின விழாவை நடத்தியது. இந்தியக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த அந்நிகழ்ச்சியில் மழலையர் மாறுவேடம், திருக்குறள் ஒப்பித்தல், சிறுவர்களின் தனித்திறமை ஆகிய போட்டிகள் நடந்தன.

சங்கத் தலைவர் பாலாஜி சதாநந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார். உமா மற்றும் பூங்கோதை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். மழலையர் மாறுவேடப் போட்டியில் 2-5 வயதிலான குழந்தைகள் கலந்து கொண்டனர். அருணகிரிநாதர், ஔவையார், பாரதியார், ஆண்டாள் முதலிய வேடங்களில் பங்கு பெற்றது தமிழுணர்வை வெளிப்படுத்தியது. சிறுவர்கள் அனைவரும் திருக்குறளை சிறப்பாக ஒப்புவித்தனர். நடுவர்கள் உமா நெல்லையப்பன், இளங்கோ சின்னச்சாமி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளித்து வாழ்த்தினர். நடுவர்கள் இருவரும் 'சிசு பாரதி' அமைப்பின் மூலம் தமிழ் கற்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இறுதி நிகழ்ச்சியான தனித்திறமை போட்டியில் பரதம், இசைக்கருவி வாசித்தல், பாடல் முதலியன இடம் பெற்றன. குறிப்பாக கீர்த்தனா கிருஷ்ணகுமாரின் ‘நேரு மாமாவும் ரோஜா மலரும்' அபிநயப் பாடல், மணிவண்ணன் செந்திலின் ‘சிங்கமும் எலியும்' பொம்மலாட்டம் போன்றவை பெரிதும் ஈர்த்தன. நீல் தனராஜின் மேஜிக் ஷோ பார்வையாளர்களை வியப்படைய வைத்தது. வித்யா கல்யாணராமன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

பூங்கோதை கோவிந்தராஜ்

© TamilOnline.com