பென்சில்வேனியா சுருதிலயம் அகாடமியின் பனிக்காலத் திருவிழா
டிசம்பர் 21, 2008 அன்று பென்சில்வேனியாவின் சுருதிலயம் அகாடமி தனது 'வேற்றுமையில் ஒற்றுமை' பனிக்காலத் திருவிழாவை பாரதீய கலாசார மைய அரங்கில் கொண்டாடியது. செனடர் ஸ்டூவர்ட் கிரீன்லீஃப் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

எட்டுவயது ஆஷ்ரயா அனந்த நாராயணனின் நாட்டியத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. ஆடியதோடு அல்லாமல் ஆஷ்ரயா ஒரு கர்நாடக இசைப் பாடலையும் பாடினார். தமது திறமைகளைப் பயன்படுத்தி இந்தியாவிலுள்ள பல சேவை நிறுவனங்களுக்கு நிதி திரட்டியுள்ள ஆஷ்ரயாவுக்கு, செனடர் ஸ்டூவர்ட் இத்தருணத்தில் ஒரு 'நாயகத்துவ விருது' வழங்கி கௌரவித்தார்.

செழுமையான இந்தியச் செவ்வியல் இசை, நடனம் ஆகியவற்றுக்குத் தம்மைச் சிறு வயதிலேயே அர்ப்பணித்துக் கொண்ட தன்மய் ராவ் மற்றும் ஆஷ்ரயாவுக்கு சுருதிலயம் அகாடமி விருதும் இந்தச் சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது. அகாடமித் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற வேறு சில மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

டாக்டர் ஆலின் மைனர், டாக்டர் மனோஹர், சௌஜன்யா மதுசூதன் போன்ற பிரபல கலைஞர்கள் விழாவுக்கு வந்திருந்தனர். கிருஷ்ணனும் சுதாமனும் குறித்த ஜகன்னாதனின் நாடகம் வந்திருந்தோரின் முகத்தில் சிரிப்பை வரவழைக்கத் தவறவில்லை. அதில் நடித்த குழந்தைகள் பார்த்தோரை அதிசயிக்க வைத்தன. முத்தமிழ் விருந்தாக அமைந்த நிகழ்ச்சியில் SOHAM செய்திப்பத்திரிக்கை வெளியிடப் பட்டது. இந்திய தேசியக் கொடிக்கு வந்தனையுடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது.

பி.எஸ். அஜய்

© TamilOnline.com