லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை
பிப்ரவரி 3, 2007 அன்று நாதஸ்வர ஒலி கேட்டு, கோயிலின் கலை அரங்கை நோக்கிச் சென்றேன். அங்கே மேடையின் ஒரு பக்கம் ஸ்ரீ ராமருக்கும் தியாகராஜருக்கும் மாலைகள் சார்த்தப்பட்டு கோலாகலமாய் இருப்பதைக் கண்டேன். என் அருகில் இருந்தவர் அன்று கோவிலில் தியாகராஜ ஆராதனையும், இதர வாக்கேயகாரர்கள் (Composers) தினமும் கொண்டாடப் படுவதாகச் சொன்னார். காலை 10.30 மணியிலிருந்து இரவு 7.45 மணிவரை மக்கள் இசை வெள்ளத்தில் தத்தளித்தனர்.

சாஸ்திரி அவர்கள் 10.30 மணிக்கு ராமருக்கு தீபாராதனை காட்டியபின், கோபி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

கலிபோர்னியா இசை ஆசிரியர்களூம், சீடர்களூம் தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளைப் பாடி அரங்கைக் களைகட்டச் செய்தனர்.

இசை ஆசிரியர்கள் கானசரஸ்வதி, கல்யாணி சதானந்தம், சுபா நாராயணன், நளினி ராமக்ருஷ்ணன், பத்மா குட்டி, சங்கரி செந்தில்குமார், டெல்லி சுந்தரராஜன், பாபு பரமேஸ்வரன், ரோஸ்முரளி, முரளி கிருஷ்ணன், கீதா பென்னட், திருவையாறு கிருஷ்ணன், கல்யாணி வீரராகவன், வஸந்தா பட்சு ஆகியோருடன் அவர்களது சிஷ்யர்களும் பங்கேற்றனர். தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், சுப்பராம சாஸ்திரி, புரந்தரதாசர், பாபநாசம் சிவன், அன்னமாச்சாரியார், மைசூர் வாசுதேவாசாரியார், பூச்சி ஐயங்கார், முத்தையா பாகவதர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோரின் கிருதிகளைப் பாடிச் சபையைச் சோபிக்கச் செய்தனர்.

பாபு பரமேஸ்வரன், முரளி கிருஷ்ணன் சீடர்கள் (கீபோர்ட்), வசந்தா பட்சுவின் சிஷ்யர்கள் (வீணை), கீதா ராகவன், கிரண் ஆத்ரேயா, அனு (வயலின்) வாசித்துப் பரவசப்படுத்தினர். வாத்திய விருந்து நிகழ்ச்சியில் சங்கீதா ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகப் பாடலும், ராமகிருஷ்ணன் 'திருவடிசரணம்' பாடலும், ஹரி அசுரி, ஜெயகிருஷ்ணன் 'பாவயாமி கோபாலம்' பாடலும் பாடி கரகோஷத்தைப் பெற்றனர். ஸ்ரீனிவாசன், நீலகண்டன், வெங்கட் ஆகியோர் மிருதங்கம் வாசித்தனர். மலிபு வேங்கடநாதன் மீது பாடல் இயற்றிப் பாடிய கானசரஸ்வதியின் ('கானம்') பாடல் மெய்மறக்கச் செய்தது. கிரிதர் அவர்கள் மலிபு கோவிலின் சார்பில் இசை ஆசிரியர்களுக்குப் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். அருண் சங்கரநாராயணன் நன்றி கூறினார். மங்களத்துடன் விழா இனிது முடிவடைந்தது.

தமிழ்ச்செல்வி

© TamilOnline.com