வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் விழா
ஜனவரி 11, 2009 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் திருவிழாவை மில்பிடஸ் நகரில் உள்ள இந்திய சமுதாய மையத்தின் (India Community Center) அரங்கில் கொண்டாடியது. 2009ம் ஆண்டு மற்றும் புதிய செயற்குழுவின் முதல் விழாவாகவும் இது அமைந்தது.

ICC 2006ம் ஆண்டு முதல் ஒவ்வொருத் திங்களையும் ஏதாவொரு மாநிலத்தின் திங்களாக அறிவித்து அத்திங்களில் ஒரு நாளை அம்மாநிலத்தின் மொழியைச் சிறப்பிக்கும் வகையில் மொழி நாளாக அறிவித்துள்ளது. தற்போது 2009 ஆண்டின் ஜனவரியை தமிழகத் திங்களாக அறிவித்து பொங்கல் விழாவை 'தமிழ் நாள்' ஆகக் கொண்டாடியது. இதுவே ICC-ன் புதிய கட்டிடத்தில் நடைபெறும் முதல் மாநிலத் திங்கள் விழா என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயற்குழு உறுப்பினர் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டு உடையுடன் வந்திருந்தனர். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக சரடோகா நகரமன்ற உறுப்பினர் திருமதி சூசி நாக்பால் வந்து சிறப்பித்தார். சூசி அவர்களின் தந்தை வேதாந்தம் தமிழ் மன்றம் துவக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். விழாவில் தலைவர் லேனா கண்ணப்பன், புதிய உறுப்பினர்களை அதிகரிப்பதற்கான திட்டத்தினையும், இளைஞர்களுக்கான புதிய திட்டங்களையும் எடுத்துரைத்தார். மன்றத்தின் உதவித் தலைவர்கள் சோலை அழகப்பன், லதா ஸ்ரீதரன், முன்னாள் மன்றத் தலைவர் கணேஷ் பாபு ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தினர்.

CTA, பிளசண்டன் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தலைவர் உரையைத் தொடர்ந்து புதிய செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அடுத்து ICC-யைச் சேர்ந்த பாலா ஜோசி தனது வரவேற்புரையில் தமிழ் மன்றத்தின் பணிகளைப் பாராட்டினார். அடுத்துக் கவியரங்கம் நடந்தது. டில்லி துரை, ஜெயக்குமார் முத்தழகு, ஆனந்த் கண்ணப்பன் மற்றும் பலர் கவிதைகள் படித்தனர். அடுத்து நாட்டுப்புற நடனம் நடைபெற்றது. அடுத்து 'சாம்ராட் அசோகன்' நாடகம் நடைபெற்றது. நாடகத்தை ஒருங்கிணைத்தார் itsdiff ஸ்ரீகாந்த். இதைக் தொடர்ந்து, ராம்கி வழங்கிய குழந்தைகளின் சேர்ந்திசை மற்றும் காணும் பொங்கலைச் சித்தரிக்கும் நடனமும் நடந்தது.

விழாவின் இன்னொரு சிறப்பு, நண்பர் ஸ்ரீதரன் மைனர் அவர்களின் நாட்டுப்புற இசை. பழந்தமிழ் இசைக் கருவியான உருமி மேளத்துடன் பறை, நாயனம் போன்றவை பற்றிய இசை விளக்கத்தையும் அவர் அளித்தார். தனித்து நாட்டுப்புறப் பாடலைப் பாடியதுடன், செல்வி சுருதியுடன் இணைந்தும் ஒரு பாடலைப் பாடினார். கடைசியாகக் கரகாட்ட நிகழ்ச்சி நடந்தேறியது. மன்றச் செயலாளர் சரவணன் நன்றியுரையில் ICC-ன் விஷ்ணு ஷர்மா, கபீர் குமார் ஆகியோரின் உதவியை நினைவு கூர்ந்தார்.

மேல் விவரங்களுக்கு: www.bayareatamilmanram.org

தில்லை குமரன்

© TamilOnline.com