சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 24, 2009 சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை லெமாண்ட் கோயில் வளாக அரங்கில் நடத்தியது. ராதிகா பிரசாத், மணிஷா முத்து, ஸ்நேஹா சுப்ரமணியன் ஆகியோரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. சங்கச் செயலர் மீனா சுப்ரமணியன் வரவேற்புரையில் தை மாதத்தின் பெருமை பற்றிக் கூறினார். பீமா படத்தின் 'முதல் மழை' பாடலை சஞ்சனா, ராம் ஆகியோர் பாடினர். இலந்தை ராமசாமி இயக்கிய சிலப்பதிகாரத்தின் 'கண்ணகி வழக்குரைத்த காதை'யை சிறார்கள் நடித்துக் காட்டிய விதம் நெகிழ்வு. கண்ணகியாக நடித்த பார்கவி ஸ்ரீராமின் நடிப்பு அருமை. பாண்டிய மன்னன் (விதாத் ராகவன்), கோப்பெருந்தேவி (காயத்ரி ஸ்ரீராம்), வாயிற்காப்போன் (சந்திரசேகர் கிருஷ்ணன்) ஆகியோர் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருந்தனர்.

அடுத்து வந்த ஆடையலங்கார அணி வகுப்பில் ஷிவானி பாலாஜி, சீமா அர்ஜுனா, அதிதி கிருஷ்ணா, ரிதிகா ப்ரசாத், ச்ரேயா மங்களம், ஷ்ரேயஸ் ராஜகோபாலன், ஆதித்யா சாரி, ஸ்ரீராம் சென்ன கேசவலு, கேசவ் பார்த்தசாரதி ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடை அணிந்து வந்திருந்தனர். தலைவர் ரகுராமன் சிறப்பு வரவேற்புரை வழங்கினார்.

மீனா சுபி எழுதி இயக்கிய ‘தை பிறந்தால் வழி பிறக்கும்' நாடகத்தை ஷ்ரேயஸ் ராஜகோபாலன், ஷ்ரேயா மங்களம், அதிதி கிருஷ்ணன், ஆதித்யா சாரி, சீமா அர்ஜுன், விஸ்வஜித் ஸ்ரீராம், மோஹன், ஸ்ரீராம், ஸ்நேஹா, ஷிவானி, கேசவ் ஆகிய குழந்தைகள் சிறப்பாக நடித்தனர். தொடர்ந்து வந்த 'ரோட்டுக் கடை ஓரத்திலே' என்ற கிராமியப் பாடலுக்கு ப்ரீதா ராஜ், ஷ்ரேயா ஸ்ரீராம் இருவரும் அழகாக நடனமாடினர்.

ரஞ்சனி சுந்தர், ஆதித்யா சுந்தர் இருவரும் ஆத்திசூடியை தமிழில் கூறி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறியது புதுமை. பூமா சுந்தர் ஔவைப் பாட்டியாக நடித்து, இயக்கிய 'சுட்ட பழமா, சுடாத பழமா?' நாடகம் அற்புதம். முருகனாக நடித்த சிறுவன் சுமேஷ் சுந்தரேசன் அழகுத் தமிழில் தெளிவாகப் பேசி பாராட்டைப் பெற்றான்.

ஷாமா ஸரிபு, ப்ரணீகா குமரன், சாகித்யா கௌரி சங்கர் ஆகியோர் வெகு அழகாக நடனம் ஆடினார்கள். தொடர்ந்து கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்களின் தலைமையில், குழந்தைகளை வளர்ப்பது பெரிய சவால் - இந்தியாவிலா / இந்நாட்டிலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இந்தியாவில் சவால் என்று மணி கண்டனின் தலைமையில் சுமதி ராஜகோபால், சுரேஷ் குமார், தீபலக்ஷ்மி மூர்த்தி, வெங்கட கிருஷ்ணன் ஆகியோர் வாதிட்டனர். எதிரணியில் முத்துவேல் தலைமையில் ரவி சுப்ரமணியம், கவிதா செந்தில், ப்ரீதி மணிவாசகம், ரங்கநாதன் சந்திரசேகர் ஆகியோர் வாதிட்டனர். இந்தியாவில் குழந்தை வளர்ப்பதே பெரிய சவால் என நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பகுதிப் புரவலரான லாரன்சு (Channelonline.tv) கௌரவிக்கப் பட்டார். சிறுமி சஹானா ராஜகோபாலன் அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றிபெற்று செட் டாப் பாக்ஸ் பெற்றுக் கொண்டார். பங்கு பெற்றோர் அனைவருக்கும் 'தென்றல்' மாத இதழ் சார்பாகச் சான்றிதழ் வழங்கப்பட்டது. லஷ்மி சேவுகனின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.

சங்கத்தின் தமிழ்ப்புத்தாண்டு விழா ஏப்ரல் 25ம் தேதி அரோரா கோயில் அரங்கில் நடக்க இருக்கிறது.

அலமேலு நாராயணன்

© TamilOnline.com