ஜனவரி 24, 2009 அன்று டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியர் பாடல், இசை, நடனம் எனப் பலவகைத் திறமைகளை வெளிப்படுத்தினர். பெரியவர் ஷ்யாம் சுந்தரின் பொங்கல் விழா பற்றிய உரையும், சிறுமி கண்மணியின் கவிதையும் கருத்தைக் கவர்வதாய் இருந்தன. டாக்டர் மகாலக்ஷ்மியின் உடற்பயிற்சி குறித்த பேச்சு ஈர்த்தது. ‘மறைந்திருந்து பார்க்கும்', பாடலுக்கு பவித்ரா ஆடிய நடனம் அருமை. அச்சுதம் கேசவம், கணேஷ் பஜன், பொங்கலோ பொங்கல், சின்னச் சின்ன வண்ணக் குயில் போன்றவை குறிப்பிடும் படியாக இருந்தன. சிரிக்க சிந்திக்க ஒரு நிமிடம் அருமை. விஷால் சதாசிவம் 'கல்யாண மாலை' மோகன் போன்று பேசியது சிறப்பு. துணைத் தலைவர் ஐயப்பனின் பேச்சு கவிதையாக இனித்தது.
விருந்துக்குப் பின் நடந்த சுமதி சாரங்கனின் பாடல்களும், அர்ச்சனா ஷ்யாம்சுந்தரின் நடனமும் சிறப்பு. சங்கத்தின் செயற்குழு வழங்கிய 'ஊரு விட்டு ஊரு வந்து' நகைச்சுவை நாடகம் சுவையாக இருந்தது. வாசு ரங்கநாதனின் திரைக்கதை வசனமும், ஜோசப்பின் இசையும் அதற்கு மெருகூட்டின. விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த குழுவினரும், நிகழ்ச்சிகளை வழங்கியோரும் பாராட்டுக்குரியவர்கள்.
லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா |