கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 24, 2009 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் செளத் வின்ட்ஸர் மேனிலைப்பள்ளியில் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. டிரம்ஃபுல் தமிழ்ப்பள்ளிக் குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து, இளைஞர் குழாத்தைச் சேர்ந்த இளையோரின் அமெரிக்க தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. சங்கத் தலைவி திருமதி. ஸ்ரீமதி இராகவன் வரவேற்றார்.

அடுத்ததாக அமுல்யா நாராயணனின் ப்யூஷன் / குச்சுப்புடி நடனமும், ஸ்ரீநிதி நம்பிராஜனின் திருமால் பெருமைகளை விளக்கும் புஷ்பாஞ்சலியும், சூர்யா சுந்தரத்தின் திருக்குறள் பரதநாட்டியமும் நடைபெற்றன.

அடுத்து சங்கத்தின் ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்ற ஆண்டின் செயல்பாடுகளும், நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டன. பின் இவ்வாண்டுக்கான புதிய நிர்வாக, செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவியாக திருமதி. ஸ்ரீமதி இராகவன், உபதலைவராக இரமேஷ் நாச்சியப்பன், செயலாளராக இரமணன் ஸ்ரீநிவாசன், துணைச் செயலாளராக இந்திரக்குமார் ரங்கநாதன், பொருளாளராக நடராஜன் குப்புராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

அடுத்ததாக "அமெரிக்க வாழ்வில் பெரிதும் பங்களிப்பது ஆண்களா? பெண்களா?" என்ற தலைப்பில் விஜய் டிவியில் வரும் 'நீயா? நானா?' போன்றதொரு விவாத அரங்கம் நடைபெற்றது. இதை இரமணன் ஒருங்கிணைத்து சிறப்பாகக் கொண்டு சென்றார். கனெக்டிகட் வாழ் தமிழ் மக்கள் சுமார் 325 பேர் கலந்து கொண்டனர்.

உமா சேகர், கனெக்டிகட்

© TamilOnline.com