விவேகானந்தர் ஓவியப் போட்டி
தேசபக்தியும் தெய்வ பக்தியும் இருகண்களாகக் கருதியதோடு, அன்னிய ஆட்சியில் தன்னம்பிக்கை இழந்து கிடந்த இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமிதம் ஊட்டிய ஆன்மீகச் சிங்கம் விவேகானந்தர். அவரது பிறந்த நாளான ஜனவரி 12ஐ இந்திய அரசு தேசிய இளைஞர் தினமாக அறிவித்திருந்த போதிலும், எந்த அரசியல் லாபமும் இல்லாத காரணத்தால் மாநில மத்திய அரசுகள் அதனை மறந்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனாலும், அவரது அமெரிக்க விஜயத்துக்கு உறுதுணையாக இருந்தவர் ராமநாதபுரம் மகாராஜா. சென்னை ராமகிருஷ்ண மடத்தின்மீது விவேகானந்தருக்கு விசேடத் தொடர்பு இருந்தது. கன்னியாகுமரியின் அலை மோதும் பாறைமீது அமர்ந்துதான் அவர் பாரதமாதாவின் தரிசனம் பெற்றார்.

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டுச் சென்னையிலிருந்து வெளிவரும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் என்னும் தமிழ்ப் பத்திரிகை ஒரு ஓவியப் போட்டியை நடத்தியது. அதில் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் முதல் கேரளா, நாகாலாந்து, ஸ்ரீலங்கா வரை, முறையாக ஓவியம் பயின்றவர்கள் முதல், ஆர்வத்தால் வரைபவர்கள் வரை கலந்துகொண்டு 20,300 ஓவியங்களை அனுப்பி வைத்தனர். இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் விவேகானந்தர் இல்லத்தில் ஜனவரி மாதத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டன.

அரசுகள் மறக்கலாம், மக்கள் மாமனிதர்களை மறப்பதில்லை.

அரவிந்த்

© TamilOnline.com