தெரியுமா?: Catch Your Mind திரைப்பட டிவிடி வெளியீடு
தென்றல் அக்டோபர், 2008 இதழில் வெளியான 'Catch Your Mind' திரைப்பட வெளியீட்டைப் பற்றிய செய்தியை அடுத்து, அப்படம் அமெரிக்காவில் பத்து இடங்களில் வெளிவந்து மூன்று ரன்களையும் கடந்து விட்டது. ஓரிரு வாரங்களில் கனடா, இங்கிலாந்து, நார்வே ஆகிய நாடுகளில் வெளிவரத் தயாராக உள்ளது. ஏப்ரல் 7, 2009 தேதி இப்படத்தின் டிவிடி உலகெங்கிலும் கிடைக்கப்பெறும். அதற்கான முன்பதிவை மார்ச் 3ம்தேதி முதல் செய்யத் தொடங்கலாம். பிரத்யேகச் சலுகையைப் பெற விரும்புவோர் www.catchyourmind.com என்ற இணைய தளத்தைத் தொடர்பு கொள்ளவும்.

ஆங்கில மொழியில் மட்டுமே சப்-டைட்டிலுடன் வெளிவர இருக்கும் இந்த டி.வி.டி 'பிளாக் பஸ்டர்' மற்றும் 'நெட்ஃப்ளிக்ஸ்' மூலமும் கிடைக்கும். குடும்பப் பாங்கான திரைப்படங்களைத் தேர்வு செய்யும் (dove.org) அமைப்பினர், இப்படத்திற்கு மூன்று நட்சத்திர அங்கீகாரம் அளித்துள்ளனர். டிவிடியின் அட்டையில் டவ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்படும் என்ற செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்ட இப்பட இயக்குனர் சுவாமி கந்தன், ஹூஸ்டன், கன்ஸஸ் சிட்டி, நியூஜெர்ஸி, ஏலன்டவுன் ஆகிய நகரங்களில் சில பள்ளிகளில் அவற்றின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் (P.T.A.), இப்படத்தைத் திரையிட்டு நிதி திரட்டி, தங்கள் ‘ரோபோடிக்ஸ்' சாதனைகளை மேம்படுத்திக் கொள்கின்றன என்றும் தெரிவித்தார்.

இப்படத்தைத் தமிழில் இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சுவாமி கந்தன். முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் பிரகாஷ்ராஜ்-நதியா நடிக்கக் கூடும் என்ற செய்தியைத் தெரிவித்த அவர், இப்படம் வெளியானபோது 'தென்றல்' அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார். தென்றல் தமிழர்களின் சாதனைகளைப் பிரதிபலிப்பது போல் தாமும் ஒரு முயற்சியில் இறங்கியிருப்பதாகவும், அதைப் பற்றிய விவரங்களை நேரம் வரும்போது தெரிவிப்பதாகவும் கூறினார். அவரது முயற்சிகளுக்குத் தென்றலின் வாழ்த்துகள்!

காந்தி சுந்தர்

© TamilOnline.com