தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?
2008 பொருளாதார ரீதியில் பெரும் விபத்தான வருடமாகிவிட்டது என்றால் அது ஒரு குறைவாக்கு (understatement) என்றே சொல்லலாம். போன வருடம் நல்லதாகத் தான் ஆரம்பித்தது. பாதி வரையிலும் கூட, பொருளாதார புயல் சின்னங்கள் இருந்தாலும் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு நிதிச் சூழ்நிலையும் வணிகத் தேவைப்பாடும் நல்லதாகத்தான் தோன்றியது. ஆனால் பின்பாதியோ... சொல்லவே வேண்டாம்!

2009ல், அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாவம், ஒருவரே எவ்வளவுதான் செய்ய முடியும், இந்த அளவுக்கான அதிக எதிர்பார்ப்பே அவருக்கு முரணாகிவிடுமோ என்பது வேறு விஷயம். ஆனால், அமெரிக்க அரசும் மற்ற உலகப் பொருளாதார வல்லரசுகளும் (சீனா உள்பட) பொருளாதாரம் மீண்டும் வளரத் தூண்டுதல் திட்டங்களோடு பெரும் பிரயத்தனம் செய்ய உள்ளன என்பது நிச்சயம்.

அந்தப் பின்னணியில் நம் விஷயத்துக்கு வருவோம். ஆரம்ப நிலை நிறுவனங்கள் இந்தச் சூழ்நிலையில் எப்படிப் பிழைப்பது என்றும், அதற்கும் மேலாக, தழைத்து மீண்டும் வளர்வது எப்படி என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் சமீப காலமாக என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பியுள்ள பல கேள்விகளும் அவற்றைப் பற்றிய என் கருத்துக்களும் 'கதிரவனைக் கேளுங்கள்' பகுதியில் இடம்பெறுகின்றன.

கேள்வி: கடந்த வருடம் பெரும் விபத்தாகி விட்டதே! இந்தச் சூழ்நிலையில் என் ஆரம்ப நிலை நிறுவனம் எப்படி நடந்து கொண்டால் பிழைத்துக் கொள்ள முடியும்?

பதில்: பிழைப்பது மட்டுமல்லாமல் தழைக்கவும் கூடும். ஆனால் எல்லா நிறுவனங்களுக்கும் இது சாத்தியம் என்று நான் சொல்ல வரவில்லை. பொதுவாக என்ன செய்தால் அதற்கான வாய்ப்பு அதிகரிக்கக் கூடும் என்றுதான் இக்கட்டுரையில் மேற் கொண்டு விளக்குகிறேன்.

தழைப்பதென்பது கேட்க என்னவோ மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது! ஆனால், அதற்கு அப்புறம் வருவோம். முதலில் பிழைப்பைப் பற்றிப் பார்ப்போமா, ப்ளீஸ்? வாடிக்கையாளர்கள் வறண்டு விட்டார்கள், வணிகத்தை அதிகரிப்பது எப்படி? எனக்குத் தெரிந்த ஆரம்ப நிலை நிறுவனங்கள் சில மூலதனமே கிடைக்காமல் மூடப்பட்டு விட்டன... மூலதனக்காரர்கள் (VCs) என்ன நினைக்கிறார்கள்? அவர்களிடம் மூலதனம் சேர்ப்பது எப்படி?

அம்மாடியோவ்! ஒரே மூச்சுல இவ்வளவு கேள்வி கேட்டா எப்படி! கொஞ்சம் மூச்சு வாங்கிக்குங்க. ஒவ்வொண்ணா பதில் சொல்றேன். உங்க முதல் முக்கியமான கேள்வி என்ன? அப்புறம் மற்ற கேள்விகளைப் பார்க்கலாம்.

கேள்வி: மூலதனம் கிடைக்கற வரைக்கும் பிழைச்சிருக்கறது எப்படின்னு முதல்ல சொல்லுங்களேன்?

பதில்: சரி. முக்கியமான முதல் கேள்வி தான். இது ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான முதல், அதாவது அடிப்படையான விதியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அந்த அடிப்படை விதி எளிதாகக் கூறிவிடலாம்:

"தழைக்கும் வாய்ப்பு மீண்டும் வரும்வரை எப்படியாவது பிழைத்திருக்க வேண்டும்."

உங்களுக்கென்ன ஈஸியா சொல்லிட்டீங்க, செய்ய வேண்டியது நாங்க இல்லையா, எப்படி அதைச் செயல்படுத்தலாங்கற விஷயத்துக்கு வாங்கன்னு நீங்க முணு முணுப்பது எனக்குக் கேட்கிறது. அது சரி தான் - கூறிவிடுவது வெகு எளிது, ஆனால் செயலாக்குவது மிகக் கடினம்தான், ஒத்துக் கொள்கிறேன், செயல்முறைகளை இப்போது விளக்குகிறேன்.

வெறுமனே பிழைத்திருப்பதில் ஒரு பயனுமில்லை. கூடிய சீக்கிர வருங்காலத்தில் அதாவது, பொருளாதார நிலையோ, வணிகத் தேவையோ முன்னேறி, ஓரிரண்டு வருடங்களுக்குள் தழைத்து வளரக் கூடும் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் தான் இந்த விதிக்கு அர்த்தமே உள்ளது. அப்படி இல்லாவிட்டால், நிறுவனத்தை மூடிவிட்டு வேறு நல்ல வாய்ப்பைத் தேடிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்!

சரி, தழைக்கும் வாய்ப்பிருக்கும் நிறுவனம் என்று வைத்துக் கொள்வோம். தருணம் வரும்வரை எப்படிப் பிழைத்திருப்பது என்பதுதான் கேள்வி. அதற்குச் சில உபாயங்கள் உள்ளன. அவற்றை இப்போது விளக்குவோம்.

இந்தப் பொருளாதார உருச்சிதைவு ஆரம்பித்தவுடனேயே, ஆரம்ப நிலை மூலதன நிறுவனமான ஸெக்கோயா (Sequoia) தாங்கள் மூலதனமிட்ட நிறுவன அதிபர்களூக்கு, அனுப்பிய வரைகலைக் கட்டுரை (presentation) இந்த பிழைப்பு வழிமுறைப் பட்டியலுக்கு முன்னுரையாக, அமைந்துள்ளது. இக்கட்டுரையை, www.docstoc.com என்ற மின்வலை முகவரியில் காணலாம். அக்கட்டுரையில் அடுத்த பன்னிரெண்டு மாதங்களின் செலவுக்கான தொகை கையில் இல்லாவிட்டால் அந்நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அடித்துக் கூறியுள்ளார்கள்.

ஆனால், வெறுமனே பிழைப்பதற்காக மட்டும் வழிகாண்பது பயனளிக்காது. அது மொத்தமான மறைவைத் தள்ளிப் போட்டு மெல்ல மெல்ல அழிவதற்கு வழிவகுப்பதாகத் தான் இருக்கும். வருங்காலத்தில் தழைப்பதற்கான அடித்தளம் அமைக்கும்படி செயல்பட வேண்டும். அதனால், நீங்கள் உங்கள் பாதாள அறையில் பதுங்கியிராமல், வெற்றிப் பாதைக்கு வழி வகுக்க என்ன செய்ய வேண்டும் என்றே இனி வரும் பட்டியல் வழிமுறைகளை எடுத்துக் காட்டும் என நம்புகிறேன்.

பட்டியலைக் காணும் முன் ஒரு சிறு விளக்கம்: மூலதனமென்பது தற்போது குதிரைக் கொம்பைவிட அரியதாகியுள்ளது. நல்ல வணிக நிலையுள்ள நிறுவனங்கள் கூட எப்போது அடுத்த மூலதனச் சுற்று, எம் மாதிரி நிபந்தனைகளுடன் கிடைக்கக் கூடும், கிடைக்குமா இல்லையா என்றே கூடத் தடுமாறித் ததிங்கணத்தோம் போட்டுக் கொண்டுள்ள நிலை. அதனால், வரும் பட்டியல், ஆரம்ப நிலை நிறுவனங்கள் எப்படி நடந்து கொண்டால், மூலதனத்தார் மீண்டும் மூச்சு விட ஆரம்பிக்கும்போது நல்ல வணிக நிலையில், மூலதனத்தைக் கவரும் வாய்ப்பாக (attractive investment opportunity) இருக்கக்கூடும் என்று காட்டுவதற்கான முயற்சி. இது செய்தால் மூலதனம் நிச்சயமென்பதல்ல. இப்படி இல்லாவிட்டால் மூலதனத்துக்கான வாய்ப்பு வெகு குறைவு என்பதுதான் நிச்சயம்!

ஒன்று குறிப்பிடத்தக்க விஷயம்: தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை, எல்லா நிறுவனங்களையும் பாதித்துள்ளது. அதனால், உங்கள் நிறுவனம் தத்தளிக்கிறது என்றால் உங்களோடு போட்டியிடும் நிறுவனங்களும் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், தற்போதைய தடங்கலை, ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, உங்கள் நிறுவனத்தின் விற்பொருட்களயும் சேவைகளையும் போட்டியாளர்களை விட எவ்வாறு சிறப்பாக்கி, சந்தையில் இன்னும் உயர்ச்சி பெறக் கூடும் என்று எண்ணி செயல்பட வேண்டும்.

அதற்கான சில குறிப்புக்களை அடுத்துப் பார்ப்போம். என்னடா, பிழைப்புக்கே கஷ்டமென்றால், எப்படி உயர்வது என்பதைப் பற்றி எதற்கு வியாக்கியானம் என்று எண்ணி விடாதீர்கள். வெறுமனே பிழைத்திருப்பதில் ஒரு புண்ணியமுமில்லை என்பதால், உயர்வதற்குத் தயாராகப் பிழைத்திருப்பதைப் பற்றியவைதான் இனிவரும் குறிப்புக்கள். அவற்றை வரும் இதழ்களில் பார்ப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com