டிசம்பர் 20, 2008 அன்று தேதி, டொரண்டோ, கனடாவில் அறிஞர் அண்ணா நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது. கனடாவில் கடந்த பதினான்கு ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தமிழன் வழிகாட்டி' பதிப்பகத்தின் உரிமையாளர் செல்லையா செந்தியின் முயற்சியில், ஸ்கார்பரோ பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் காரிஜியானிஸ் தலைமையில் ஆதவன் பப்ளிகேஷன்ஸ் நிறுவன அலுவலகத்தில் இவ்விழா நடந்தது.
கனடாவில் இருக்கும் அனைத்து வசதிகளையும், அதாவது மருத்துவர்கள், ஹேண்டிமேன் போன்றவற்றைப் பட்டியலிட்டுத் தொகுத்து அளிக்கப்படும் நூல் ‘தமிழன் வழிகாட்டி'. இது தற்போது 1760 பக்கங்களுடன் வெளியாகிறது. வர்த்தக அமைப்புகளைப் பற்றி மட்டுமல்லாமல், ‘முதல் முதல்' என்ற பிரத்யேகப் பகுதியில், கனடாவில் வாழ்ந்த முதன்மைக் கலைஞர்கள், இயங்கிய வானொலி ஆகியவற்றின் தகவல்களையும் தொகுத்து வழங்குகிறது. தவிர முத்தமிழ் தமிழில் உரையுடன் திருக்குறள் பதிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.
இத் தபால்தலைகள் இந்தப் பதிப்பகத்தில் மட்டுமே கிடைக்கப்பெறும். புத்தக வெளியீடு மட்டுமல்லாமல் ‘வர்த்தகச் சோலை' ஒன்றையும் ஆண்டுதோறும் மே மாதம் ஆதவன் பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறது.
காந்தி சுந்தர் |