பிப்ரவரி 3, 2007 அன்று ரெட்வுட்ஸிடி கானடா கல்லூரியில் செல்வி. நீரஜா வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் அபிநயா நாட்டியக் குழுமத்தின் சார்பில் நடைபெற்றது. இவர் குரு மைதிலி குமார் அவர்களின் சிஷ்யை.
நீரஜாவின் சகோதரி வித்யா அமிர்தவர்ஷிணியில் கணபதி வந்தனம் பாட, கம்பீர நாட்டையில் தொடர்ந்தது புஷ்பாஞ்சலி. கணேச ஸ்லோகமும் அதையடுத்து 'கஞ்சதளாயதாக்ஷ¢' எனும் பாடலில் காமாட்சியின் கண் அழகை
விவரித்த விதமும் அற்புதம்.
ஜதிஸ்வரத்தில் சிறந்த தாளக்கட்டையும் தீர்மானத்தையும் பார்க்கமுடிந்தது. பின் தண்டாயுதபாணிப் பிள்ளை அவர்களின் ராகமாலிகை வர்ணத்தை மைக்கில் அங்க அசைவுகளுடன் எடுத்துச் சொன்ன விதம் கச்சிதம். தாளம்
துளியும் பிசகாமல், யதார்த்தமாய் மாறிய முகபாவங்களுடன் அவையினரை வர்ணத்தில் வியக்க வைத்தார் நீரஜா.
சஹானா ராக பதத்தில் கண்ணனின் வர்ணனை கண் முன்னால் இன்னமும் நிற்கிறது.
'தாதை என்று ஆடுவார்' என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலில் சிதம்பர நாதனின் ஆனந்த தாண்டவத்தில் 'மத்தளம் கொட்ட, சங்கு முழங்க, தண்டை ஒலிக்க' என்னும் இடத்தில் தனித்தனியாக ஒரு நிமிட வாசிப்பில்
மிருதங்கம், மோர்சிங் வித்வான்கள் இருவரும் சபையினரை லயிக்கச் செய்தனர். மாணவியின் உருக்கமான முகபாவம், அனுபவித்து ஆடியது ஆகியவற்றில் குரு மைதிலி குமார் அவர்களின் போதிக்கும் திறமையும்,
மாணவியின் ஆர்வத்துடன் கூடிய உழைப்பும், தன்னம்பிக்கையும் பளிச்சிட்டன.
அடுத்து புரந்தரதாசரின் 'ஆடவேஹோதல்லே' எனும் ராகமாலிகைப் பாடலில் பூதனை, சகடாசுர வதங்கள், தயிர் கடைதல், பால் கறத்தல் ஆகிய காட்சிகளில் மிடுக்குடன் கூடிய முகபாவம் மிக்க அருமை.
கடைசியாக ரேவதி ராகத்தில் லால்குடி ஜெயராமனின் தில்லானா. அதன் வேகத்துக்கேற்பத் தாளம் தவறாமல் விறுவிறுப்புடன் ஆடியது அபாரம். சிறந்த பக்கவாத்தியக் குழுவினருடன் ஆஷா ரமேஷ் அவர்கள் பாடல்களை
உருக்கமாகப் பாடினார். நீரஜாவின் நாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றம் போல் இல்லாமல் தேர்ச்சி பெற்ற நிகழ்ச்சியாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
சீதா துரைராஜ் |