ஐ.டி. மாப்பிள்ளை
கம்பெனி விஷயமாக இந்தியா போயிருந்தபோது சென்னையில் ஒரு திருமணத்தில் சில பழைய நண்பர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலத் திருமணங்கள், சமூக மாற்றங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பெற்றோர் நிச்சயிக்கிற திருமணங்கள் குறைந்து விட்டது பற்றி ஒருவர் வருந்தினார்.

"என் பையன் சியாம் நான் பண்ணி வைக்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணிப்பான். அவனுக்குக் கல்யாணத்துக்கு பொண் பார்த்திட்டு இருக்கோம். ஒண்ணும் சரியா அமையல. உனக்குத் தெரிஞ்ச பெண் யாராவது இருந்தா சொல்லு" என்றார் நண்பர் ரகுராமன்.

"என்ன படிச்சிருக்கான் உன் பிள்ளை? என்ன வேலையில இருக்கான்?" என்றேன்.

"பி.காம் படிச்சிருக்கான். அக்கவுண்டண்டா வேலை செய்யறான். மாசம் 15000 வரது. நல்ல பையன். தப்புத் தண்டாவுக்கு போறவன் இல்ல. ‘திருமண மையம்' வெப் சைட்ல போட்டோம். பதிலே இல்ல. வர குருப்பெயர்ச்சியிலே தான் நடக்கும்னு ஜோசியர் சொல்றார்."

"வரதட்சிணைனு ஏதாவது பெரிசா எதிர்பார்க்கிறீங்களோ?" என்று என் சந்தேகத்தைக் கேட்டேன்.

##Caption## "வரதட்சிணையாவது. யாரும் இப்ப கேட்கறதில்ல. எனக்கு வரதட்சிணை வரல என்று ஒத்தர் கல்யாணத்தில கேட்கப் போக அவரைப் போலீசு புடிச்சிட்டு போயிட்டாங்க. அப்புறம்தான் தெரிஞ்சிது, அவர் கல்யாணத்தைப் பண்ணி வெச்ச புரோகிதர். கல்யாணம் செஞ்சு வெச்சதுக்கு தனக்கு வர வேண்டிய தட்சிணை வரலன்னு சொல்லியிருக்காருன்னு."

நான் இங்கே இருக்கப்போவது இன்னம் பத்து நாள். அதுக்குள்ள என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரிஞ்ச உறவினரின் பெண் மாலினி நினைவுக்கு வந்தாள். உடனேயே அவள் தந்தைக்கு போன் போட்டு ரகுராமன் பையனைப் பற்றிச் சொன்னேன்.

"நாங்களும் கல்யாணம் பண்ணிக்கோனு அஞ்சு வருசமா மாலினிய நச்சரிக்கறோம். நீங்க முயற்சி எடுத்து செஞ்சா எங்களுக்கு சந்தோஷம்தான்" என்றார்.

"அப்ப நீங்க டைம் சொன்னா பையனை அழைச்சிட்டு வீட்டுக்கு வரேன்."

"நோ.. அது சரியா வராது. இப்ப எல்லாம் பெண் பார்க்கிற சம்பிரதாயத்தைப் பெண்கள் விரும்பறதில்ல. ஏதாவது ஓட்டல்ல சந்திக்கறதே நல்லதுங்கிறாங்க. மாலினி செல் நம்பர் தரேன். கூப்பிட்டுச் சொல்லுங்கோ. அவளுக்குச் சம்மதம் இருந்தா சரி. எங்க பார்க்கிறதுனு ஏற்பாடு பண்ணிக்கலாம். இந்தக் காலத்துப் பொண்கள் முன்ன மாதிரி இல்ல. அவங்க ஓகே சொல்லாம எதுவும் செஞ்சிட முடியாது."

மாலினியை செல்லில் அழைத்தேன். ஜாலியாகப் பேசினாள். மெதுவாக விஷயத்தைச் சொன்னதும் உஷாராகிவிட்டாள்.

"அங்கிள், இது எங்க அப்பா ஐடியாதானே. எனக்குச் சில கண்டிஷன் உண்டு. அதுக்கு சரின்னா மேற்கொண்டு கல்யாணத்தைப் பத்திப் பேசலாம்" என்றாள்.

"என்ன கண்டிஷன்?"

"பையனைச் சில கேள்விகள் கேட்பேன். அதை எல்லாம் உங்ககிட்ட இப்ப சொல்லிட்டு இருக்க முடியாது அங்கிள், இங்க என் மானேஜர் வந்திட்டு இருக்கார், அப்புறம் பேசலாமா?"

"நீ இடம், டைம் சொன்னா பையனை அழைச்சிட்டு வரேன்... நான் இன்னும் சில நாளில ஊருக்கு போகணும். அதுக்குள்ள இது முடிஞ்சா..."

"ஓ.கே. நாளைக்கு சாயங்காலம் மூணுலேருந்து நாலு வரை ஷெராட்டன்ல ஒரு செமினார்ல இருப்பேன். உங்களால வர முடியுமா? நாலு பத்துக்குக் கீழ லாபியில பார்க்கலாமா? பையனை அழைச்சிட்டு வந்து உட்கார்ந்து இருங்க. பிளான்ல ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லுங்க."

ரகுராமன் பையனிடம் தொடர்பு கொண்டேன். "நாலு மணிக்கு கஷ்டம் அங்கிள். பஸ் பிடிச்சு வர நேரமாயிடும்" என்றான்.

"ஆட்டோ, டாக்சி ஏதாவது பிடிச்சிட்டு வா. சார்ஜ் நான் கொடுக்கறேன். நாலு மணி, ஷெராட்டன் சரியா?"

நாலுமணிக்கு நான் ஷெராட்டன் வரவேற்பறையில் இருந்தேன். கவுன்ட்டரில் ஒரு பெண் இருந்தாள். பார்ப்பதற்கு டிவியில் வரும் மகேஸ்வரி போல இருந்தாள். சிரிப்பு சற்று செயற்கையாய் இருந்தது. "லைஃப்ல சில விசயம் முன்னபின்னதான் இருக்கும். நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும்" என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

செமினார் முடிந்து மாலினி வந்தாள். என்னருகில் அமர்ந்து நலன் விசாரித்தாள். சுற்று முற்றும் பார்த்து "வேர் ஈஸ் யுவர் ஃபிரண்ட்" என்று கேட்கும் போது வேர்க்க விறுவிறுக்க சியாம் வந்து சேர்ந்தான். "ஷேர் ஆட்டோ புடிக்க நேரமாயிடுத்து" என்றான்.

"நல்ல வேளை சைகிள்ல டபுள்ஸ் வராம இருந்தீங்களே. பை த வே ஐ ஆம் மாலினி. யு ஆர் ஷ்யாம், ரைட்?" என்று கேட்டு கை நீட்டினாள். சியாம் கைகுலுக்காமல் வணக்கம் சொன்னான்.

"லெட் அஸ் கெட் டு பிசினஸ்... இந்த அங்கிள் நம்மை மாட்ச் பண்ண ஆசைப்படறாரு. உங்களை நான் சில கேள்விகள் கேட்பேன். பதில் சொல்லுங்க"

"ஓகே" என்றான் சியாம்.

"என்ன வேலை பண்றீங்க?"

"அக்கவுண்டண்ட்"

"சம்பளம்?"

"மாசம் பதினஞ்சாயிரம். அடுத்த மாசம் ஆயிரம் ரூவா போனஸ் தரப் போறாங்க."

"வாவ். ஒன் தெளசண்ட்" என்றாள் எகத்தாளமாக.

"உங்களுக்கு சொந்தமா அபார்ட்மெண்ட் இருக்கா, சியாம்?"

"இல்ல. வாடகை வீட்லதான் சேர்ந்து இருக்கோம்"

"கார் இருக்கா?"

"இல்ல"

"டூ வீலர்?"

"இல்ல. அடுத்த வருசம்தான் அதற்கு லோன் போட ஆபீசில அனுமதி கிடைக்கும்"

"உங்களுக்கு அப்பா, அம்மா இருக்காங்களா?"

"யெஸ்"

"ஆர் தே இன் குட் ஹெல்த்?"

"அப்பாவுக்கு இரத்த அழுத்தம், அம்மாவுக்கு டயபிடீஸ்"

"கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க நம்ம கூட இருக்கப்படாது, ஓ.கே.?"

"ஓ.கே."

"கல்யாணமாகாத ஸிஸ்டர்ஸ் உண்டா உங்களுக்கு?"

"அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுத்து. ஒரு தங்கை. ப்ளஸ் டூ படிக்கறா."

"குட். தங்கைக்குப் படிப்பு, கல்யாணம், அக்காவுக்கு சீர் வரிசை செலவு என்ற பேச்சே கூடாது. கல்யாணத்துக்கு அப்புறம் உங்க சம்பளத்தை நமக்குப் பொதுவா ஒரு அக்கவுண்ட்ல போடணும். என் பணத்தை மட்டும் நான் தனியா ஒரு அக்கவுண்ட்ல வெச்சிப்பேன். நீங்க அதுக்குக் கணக்கு கேட்கப்படாது. சரியா?"

சியாம் "சம்மதம்" என்பது போல ஏதோ முணுமுணுத்தான்.

"நெள... மிஸ்டர் சியாம், வாட் ஈஸ் அ ட்ரிக்கர்?"

எனக்கே தூக்கி வாரிப்போட்டது. துப்பாக்கி விசைக்குதான் டிரிக்கர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எதுக்கு அந்த விவரம் இவளுக்கு.

"ட்ரிக் பண்றவங்களை ட்ரிக்கர் என்போம்" என்றான் சியாம். அவன் மிகவும் குழம்பியிருந்தான்.

"ஐ டோண்ட் பிலீவ் திஸ்... என்னா சார் இது? ஹி ஈஸ் அன் அக்கவுண்டண்ட்" என்றாள் என்னைப் பார்த்து.

##Caption## நல்ல வேளை எனக்குப் பல வருசம் முன்னாலயே கல்யாணம் ஆயிடுத்து. இது மாதிரி ஒரு பெண் இண்டர்வ்யூ எடுத்து அதிலே பாஸ் பண்ணினாதான் கல்யாணம்னா எனக்கு இன்னமும் கல்யாணமே ஆயிருக்காதோ என்று தோன்றியது.

"ட்ரிக்கர்னா டெக்னிகலா ஏதாவதா?" என்றேன்.

"அது ஒரு டெட்டாபேஸ் ப்ரோஸீஜர். இவருக்குக் கம்ப்யூட்டர் பத்தி ஒண்ணுமே தெரியல. சியாம், நீங்க ஏதாவது என்னைக் கேட்கணுமா?"

சியாம் ஏதோ கேட்க வந்து பிறகு மனதை மாற்றிக்கொண்டு மறுப்பில் தலையாட்டினான்.

"ஓ.கே. அங்கிள். உங்க முயற்சிக்கு தாங்ஸ். ஐயாம் ஸாரி. சியாம் ஈஸ் நாட் ஃபார் மி. சியாம் உங்களுக்கு நல்ல மனைவி அமைய என் வாழ்த்துகள். அடுத்த வருசம் ஸ்டேட்ஸுக்கு போக முயற்சிக்கிறேன். அங்கிள் உங்க ஈமெயிலுக்கு இன்பர்மேஷன் கேட்டு லெட்டர் போடறேன். ஹெல்ப் பண்ணுங்க, ப்ளீஸ்."

அவள் விடைபெற்றுப் போனாள்.

"இப்ப பொண்களெல்லாம் தலை சிலுத்துப்போய் அலையறாளுக. இவ கேள்வி கேப்பாளாம். நான் பதில் சொல்லணுமாம். நானும் கேக்கலாம்னுதான் இருந்தேன், நாலாம் வேற்றுமையின் உருபு என்னனு. வேணாம்னு விட்டுட்டேன். உங்க உதவிக்கு நன்றி சார்" என்று சியாமும் விடைபெற்றான். நான் சில நிமிடங்கள் உறைந்து போய் சோபாவில் அமர்ந்திருந்தேன்.

பிறகு எழுந்ததும், "மகேஸ்வரி" கண்ணில் பட்டாள். இவள் சியாமுக்கு நல்ல மேட்சோ? வாழ்க்கையில அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகணும்னு சொன்னாளே, இவளைக் கேட்டால் என்ன? இதில் காசா பணமா, கேட்போமே என்று தோன்றியது. அவள் அருகே போனேன்.

"ஹலோ மிஸ். உங்களை ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே?"

"இல்ல. கேளுங்க."

"உங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சா?"

"இல்ல"

"எதுக்குக் கேட்டேன்னா..."

"நல்லாவே தெரியுது அங்கிள். நாலு மணியிலேருந்து நீங்க என்னை வாட்ச் பண்றீங்க. கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்கறீங்க. ஏன் இந்த வயசிலே இப்படி ஜொள்ளு விடறீங்க. உங்களைப் பாத்தா என் அப்பா மாதிரி இருக்கு. வேற யாராவது இப்படிக் கேட்டிருந்தா நான் வேற விதமா டீல் பண்ணிருப்பேன்."

"அதில்லம்மா. தப்பா புரிஞ்சிக்கிட்டே. எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். அக்கவுண்டண்ட். உனக்கு மேட்ச் ஆகும்னு தோணுது. அதுக்குதான் கேட்டேன். உங்க அப்பா அம்மா விலாசம் கொடுத்தா முறையா அவனை பொண் பார்க்க அழைச்சிட்டு வருவேன்."

"யார் சார் அது. கொஞ்ச நேரம் முன்னால ஒருத்தர் இருந்தாரே அவரா?"

"ஆமா"

"ஆளு ஓக்கே. ஆனா என்ன சம்பாதிக்கிறாரு?"

"மாசம் பதினஞ்சாயிரம்."

"ஸ்டாப் ரைட் ஹியர் அங்கிள். இந்த ஆளு வேண்டாம்."

"ஏம்மா நல்ல ஃபாமிலி. அப்பா அம்மா தங்கம். சிஸ்டர் படிக்கறா. பையன் நல்லவன்"

"அங்கிள் அதெல்லாம் சரி. நானே அதிகப் படிப்பில்லாம போன் அடிச்சா ‘ஷெராட்டன். மே ஐ ஹெல்ப் யூ'ன்னு கேட்டுக்கிட்டு மாசம் இருபத்தஞ்சாயிரம் ரூவா சம்பாதிக்கறேன். இந்தப் பதினஞ்சாயிரம் கேசை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னால மானேஜ் பண்ண முடியாது. இங்க காஸ்ட் ஆஃப் லிவிங் தெரியுமா உங்களுக்கு?"

அப்போது போன் மணியடிக்க, "ஷெராட்டன். மே ஐ ஹெல்ப் யூ" என்று சொன்னவாறே கையால் ஒரு சல்யூட் அடித்து என்னைப் போகச்சொல்லி ஜாடை காட்டினாள்.

எனக்கு அவமானமாக இருந்தது. மாலையில் சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது யாரும் இதைக்கேட்டு அதிசயப்படவில்லை. ஐடி வேலையில அதிக சம்பளம் வந்தப்பறம் நாட்டுல பெரிய மாற்றம் வந்துடுத்து. பணமே குறின்னு ஆயிடுச்சு. குடும்பம் குடித்தனம் எல்லாம் இரண்டாம் பட்சமாயிடுத்து. மனித உறவுகள் எல்லாம் துச்சமாயிடுத்து. இது புரியாம நீங்க இதுல தலையிடாதீங்க என்று அறிவுரை சொன்னார்கள்.

அன்றிரவே அமெரிக்காவிலிருந்து என் ஆபீசில் கூப்பிட்டு, மும்பைக்குப் போய் ஒரு கிளையண்டுக்கு உதவி செய்யச் சொன்னார்கள். மும்பைக்குப் போனவனை அங்கிருந்து பாங்காக், பாரிஸ் என்று போகச் சொல்லிக் கழுத்தறுத்தார்கள். வேலைப்பளுவில் சியாமை மறந்தே போனேன். அங்கிருந்து இரண்டு மாதம் கழித்து அமெரிக்கா வந்ததும் எனக்கு வந்திருந்த கடிதங்களில் சியாமின் திருமண அழைப்பும் இருந்தது. திருமணம் கடந்த மாதமே முடிந்திருந்தது.

ரகுராமனைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்னேன்.

"சியாமுக்கு பேப்பர்ல புதுசா விளம்பரம் கொடுத்தேன். ஏகப்பட்ட வரன் வந்துது. எங்களுக்கு ஏத்த வரனா பிடிச்சு, சியாமுக்கு கல்யாணமும் பண்ணியாச்சு. மருமகள் ஆரகிள் டிபிஏ. நல்லா சம்பாதிக்கறா" என்றார் மகிழ்ச்சி பொங்க.

"என்ன விளம்பரம் கொடுத்தீங்க"

"ஐடி எக்ஸ்பர்ட்டுக்கு மணப்பெண் தேவை; சம்பளம் 2 லட்சம்; வெளிநாடு போக வாய்ப்பு உண்டு; பாஸ்போர்ட் இல்லாதவர்கள் வாங்கி வைக்கவும்; தபால் பெட்டி எண்.... ...க்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்."

"என்ன இருந்தாலும் நீங்க செஞ்சது தப்பில்லையா? எப்படிப் பொய்யா ஒரு விளம்பரம் போடலாம்?"

"எதை நீ பொய்னு சொல்லறே? ஐ.டி. எக்ஸ்பர்ட்னா இன்கம்டாக்ஸ் எக்ஸ்பர்ட்னு அர்த்தம். அதானே சியாம் செய்யறான்? இன்பர்மேஷன் டெக்னாலஜில எக்ஸ்பர்ட்னு நீ புரிஞ்சிக்கிட்டா உன் தப்பு. சம்பளம் வருசத்துக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் வரதே. மாசத்துக்கு 15,000னு போட்டா தானே வம்பு? வெளிநாடு போக வாய்ப்பு உண்டுதான். அவன் கம்பெனிக்கு சிலோன்ல ஒரு கிளை இருக்கு. சிலோன் சண்டை முடிஞ்சு அவனுக்கு அங்க டிரான்ஸ்பர் கிடைச்சா வெளிநாடுதானே. எதுக்கும் பாஸ்போர்ட் வாங்கி வெச்சிக்கிறது நல்லதுதானே. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணும்பாங்க. பொய்யே சொல்லாம பண்ணியிருக்கேன். அதைப் பாராட்ட மாட்டியா?"

"சியாம் சந்தோஷமா இருக்கானா, கல்யாணத்துக்கு அப்புறம் பிரச்சனை ஒண்ணும் இல்லியே" என்றேன்.

"கல்யாணத்துக்கு அப்புறம் சியாமுக்கு மாசம் 15,000தான் வரதுன்னு தெரிஞ்சவுடனே மருமகளுக்குக் கொஞ்சம் ஏமாற்றமா தான் இருந்துது. ஆனா பிரச்னை ஒண்ணும் இல்ல. அவசியம் ஜாவா படிச்சே ஆகணும்னு கண்டிப்பா சொல்லிட்டா. வேலைக்கும் போய்வந்துகிட்டு ஜாவா கிளாஸ்லயும் சேர்ந்து படிக்கிறான். கம்ப்யூட்டர் படிப்பு அவசியம்னு என்னையும் படிக்கச் சொல்லி மருமகள் ஞாயிற்றுக்கிழமையில எனக்கு நெட் ஒர்க்கிங் சொல்லித் தராள். உன் கம்பெனி சென்னை பிராஞ்சில ஏதாச்சும் நெட்ஒர்க்கிங் வேலை இருந்தா என்னைச் சிபாரிசு பண்ண முடியுமா?"

எல்லே சுவாமிநாதன்

© TamilOnline.com