ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiyagarajan
குழந்தைகளே, இதோ இந்தக் கதையக் கேளுங்களேன்!
காட்டைச் சுற்றிப் பார்க்க வந்த இளைஞன் ஒருவன் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டான். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவனுக்கு நல்ல பசி வேறு. வழியில் ஒரு மாமரத்தில் நிறைய மாம்பழங்கள் இருப்பதைப் பார்த்தவன், உடனே மரத்தில் ஏற ஆரம்பித்தான். பழங்களைப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது, அவனது பாரம் தாங்காமல் கிளை முறிந்தது.
உடனே சுதாரித்துக் கொண்ட அவன் அருகே இருந்த மற்றொரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்ததில் தரை வெகு கீழே இருந்தது. குதித்தால் மிகப் பெரிய காயம் ஏற்படும் என்பதை உணர்ந்த அவன், பயந்து போய் கண்களை மூடிக் கொண்டு 'யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன்' என்று உரத்த குரலில் அலற ஆரம்பித்தான். அவன் அலறல் சத்தம் சற்று தூரத்தில் உழுது கொண்டிருந்த ஒரு விவசாயிக்குக் கேட்டது. அவன் வேகமாகப் புறப்பட்டு அங்கே வந்தான்.
மரத்தில் கண்ணை மூடிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்த விவசாயிக்கு சிரிப்பு வந்தது. அவன்மேல் ஒரு கல்லை விட்டு எறிந்தான். கல் தன்மீது பட்டவுடன் கண்விழித்த இளைஞன், 'நீ என்ன முட்டாளா, உதவி வேண்டினால் கல்லால் அடிக்கிறாயே, அறிவில்லையா உனக்கு' என்று கோபத்துடன் கத்தினான்.
விவசாயி பதில் பேசாமல் சிரித்துக் கொண்டே, மற்றொரு கல்லை எடுத்து அவன்மேல் எறிந்தான். மேலும் கோபமுற்ற அந்த இளைஞன் முயற்சி செய்து மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு, 'அடேய் முட்டாள், நான் மட்டும் இப்போது கீழே வந்தால் உன்னைச் சும்மா விட மாட்டேன் ஜாக்கிரதை' என்று எச்சரித்தான்.
விவசாயியோ மறுபடியும் சிரித்துக் கொண்டே ஒரு பெரிய கல்லை எடுத்து அவன் மேல் வீசினான். கோபமுற்ற அந்த இளைஞன் தனது உடலை எம்பி, கடும் முயற்சி செய்து மரத்தின் மீது தாவி, கிடுகிடுவெனக் கீழே இறங்கி வந்தான். விவசாயியை சரமாரியாகத் திட்டியவாறே அடிக்கக் கையை ஓங்கினான்.
விவசாயி சிரித்துக் கொண்டு, ‘அப்பா, அவசரப்படாதே. இந்தக் காட்டில் எப்படியோ மரத்தின் மீது ஏறி மாட்டிக் கொண்டு விட்டாய். அச்சத்தில் உறைந்து போய் கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தாய். பயத்தில் உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லால் அடித்ததும் பயம் மறைந்து கோபம் வந்து விட்டது. என்னை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உணர்த்துவதற்காகத் தான் நான் அப்படிச் செய்தேன். இனி எந்த விஷயத்திலும் அச்சமில்லாமல் நன்கு யோசித்துச் செயல்படு. என் பின்னால் வா, நகரத்திற்குச் செல்லும் பாதையைக் காண்பிக்கிறேன்' என்று கூறி அழைத்துச் சென்றான்.
சரி குழந்தைகளே, அடுத்த மாதம் வேறொரு கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்.
சுப்புத்தாத்தா |