உரசல், அலசல், வெடித்தல், கடித்தல்...
அன்புள்ள சிநேகிதியே,

எங்களுக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு பெண். பெரியவன் வயது 22. அடுத்து பெண் வயது 17. சின்னவனுக்கு வயது 10 ஆகப் போகிறது. பெரியவனுக்கும் அவன் அப்பாவுக்கும் எப்போதும் பிரச்சினை. பெண் பேரில்தான் பாசம், தன்னை கவனிப்பதில்லை என்பது அவன் குற்றச்சாட்டு. தன்னிடம் தப்பு இருப்பது அவனுக்குத் தெரியவில்லை. தன்பேரில் தப்பு இருப்பது இவருக்குத் தெரியவில்லை. நடுவில் நான் மாட்டிக் கொண்டு திண்டாடுகிறேன். அவன் காலேஜ் போகும்போது அதிகம் மார்க் வாங்கவில்லை என்பதனால், இவர் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் அவனுக்குப் பிடிக்காத இடத்தில் படிக்க வைத்து விட்டார். இவர் சொல்லும் காரணம், ‘ஏற்கனவே அவன் கெட்டுப் போய்விட்டான். கண் எதிரில் இருந்தால்தான் கண்காணிப்பு இருக்கும், அதனால்தான் அப்படிச் செய்தேன்' என்கிறார். ‘உனக்கு ஒன்றும் இதில் பொறுப்பு இல்லையா?' என்று கேட்கிறீர்களா? பொறுப்பு இருந்து என்ன செய்வது. இங்கே வந்து வேலை செய்யவில்லை. படிக்கவில்லை. ஆகவே, எனக்கு ஒன்றும் தெரியாது (சமையலைத் தவிர) என்பது இவர் எண்ணம்.

##Caption## அப்பாவுடன் கோபித்துக்கொண்டு தனியாகத் தங்கி, தானே இரண்டு வேலை பார்த்து, படிப்பை முடித்து விட்டு வேலை பார்க்கிறான். தனக்குத் தோன்றும்போது வீட்டுக்கு வந்து தலைகாட்டி விட்டுப் போவான். எங்களுக்கு அவ்வளவு பணவசதி கிடையாது. ஆகவே பெண் பொறுப்பாக அங்கே, இங்கே வேலை பார்த்து, படித்து, நல்ல காலேஜ் போக வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறாள். ஆனால், அவளும் ரொம்ப 'இண்டிபென்டன்ட்'. தனக்குத் தோன்றியதைத்தான் செய்வாள். இவரும் விவாதம் பண்ணிவிட்டுப் பேசாமல் அவள் வழியிலேயே விட்டு விடுகிறார். ஏதோ உருப்படியாகப் படிக்கிறாளே என்று அதிகம் அவள் விஷயத்தில் நானும் தலையிடுவதில்லை.

போன சனிக்கிழமை நண்பர்கள் யாருடனோ வெளியே செல்லத் தீர்மானம் செய்திருந்தாள், 'sleep over party'. மறுநாள் திரும்பி வருவதாகச் சொல்லி அவள் கிளம்பிக் கொண்டிருக்கும் போது, பையன் திடீரென்று வந்தான். அவர் வெளியில் கடைக்குப் போயிருந்தார். 'Driveway'ல் என்ன சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஒரே சத்தம். வெளியில் எட்டிப் பார்த்தபோது தான் இவன் வந்திருப்பது தெரிந்தது. நான் போய் உள்ளே வந்து சண்டை போடும்படிச் சொன்னேன். 'இவன் யார் என்னை பார்ட்டிக்குப் போகக் கூடாது என்று சொல்ல. இவன் எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸூடன் ஊரைச் சுற்றினான் என்று உனக்குத் தெரியுமா?' என்று இவள் கத்தினாள். ‘நீ ஒரு அம்மாவா, அவள் கண்டபடி இரவில் வெளியே தங்குகிறாள். அவள் ஃப்ரெண்ட்ஸ் க்ரூப் சரி இல்லை. எங்கே போகிறாய் என்று கேட்டால் உண்மையைச் சொல்வதில்லை. நீ எப்படி இதற்கெல்லாம் சம்மதிக்கிறாய்' என்று இவன் என்னிடம் கத்தினான். அதற்குள் இவர் வந்துவிட, சண்டை இன்னும் பெரிதாகி அப்பாவும், பிள்ளையும் அண்ணனும் தம்பியும்போல மோதிக் கொண்டார்கள். ‘என் பெண்ணை நான் நம்புகிறேன். அவளுக்கு பெர்மிஷன் கொடுத்து விட்டேன். நீ என்ன பெரிதாகச் செய்து விட்டாய், அவள் விஷயத்தில் தலையிட?' என்று இவர் கத்தினார். ‘உங்களுக்கு வெளியுலகம் பற்றித் தெரியவில்லை. அவள் எப்படி அடிபட்டு வருவாள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனக்கு அந்த உரிமையில்லையென்றால் எனக்கு இங்கே இடமில்லை' என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டான் பெரியவன்.

அப்பாவுக்கும் பெண்ணுக்கு எதுவும் உறைத்ததாகத் தெரியவில்லை. எனக்குத் தான் மனசே சரியில்லை. சின்னவனும் பெரிய அண்ணாவுடன் ஏதோ கேம் விளையாட ஆசைப்பட்டுக் கொண்டிருந் தான். அவனுக்கும் பெரிய ஏமாற்றம்.

இவள் தன்பாட்டுக்குக் கிளம்பிப் போனாள். மறுநாள் வந்தாள். என்ன செய்தாள் என்பதையெல்லாம் என்னிடம் சொல்லவில்லை. நாங்களும் கேட்க முடியாது. ஒரு வாரம் ஆகியும் பெரியவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. போனையும் எடுப்பதில்லை. எனக்கு யாரை சப்போர்ட் பண்ணுவது, யாரை நம்புவது என்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. பெற்றோர்கள் வயதுவந்த பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை உங்கள் பகுதியில் எழுதுங்களேன். எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் மிகவும் வசதியாக இருக்கும்.

இப்படிக்கு
..............

அன்புள்ள சிநேகிதியே,

##Caption##எல்லாம் சரியாகிப் போய் விடும். கவலைப்படாதீர்கள். எல்லோருக்குமே தாம் பிறர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்கிறோம் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால் பிறர் அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்ற நினைப்பும் இருக்கிறது. அதுவும் ஒரு வயதுவந்த சகோதரன் தன் சகோதரிகளைப் பற்றிச் சிறிது ‘over protective' ஆகத்தான் இருப்பான். தான் மற்ற பெண்களைப் பார்ப்பது போலத்தானே, மற்றவர்கள் தன் சகோதரியைப் பார்ப்பார்கள் என்ற எண்ணம் தான். இதில் பாசம், பொறுப்பு, கண்டிப்பு, கட்டுப்பாடு எல்லாமே கலந்துதான் இருக்கும். மற்ற சமயத்தில் பொறுப்பைக் காட்டாமல் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தன் கண்டிப்பைக் காட்டினால், சகோதரிக்கு எரிச்சல் வருகிறது. இதுபோல சச்சரவுகள், சண்டைகளுக்கு ஒரு ஆரோக்கியமான கோணமும் உண்டு. ஒவ்வொருவருடைய மனச்சாட்சியையும் இது உசுப்பி விடும். இப்படிப் பேசி விட்டானே/விட்டாளே என்று உள்ளுக்குள் குமைந்தாலும், நாம் இப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாதோ என்று நமக்குள் ஒரு சந்தேகமும் உடன் இருக்கும். மறுமுறை, இதே சந்தர்ப்பத்தில் இந்த நடத்தையைத் தவிர்த்து வேறு விதமாகத் தீர்க்க வேண்டும் என்று முடிவெடுப்போம். ஆனால், இது வேறு விதமான சச்சரவில் கொண்டு வந்து நிறுத்தும். எந்தக் குடும்பத்துக்கு, எந்தக் குழந்தைக்கு எப்படி உறவை வலுப்படுத்துவது என்பதற்கு ஒரே அளவுகோலை உபயோகப்படுத்துவது சிரமம். நாகரிகம் என்ற பெயரில் புன்னகையை இருத்திக்கொண்டு உள்ளுக்குள் புகைந்து கொண்டு, எரிமலையை ஒருநாள் கக்கவிடுவதை விட, அவ்வப்போது பேசித் தீர்த்துவிடுவது நல்லது என்று நினைப்பவள் நான். ஆனால் மற்றவருக்கும் அதேபோல மனநிலை இருந்தாலொழிய, பிரச்சனை தீராது.

ஒன்றுமட்டும் சொல்கிறேன். மனம் திறந்து பேசும்போது, குழந்தைகள், நண்பர்கள் ஆகி விடுகிறார்கள். அவர்கள் மனம் திறந்து பேசும்போது, அவர்கள் நிலையில் நம்மை நிறுத்தி, எங்கே தவறு செய்து விடுவார்கள் என்று நினைக்கிறோமோ அங்கே எச்சரிகையுணர்வைக் கொடுக்கவேண்டும். அவர்கள் வாழ்க்கையை நாம் நடத்த முயலக் கூடாது. அப்போதுதான் அவர்கள் உலகத்துக்கு நம்மை அழைத்துப் போவார்கள். நாமும் நம் அனுபவத்தை, அறிவுரையைச் சொல்ல முடியும். நமக்கு இந்தக் கலாசாரம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. காரண, காரியங்கள், விளைவுகள் எல்லாம் புரிபடுகிறது. ஆனால், அதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. கொஞ்சம் negotiation செய்யத்தான் வேண்டியிருக்கிறது. உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, உங்கள் மகன் பதிலளிக்காவிட்டால் பரவாயில்லை. தொடர்ந்து அவ்வப்போது ‘போன்' செய்யுங்கள். ‘ஏன் கோபித்துக் கொண்டிருக்கிறாய்...' என்று தர்க்க, நியாயம் பேசாமல், ‘நீ நன்றாக இருக்கிறாய் என்று நினைக்கிறேன். இது உன் அம்மா...' என்பது போன்ற செய்திகளை விட்டுப்பாருங்கள். ‘இன்னுமா கோபம் தீரவில்லை...' என்றெல்லாம் பேசினால், மறந்துபோன சண்டையைக் கூட அது ஞாபகப்படுத்தி விடும்.

இன்னும் ஒன்று நான் சொல்ல விரும்புவது -சண்டை என்று நான் சொல்வது ஒருவருக்கொருவர் குத்திக் கிளறி அசிங்க வார்த்தைகளால் காயப்படுத்துவது அல்ல. அப்படியே இருந்தாலும் இது குடும்பம். இங்கேதான் நாம், நாமாக இருக்க முடியும். இது கோர்ட் இல்லை. வார்த்தைகளை அளந்து பேச. வெளியிடம் இல்லை புன்னகையை மேக்-அப் ஆகப் போட்டுக் கொள்ள. அவ்வப்போது உரசல், அலசல், வெடித்தல், கடித்தல் எல்லாம் குடும்பத்தில் இருக்கும். Just move On.

வாழ்த்துக்கள்!
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com