எஸ். ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸா ஜென் ஆகிய பல புனைபெயர்களில் சுப்பிரமணியன் ரமேஷின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. சிறுகதை, குறுநாவல், கவிதை போன்ற பல தளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் இயங்குபவர் இவர். இவரது படைப்புகள் தினமணி கதிர், ஆனந்த விகடன், கணையாழி, காலம், காலச்சுவடு, உயிர்மை, மகிளா ஜாக்ரதி (கன்னடம்), புதிய பார்வை, வல்லினம், தமிழ் முரசு, தமிழ் அரசி ஆகிய பத்திரிகைகளிலும், திண்ணை, வார்ப்பு, திசைகள், பதிவுகள், மரத்தடி போன்ற இணைய இதழ்களிலும், பிரசுரம் கண்டுள்ளன. 1980ல் குமுதத்தில் முதல் ஜோக், 1982ல் ஜூ.வி. விஷுவல் டேஸ்ட் மிர்ரரில் முதல் புகைப்படம், 1989ல் ஆனந்த விகடனின் முதல் சிறுகதை, புதியபார்வை யில் முதல் கவிதை, கணையாழியில் முதல் குறுநாவல், புதிய பார்வையில் முதல் ஓவியம் என்றே இவரது பயணத்தின் துவக்கங்கள் அமைந்துள்ளன.
சமீபத்தில் வல்லினம் (காலாண்டிதழில்) செப்-டிச 2008, 'கண்டடைதல்' என்ற சிறுகதையில், ரமேஷ் தத்துவார்த்தமானதொரு மொழிச்சோதனை செய்திருந்தார். அதே வேளையில் மொழி கடினப்படவுமில்லை. பணியிடத்தில் எதிர்கொள்ளும் சவால்களை ஒரு ஆணின் இடத்திலிருந்து சொல்லிக் கொண்டு வரும் கதை. கதாநாயகன் தன் மகளுடன் விலங்கியல் பூங்காவில் துருவக் கரடியின் மெய்ப்பாடுகளை அவதானித்தபடி தன்னை அந்த விலங்குடன் ஒப்பிட்டுக் கொள்கிறான். கரடியின் ஒவ்வொரு வலியையும் அசைவையும் சொற்ப உணவுக்காக தன் வலுவையும் மறந்து அது போடும் கூழைக் கும்பிடாகப் பார்க்கிறான். இந்த நொடியில், சட்டென்று அங்கே பார்க்க ஒன்றுமில்லை என்றெண்ணி இடத்தை விட்டு நகர்ந்து விடுவான். தன்னையே பார்த்த உணர்வை அவன் அனுபவித்துவிடுகிறான். வாழ்க்கையில் இதுதான் பாதை என்று நிர்ணயித்துக் கொண்டு செல்ல விழைவதை விடவும் செல்லும் வழியெல்லாமே பாதைதான் என்பதைச் சொல்லித் தன் சிறுகதையை முடித்திருப்பார்.
1966ல் இருந்து இவர் ஓவியத் துறையில் இடைவிடாது தொடர்ந்து இயங்கி வருபவர். இவரது ஓவியங்கள் தமிழகத்திலும், சிங்கப்பூரிலும், தனிநபர் கட்சிகளாகவும், குழுக் காட்சிகளாகவும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சில ஓவியங்கள் புதிய பார்வையில் அட்டைப்படமாகவும், கிரீஷ் கர்னாடின் 'நாகமண்டலா' (தமிழாக்கம்) உட்பட அட்டைப்படங்களாகவும், புதிய பார்வை, காலச்சுவடு, தமிழரசி போன்ற இதழ்களில் கோட்டோவியங்களாகவும் இடம் பெற்றுள்ளன.
எழுதும் முறையில் தனக்கு இருக்கும் கேள்விகள் தன்னை எழுதவிடாமல் செய்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார். பத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளும் குறுநாவலும் ஒரு வருடத்திற்குள்ளாகவே பிரசுரம் ஆன பின்னர் எழுதுவதையே நிறுத்திவிட்டு, மறுபடி சிங்கப்பூர் வந்த பின்னர் எழுதிக் கொண்டிருக்கிறார். எழுதாத போது படிப்பது, நாடகம் போடுவது ('அய்க்யா' என்றொரு நாடகக்குழுவில் இணைந்து 'குட்டி இளவரசன்', காஃப்காவின் 'விசாரணை', ப்ரியா டெண்டுல்கர், பாதல் சர்க்கார், பாலகுமாரனின் சேவல் பண்ணை) இவரது ஈடுபாடுகளில் ஒன்று.
ஓவியம், புகைப்படம் ஆகியவைகளோடு, கடம் வினாயக்ராமின் தம்பி குருமூர்த்தியிடம் இரண்டு வருடகாலம் வயலின் கற்றுக் கொண்டதும், சிங்கப்பூரில் ராதா விஜயனிடம் கீ-போர்டு கற்றுக்கொண்டதும் உண்டு.
##Caption## தி.ஜா நினைவுக் குறுநாவல் திட்டத்தில் இவருடைய 'வலியுணரும் தந்திகள்' பரிசு பெற்றது. தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் 'தங்கமுனைப் பேனா விருது' போட்டியில் சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றிருக்கிறார். அதே போட்டியில் 2003ல் ஆறுதல் பரிசையும் 2005ல் மூன்றாவது பரிசையும் கவிதைக்காகப் பெற்றார்.
பத்தாண்டுகளாகச் சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இவர் வேலூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முன்பு சென்னையில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்காலங்களில் சிறுபத்திரிக்கை உலகில் இயங்கிய அனுபவமும் உண்டு. இவரது மனைவி ஷீலாவும் ஒரு கட்டடக் கலைஞர், சிறந்த ஓவியரும்கூட. ஒன்பது வயது சிநேகா, நான்கு வயது சஞ்சனா என இரு மகள்கள் இவருக்கு.
இறைமையை எழுத்தாக்க விழையும் இவர், எழுத்தின் சாத்தியப்பாடுகள் மீது தனக்கு இருக்கும் ஐயங்கள் தன்னை எழுத விடாமல் செய்து கொண்டிருப்பதாகக் கருதுகிறார். எழுத்து தன் தேடல், தன் அடையாளம், தின வாழ்வில் நசுங்கிப் போயிருக்கும் தன் மனசாட்சியின் குரல், மரணத்தை வெல்லும் வழி, இறைவனாக ஒரு செயல், இப்போதைய உலகினை சற்றே நேர்படுத்தத் தன்னையும், சமூகத்தையும் சற்றே விசாலப்படுத்தும் ஒரு கருவி இப்படியாக எழுத்துக்கும் தனக்கும் உள்ள உறவை பாவித்துக் கொள்வதினிலும்... கட்டற்ற துள்ளலில் பல்பம், கரி, பென்சில் இப்படி அகப்பட்டவற்றைக் கொண்டு, சுவர், தாள் என அகப்பட்டவற்றில் கிறுக்கி வரைந்து அந்த லயிப்பிலேயே தூங்கிப் போய்விடுவதுமான சிறுவனின் மலர்வினை ஒத்த படைப்புக் கணங்கள் வாய்க்கையில் கிடைக்கும் அபூர்வ மகிழ்ச்சித் தருணங்கள் தனக்கு உவப்பானதெனக் கூறுகிறார். மேலும் இவர் விழிப்புணர்வோடு வாழ்வினை அணுகும்போது அனுபூதியாய் வாய்ப்பதை எழுத்தாக்குவதையே உன்னத எழுத்தென்றும், அதற்கான விழைவே தன் படைப்பின் இலக்கு என்றும் கூறுகிறார்.
"இறைவனது படைப்பில் ஒற்றைத்தன்மையோடு எதுவும் இல்லை, எழுதுவது எதுவாக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் மனதிற்கு உகந்ததாக இருக்க வேண்டும்; உங்களுக்கும், உங்களின் அன்புக்குரியவர்களுக்கும் வேண்டாம் என்ற எதையும் எதற்காகவும் நீங்கள் மற்றவர்க்குத் தரலாகாது. நீங்கள் தரும் எது குறித்தும், அவை மற்றவர்களின் வாழ்வினில் விளைவிக்கும் வினை குறித்த பொறுப்புணர்வு வேண்டும், இந்தப் பெரிய அலகிலா விளையாட்டில் உங்களின் பங்கைப் பொறுப்புடன் விளையாட வேண்டும்" என்பார் ரமேஷ். அறிவு, சிந்தனை, வார்த்தைகள், எல்லாமே வெறும் எண்ணங்கள், மனதின் கூச்சல், இவை அனைத்தும் அகங்காரத்தைத் தம் மூலமாகக் கொள்பவை; மௌனத்தின் முன் கரைந்து போகக் கூடியவை; இலட்சியங்களும், கொள்கைப் பிரகடனங்களும் தன் இலக்கல்ல என்றும், மௌனத்தை கைக் கொள்வதே தன் இலக்கெனவும் நம்புகிறார். மௌனமாய் இருப்பதென்பது மௌனத்தைக் குறித்து எழுதுவதோ, பேசுவதோ, எண்ணுவதோ அல்ல. விழிப்புணர்வோடு மௌனத்தில் ஆழ்வது. அப்படியான ஒரு நிலையில் படைப்பது சாத்தியமா? (வியாசன், அரவிந்தர், அருணகிரி, வள்ளலார், சித்தர்கள், லா-வோ-ட்சூ, சூஃபிகள்) அப்படி சாத்தியமென்பதோ, சாத்தியமில்லை என்றோ இப்போது முடிவாக அடைய முடியுமானால், முடிவை சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று ஆகிறது. மேலும் எண்ணங்களற்று முடிந்தால் அது யார் எழுதிய எழுத்து என்பதே தன்னை அலைக்கழிக்கும் தற்போதைய கேள்வி? என்பார்.
ஜெயந்தி சங்கர் |