தென்றல் பேசுகிறது
'மாற்றம்' என்ற மந்திரச் சொல்லைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபர் மாளிகையில் நான்காண்டுகள் வசிக்கும் நல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் பராக் ஒபாமா. அவருடைய பதவியேற்பு வைபவத்தை உலகெங்கிலுமிருந்து மக்கள், டி.வி.யில் பெரும் எண்ணிக்கையில் பார்த்திருக்கிறார்கள், ஒலிம்பிக்ஸ் பார்ப்பது போல. அத்தனை ஆர்வத்தை அவரது வெற்றி கிளப்பிவிட்டிருக்கிறது. அவரிடமிருந்து எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். உலகமே பொருளாதாரச் சரிவின் கைப்பிடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, இவர் கொண்டு வருவாரா அந்த மாற்றத்தை என்று ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் அச்சம் கலந்த ஆவலோடு எதிர்பார்க்கிறான். ஒபாமாவின் பதவியேற்புரை அதன் சொல் வளத்துக்கு மட்டுமல்லாமல் கருத்து வளத்துக்கும் சிறப்புப் பெற்றுள்ளது. அவர் பெற்ற வெற்றிக்கு அவரது நாநலமும் ஒரு காரணம் என்பதை மீண்டும் அது நினைவுறுத்தியது. பொதுவாகவே அரசியல்வாதிகள் நாநலத்துக்குப் பெயர் பெற்றவர்களாகத் தான் இருப்பார்கள். பதவி ஏற்றபின் தாம் கொடுத்த வாக்குறுதிகளை 'செலக்டிவ் அம்னீஷியா'வில் விட்டுவிடாமல் இருக்கிறார்களா என்பதில்தான் அவர்களது மெய்யான மேன்மை தெரியும். அந்தச் சவால் ஒபாமாவுக்கும் உண்டு.

எண்ணிக்கையில் மிக அதிகமான திரைப்படங்களைத் தயாரித்தாலும் இந்தியப் படங்கள் உலகின் கவனத்தை அதிகம் கவர்ந்ததில்லை. ஆனால் Slumdog Millionaire இந்தச் சரித்திரத்தை மாற்றி எழுதிவருகிறது. ஒரு சேரிப்பிள்ளையை 'சேரிநாய்' என்று கூறலாமா என்று மும்பைச் சேரிவாசிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்துக் கடவுள் அதிலே இழிவு படுத்தப்பட்டிருக்கிறார் என்று ஒரு சாரார் கருதுகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு அமைத்துள்ள இசையைவிடச் சிறப்பாக முன்னரே அமைத்ததுண்டு, ஆனால் இது 'ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்' நிறுவனத்தின் இந்தியக் கரம் எடுத்ததாலும், இதன் இயக்கத்தை ஓர் அமெரிக்கர் செய்திருப்பதாலேயுமே இதனை அமெரிக்க விருதுகள் தேடி வருகின்றன என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். இந்தியா என்றாலே வறுமை, கொடுமை, மதக்காழ்ப்பு என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது, இந்தியாவின் பிம்பத்தை உலகத்தின் கண்களில் உயர்த்திப் பிடிக்கவில்லை என்கிறார்கள் ஒரு சாரார். ஏன், இந்தியாவைப் பற்றிய உண்மைகளைச் சொல்லும், சொன்னால் ஏற்கும் தைரியம் வேண்டும் என்று மறுத்துரைக்கிறார்கள் இன்னொரு சாரார். இவ்வளவுக்கும் நடுவே கோல்டன் குளோப் பரிசுகளைக் கையில் ஏந்தியபடி, ஆஸ்காரின் வாயிற்படியில் கால் வைத்திருக்கிறது 'ஸ்லம்டாக் மிலியனேர்'.

ஜெயகாந்தனுக்கு பத்மபூஷண் விருதைக் கொடுத்து இந்திய அரசு கௌரவித்துள்ளது. ஐஷ்யர்வா ராய், விவேக் ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள். தம் துறையின் சிகரங்களைத் தொட்டவர்கள், சாதித்தவர்கள் ஆகியோரே பத்ம விருதுகளைப் பெறுவர் என்பது நல்ல பாரம்பரியம். ஆனால் இன்னும் அப்படி எதுவும் செய்து விடாத இவர்களுக்கு ஏன் கிடைத்துள்ளது என்று மிகப் பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஏனைய, தகுதியுள்ளவர்கள் பெற்ற விருதுகளுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதென்று கருதுவோர் இல்லாமலில்லை.

முதுபெரும் எழுத்தாளரும், சாகித்ய அகாதமி உட்படப் பெரும் கௌரவங்களைப் பெற்றவருமான அசோகமித்திரனின் விறுவிறுப்பான நேர்காணல் இந்த இதழின் சிறப்பு அம்சம். ஏ.ஆர். ரஹ்மான் குறித்த சிறப்புப் பார்வை, ஒபாமாவின் பதவியேற்பு குறித்த கட்டுரை, ஆங்கிலப் புதின எழுத்தாளர் இந்து சுந்தரேசன் நேர்காணல், அறிமுக எழுத்தாளர் இளங்கோ மெய்யப்பனின் கதை என்று ஒரு புதிய தோற்றத்தோடு இந்த இதழ் வருகிறது. ஏற்றம் வேண்டுமென்றால் மாற்றம் தவிர்க்க முடியாதது அல்லவா? உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, எது, ஏன் என்று எங்களுக்கு எழுதுங்கள்.

வாசகர்களுக்கு வாலன்டைன் நாள் வாழ்த்துக்கள்!


பிப்ரவரி 2009

© TamilOnline.com