ஈஷா யோகா அறக்கட்டளை சார்பாக டென்னஸியில் நிர்மாணிக்கப்பட்ட மஹிமா தியான மையத்தின் திறப்பு விழா நவம்பர் மாதம் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. 'கான்ஸெக்ரேடிங் தி ஸீட் ஆஃப் கிரேஸ்' எனப் பெயர் சூட்டப்பட்ட இவ்விழாவில் சுமார் 600 உறுப்பினர்களும், 120 விருந்தினர்களும் பங்கேற்றனர்.
இரண்டு மில்லியன் டாலருக்கும் அதிகச் செலவில், இரண்டு மாதங்களில் முடிக்கப்பட்ட மஹிமா தியான மண்டபம், 39000 சதுர அடி கொண்டதாகும். 70 அடி உயரக் கூரையும், 225 அடி நீளமுள்ள தளமும் கொண்ட இதன் நடுவில் தூண்களோ, குறுக்குச் சுவர்களோ ஏதும் கிடையாது.
நவம்பர் 8ம் தேதி காலை குருபூஜையுடன் விழா தொடங்கிற்று. பின் ஆடவர் ஒரு புறமும், பெண்கள் மறுபுறமும் அமர, 'சத்குரு'வின் கையெழுத்தில் எழுதப்பட்ட தியான மந்திரத்தின் பிரதிகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு, மதியம் வரை மந்திர உச்சாடனம் நடைபெற்றது. இடையிடையே சத்குருவின் ‘லிங்க பைரவி'யும் ஒலிபரப்பப்பட்டது.
மதியம் சத்குரு அவர்கள் தாமே மேடையில் வந்தமர்ந்து தனது பரிவாரங்கள் கொடுக்கும் மூலிகைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்த வண்ணம் இருந்தார். பின்னர் சத்குரு மந்திரத்தைச் சொல்ல, கூடியிருந்த அனைவரும் அதை உச்சரிக்கத் தொடங்கினர். வியக்க வைக்கும் ஆன்மிக அலைகளை அங்கு உணர முடிந்தது.
இறுதியில் மேடையின் நடுவே ஒரு கிரானைட் கல் வைக்கப்பட்டு, சத்குரு அங்கு கூடியிருந்த அனைவரையும் அதனைத் தொடச் செய்தார். பிறகு சத்சங்கம் தொடங்கியது. சத்குரு தமது சமீபத்திய கைலாஷ்-மானசரோவர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 'மஹிமா'வைப் பற்றிப் பேசும்போது, அது ஒரு அமைதியான சக்தி என்றும், சாம்பவியைப் போன்றது என்றும், வடநாட்டுக் கலாசாரத்திற்குப் பெரிதும் ஏற்றது என்றும் கூறினார். ஒவ்வொருவரும் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும் என்றும், அதற்கான செயல்பாட்டிற்கான தருணத்தை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். கிரஹஸ்தர்களாக இருந்தாலும், வீட்டை ஒரு ஆசிரமம் போல பாவிக்க வேண்டும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
9ம் தேதி காலை பஜனைக்குப் பின் சத்குருவுடன் கேள்வி-பதில் தொடங்கியது. 'நம்மைச் சுற்றிலும் உள்ள பொருள்கள் ஒன்று, மற்றொன்றாக உருமாற்றம் அடைந்து வருகிறது. மண்ணை உணவாக மாற்றுவது விவசாயம். உணவை மனிதனாக மாற்றுவது ஜீரணம். மனிதனை மீண்டும் மண்ணாக மாற்றுவது மரணம். மனிதன் ஆன்மீகப் பாதையில் செல்ல விரும்புவதே, இல்லாத பொருளின் ஸ்பரிசத்தை அவன் மனம் நாடிச் செல்வதன் ஏக்கம் தான்' என்றார் சத்குரு.
மஹிமாவை தாயின் கருவிற்குச் சமமாக ஒப்பிட்ட அவர், அம்மண்டபத்தை எப்படி உபயோகிப்பது என்ற கேள்விந்த் தனது பக்தர்களே ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். மறக்க இயலா ஆன்மீகப் புத்துணர்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.
தமிழில்: காந்தி சுந்தர் |