டிசம்பர் 13, 2008 அன்று தங்க முருகன் திருவிழா சிகாகோவில் உள்ள லெமாண்ட் ஆலயத்தின் சாமா ரதி அரங்கில் கொண்டாடப்பட்டது. காலையில் முருகனுக்குச் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டன. பிறகு உற்சவமூர்த்தி விழா மேடைக்கு பவனி வந்தமர்ந்தார். விழாவை சிகாகோ பல்கலைக் கழக அறுவைசிகிச்சைப் பேராசிரியர் டாக்டர் ஜீவானந்தம் வள்ளுவன் தொடங்கி வைத்தார்.
பாட்டு பேச்சு நடனம் என்று பல்சுவை நிகழ்ச்சிகளில் சுமார் 203 குழந்தைகள் பங்கேற்றனர். கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் எழுதி, இயக்கிய 'ஞானப்பழம்' என்ற சிறு நாடகமும், பூமா சுந்தரின் 'சுட்ட பழமா, சுடாத பழமா' நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.
சிகாகோவிலிருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் நடனக் கலைஞர்கள் பங்கேற்க வந்திருந்தனர். டெட்ராய்ட்டிலிருந்து வந்திருந்த திருமதி வெங்கடலக்ஷ்மி அவர்களின் நடனக் குழுவில் காவடி ஆட்டம் குறத்தி ஆட்டம் ஆகியவற்றை ஆடிய 8 வயது ஸ்ம்ருதி பாலாவைப் பாராட்டாதவர் இல்லை. திருமதி ஆனந்தி ரத்தினவேலு 'கந்தரனுபூதி' என்ற தலைப்பிலும் கவிமாமணி இலந்தை இராமசாமி 'முருகனும் தமிழும்' என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினர்.
'லிட்டில் முருகா' நிகழ்ச்சியில் ஏராளமான லிட்டில் முருகர்கள் மேடைமேல் தோன்றி மனதைக் கவர்ந்தனர். இதுவே நிகழ்ச்சியின் சிகரம் என்று கூறலாம். திரு கோபால கிருஷ்ணன் அவர்களும், விழாக் குழுவினரும் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். பாரதி கூறிய 'தெய்வநாளாக இந்நாள் அமைந்திருந்தது.
கவிமாமணி இலந்தை இராமசாமி |